சமையலறை/வளவ.துரையன்

வாகனத்தை இயக்கும்
எரியெண்ணெய் போல
இல்லத்தை நடத்தும்
இனிதான அறை நீதான்

சற்று நீ சோம்பிவிட்டால்
சங்கடங்கள் வந்து சேரும்
வயிற்றுக்கு மட்டுமன்று
வாழ்வினுக்கும்தான்

இல்லமெல்லாம் பிறராட்சி
இருக்கிறது என்றாலும்
இல்லாளின் அரசாங்கம்
இவ்வறை தன்னிலே

உப்புபுளி காரமெல்லாம்
உன்னறையில் சமமாக
உள்ளதென்பார் அதனால் நீ
உண்மையில் சமத்துவக் கூடம்

வரும்விருந்து முகந்திரிந்து
வாடிடாமல் சிரித்திருக்க
அருமையான திட்டங்கள்
அரங்கேற்றும் அறைநீதான்

சமையலெனில்
பக்குவப்படுத்தலே
இல்லறத்தை ஒரு சீராய்
சமைத்து இருப்பதால் நீ
சமையலறை உண்மைதானே

உனைப்பற்றி எழுதுவதிலே
உளமகிழ்ச்சி அடைகின்றேன்
உன்தயவு எனக்கென்றும்
உண்மையிலே வேண்டுமன்றோ?