நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க..

“நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க…” எட்டு வயது சிறுவன் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதம்; அதிரடி நடவடிக்கை எடுத்த எம்.ஜி.ஆர்!

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-டியூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ‘எம்.ஜி.ஆரும் நானும்’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு…

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அந்த சமயத்துலயே எனக்குக் கடிதம் எழுதத் தெரியும். காரணம், எங்கள் கிராமத்தில் உள்ள பாட்டிகளுக்கு நிறைய கடுதாசி எழுதிக்கொடுத்து அந்தப் பழக்கம் எனக்கும் அறிமுகமாகிவிட்டது. என் அப்பா கூட்டுறவு வங்கியில் மேலாளராக வேலை பார்த்தார். மேலதிகாரி செய்யச் சொன்ன ஒரு விஷயம் தவறானது என்பதால் அதைச் செய்ய என் அப்பா மறுத்துவிட்டார். உடனே கோபமடைந்த மேலதிகாரிகள் என் அப்பாவை வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்துவிட்டனர். 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் என்பதால் அந்த ஊரிலிருந்தே தங்கி வேலை பார்த்த என் அப்பா, வார இறுதிநாட்களில் மட்டும் வீட்டிற்கு வருவார்.

அந்தச் சமயத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக எங்கள் ஊரில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் நிலவியது. தண்ணீருக்காக சற்று தொலைவில் இருந்த கிணற்றுக்குச் சென்று, அங்கு நீண்ட நேரம் காத்திருந்து நீர் ஊற ஊற குடத்தில் சேகரித்து எடுத்துவருவார்கள். இரவு நேரங்களில்தான் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது. அப்போதுதான் எனக்குத் தம்பி பிறந்திருந்தான். அவன், இரவு நேரம் திடீர்னு கண் விழித்து அழுவான்; அம்மாவும் வீட்டில் இல்லாததால் அவனை மீண்டும் தூங்க வைக்க எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அந்தச் சமயத்துல எங்க வாழ்க்கையே மிகவும் சிரமமாக இருந்தது.

ஒருநாள், இந்தக் கஷ்டத்தையெல்லாம் யாரிடம் சொல்லலாம் என்று நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டில் இருந்த அப்பாவின் பழைய முனை முறிந்த பேனாவை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் சென்றேன். ஒரு பேப்பர் வாங்கி, மேலே சொன்ன அத்தனை கஷ்டங்களையும் எழுதி, அதனோடு என் அப்பாவை உடனடியாக எங்கள் வீட்டிற்கு அருகிலேயே பணிமாற்றம் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து எம்.ஜி.ஆர், கோட்டை, சென்னை என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பினேன். கொஞ்ச நாட்கள் கடந்தன. வழக்கமாக வாரஇறுதி நாட்களில் வீட்டிற்கு வரும் என் அப்பா, அன்று ஒருநாள் திடீரென வீட்டிற்கு வந்தார். நான் போட்ட கடிதத்தை படித்த எம்.ஜி.ஆர், இது குறித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். அதற்கான விசாரணைக்கு அப்பாவை நேரில் வரச் சொல்லி அனுப்பிய கடிதத்தை அப்பா என்னிடம் காட்டினார்.

மறுநாள் என் அப்பா நேரில் ஆஜராகி அவர் தரப்பு விளக்கத்தைக் கூறினார். ஒரே வாரத்தில் என் அப்பாவை பழைய இடத்திற்கே பணிமாறுதல் செய்தனர். இதைவிடப் பெரிய விஷயம், நான் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எங்கள் ஊரில் நிலவிய பிரச்சனைகளெல்லாம் வரிசையாகச் சரி செய்யப்பட்டன. கிணற்றை தூர்வார வந்திருந்த ஒருவர், “நீதான் எம்.ஜி.ஆருக்கு லெட்டர் போட்டவனா”….. கிணற்றையெல்லாம் தூர்வாரிட்டோம்னு ஒரு லெட்டர் போட்டிருப்பான்னு சொல்லிட்டுப்போனார். எம்.ஜி.ஆருக்கு லெட்டர் போட்டவன்னு ஊர் முழுக்க எனக்குப் பெயர் ஆகிவிட்டது. ஒரு சாதாரண 8 வயது சிறுவன் எழுதிய கடிதம்… கடிதத்தின் உள்பக்கம் எல்லாம் மை சிந்தி பியூன் படிக்கவே தகுதி இல்லாத நிலையில் இருந்த ஒரு கடிதத்தைப் படித்து முதல்வர் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்ததெல்லாம் சாதாரண விஷயமில்லை….

நன்றி: அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்