அகில இந்திய வானொலிக்காக பாரதியின் பாடல்/முபீன் சாதிகா

அகில இந்திய வானொலிக்காக பாரதியின் பாடல்களில் ஏதாவது ஒன்றைக் குறித்து பேசச் சொன்ன போது பேசியது….

………………..

பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும்வடம் நீ எனக்கு
புது வயிரம் நான் உனக்கு
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு
வெண்ணிலவு நீ எனக்கு
மேவு கடல் நான் உனக்கு
பண்ணு சுதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
வீசு கமழ் நீ எனக்கு
விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு
பேணுமொழி நான் உனக்கு
காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
வித்தையடி நான் உனக்கு
நல்ல உயிர் நீ எனக்கு
நாடி உயிர் நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நான் உனக்கு
தாரையடி நீ எனக்கு
தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு
வெற்றியடி நான் உனக்கு
………

பாரதியை வாசிக்கும் போது பல வரிகள் எழுச்சி ஊட்டக்கூடியனவாக இருக்கும்.
அவற்றில் கண்ணம்மா என் காதலி என்ற பாடலில் அமைந்த பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு என்ற வரிகள் எப்போதுமே எனக்கு படைப்பாக்கத்தில் மிக முக்கியமான அம்சத்தை நினைவுறுத்துவதாகவே இருந்திருக்கின்றன.

சொன்மை-பொருண்மை எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டது போன்ற ஓர் அம்சத்தை இந்த வரி விளக்குவதாகவே எப்போதும் தோன்றியிருக்கிறது.

விழியும் ஒளியும் பிரிக்க முடியாதவை.
விழிக்குத் தேவை ஒளி
அப்போதுதான் பார்க்கும் செயல்பாடே நடக்கும்
ஒளியின் மூலமாகத்தான் விழியின் புலணுர்வே புலப்படும்.

அத்தகைய விழி-ஒளி என்பதில் எது சொல் எது பொருள் என்று பிரித்தறிய முடியாத நுட்பத்தை இந்த வரிகளுக்குள் பாரதி பாடியிருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பிரிக்க முடியாததைப் பிரித்தல் மற்றும் கூடி இருப்பதைப் பிரித்தல் என்ற பொருளில் இந்தப் பாடல் முழுக்க வரும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை உற்று கவனிக்கவேண்டிய அவசியமிருக்கிறது.

ஒளி-விழி
மது-தும்பி
வீணை-விரல்
வடம்-வயிரம்
மழை-மயில்
பானம்-பாண்டம்
வாசம்-மலர்
பொருள்-மொழி
காதல்-காந்தம்
வேதம்-வித்தை
உயிர்-நாடி

இதுபோன்ற மற்ற இணைகளும் இதே போன்ற பிரிக்க முடியாதவைகளாவும் கூடி இருப்பவைகளாகவுமே இருப்பதை எப்போதும் ஊன்றிப் படித்தால் புரிந்துகொள்ள முடிகிறது.

நான்/நீ என்ற இரு சொற்களை விளக்க வரக்கூடியவையாகவே இந்த இணைகள் இருப்பதும் ஒரு பெரும் திறப்பைத் தருவதை உணரமுடியும்.

நான்/நீ என்ற தன்னிலை/மற்றமைக்கான வேறு சொற்களாக, பொருள்களாக இருப்பதுதான் இதில் இருக்கும் சூட்சுமம். அல்லது இது சுயத்தின் பிரதிபலிப்பு என்றே இது தோன்றுகிறது.

மேலும் லக்கான் என்ற பிரெஞ்சு உளவியல் தத்துவவாதி சொன்ன Self and the Other என்ற தத்துவத்திற்கான உதாரணமாக இந்த வரிகள் உள்ளன.

நான் என்பது மற்றமையால் விளக்கமடைகிறது என்று அந்த உளவியல் தத்துவவாதி சொன்னது இந்த வரிகளுக்கு எப்படி பொருந்துகிறது என்பதுதான் இந்த வரிகளை வாசிப்பதில் இருக்கும் இன்பம்.

அது தவிர இறைவனை மற்றமையாகக் கொள்வது என்பது பக்தி இலக்கியக் காலகட்டத்திலிருந்து தமிழ் இலக்கியங்களில் பின்பற்றக்கூடிய அம்சமாக இருந்திருக்கிறது. இங்கும் கண்ணனை கண்ணம்மா என விளித்து இறையை மற்றமையாக்கிப் பாடிய பாடலாக இது இருப்பதைக் கவனிக்கவேண்டும்.
அதனை பாரதி எளிமையான ஆனால் நுட்பமான இணைகளால் பக்தி என்பதைவிட பேரன்பு சார்ந்த பண்பை விளக்க இந்த வரிகளை எழுதியிருப்பது வாசிப்பின் இன்பத்தை மேலும் கூட்டுவதை இங்குக் குறிப்பிடவேண்டும்.

எனவே ’பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு’ என்பது இறைக்கு மட்டுமல்ல இறையாக எல்லோரையும் பாவிப்பதற்கு இந்த இணை கைவருகிறது என்பதுதான் இதில் அடிநாதமாகப் புரிந்து கொள்ளவேண்டிய பொருள். பாரதியை நுட்பமாக வாசித்தால் இன்னும் பல வரிகளை இப்படி எடுத்துக்காட்ட முடியும்.