தேன்மொழி சதாசிவம் கவிதை

பீரோவின்
உள்ளறையில்
வேறேதோ தேடியபோது
கையில் வந்தது
பாட்டியின் தாலி.

பட்டுத்துணியில்
பொதிந்திருந்தது.
மஞ்சள் களிம்பேறி
நிறம் கரும்பச்சை.
இருபுறமும்
லஷ்மி காசுகள்,
குண்டு மணிகள்.

ஒரு இணுக்கு
பூ வைத்து
பாட்டியின் புகைப்படத்தில்
அதைச் சாற்றி
திவசத்தன்று
அதற்கும்
பூஜை செய்வார் அம்மா.
தீக்கங்கு.
ஜ்வாலா.
நாகத்தின் படம்.

“பெண் ஏன் அடிமையானாள்?”
இன்று
பதினேழாவதுமுறை
வாசித்தாயிற்று.
ஜில்லென்று
தண்ணீர்
நெஞ்சாங்கூட்டில்
இறங்கியபோது
மனவோரத்தில்
எழும்பியதொரு குரல்.
பாட்டி தாலி ரொம்ப அழகு இல்ல?

எது நான்?
பெரியார் வளர்த்த தேன்மொழியா?
பாட்டி வளர்த்த தேன்மொழியா?