சாளரங்கள் திறந்தே கிடக்கின்றன / அனங்கன்

அந்தப்பூனைக்கும்…எனக்கும்
வழக்கொன்றுமில்லை.
அதுவந்துபோகும் அதிகாரத்தொனிதான் பொறுத்துக்கொள்ளமுடியாததாய்
இருக்கிறது.

ஏதோ ஒருவழியில் வீட்டிற்குள்
நுழைந்து…பயமற்றுப் பார்க்கும்
பார்வையில் ஒரு அலட்சியம்
தொக்கிநிற்கிறது…

கவிஞன் உயிர்களை நேசிக்கவேண்டும்…என்ற வரையறுக்கப்பட்ட விதியில்லாவிட்டாலும்…
வன்முறையைக் காண்பிக்கும்
உள்நோக்கம் ஏதுமில்லை.

பூனைமயிர்உதிர்ந்தால் பெரும்பாவம் என்றபகுத்தறிவுக்கு ஒவ்வாத
மனைவியின்சிந்தனை என்னைப்
பயமுறுத்தவில்லை…

இருளைக்கரைத்துக் குடித்ததுபோல் இருக்கும் அப்பூனை…இனவிருத்தியை
வீட்டில்ஏதோஒருஇடத்தில் நிகழ்த்திவிட்டு….குட்டிகளுக்குப்
பால்புகட்டவருகிறது பயமற்று..

காரணம் கசிந்தபிறகு…
அதன் தாய்மைக்கு மதிப்பளித்து
என்வீட்டு சாளரங்கள் திறந்தே
கிடக்கின்றன எந்நேரமும்.