உன்னிடம் காமம் மொழிந்தது தவறா?/தேன்மொழி சதாசிவம்

ஆம்.
நான் கணவனை இழந்தவள்.
உன்னிடம் கன்னியென்று பொய்யுரைத்தேன்.
உனைக் கவர
காமவல்லி என்று
பொய்ப்பெயர் உரைத்தேன்.
ஏன்?
தாங்கொணா காதலும்
தகிக்கும் காமமும்.

“காமன் என்றொருவன் செய்யும் வன்மையை”
உன்னிடம்
கண்ணீரோடுரைத்தது பிழையா?

எனை நாணமில்லாதவள்
என்றாய் நீ.
நானெதற்கு நாண வேண்டும்?
உனை மணமுடிக்க
உன்னைக் கூடி வாழ
விருப்புற்றேன் என்றுரைக்க
நான் ஏன் நாண வேண்டும்?

பெண் காமமுரைத்தல் இழிவா?

பேச்சற்று, புன்னகையோடு
எனை நீ
புறந்தள்ளியிருக்க வேண்டும்.
அதை விடுத்து
என் மூக்கை அறுத்தது தவறு.

உனைப் பழி வாங்குவேன்.
எப்பழி வரினும் ஏற்பேன்.
என் குலம் அழியினும் முடிப்பேன்.
என் அண்ணன் இராவணன்
உன்
நிம்மதி குலைப்பான்.
இந்த சூர்ப்பனகை உன்
தூக்கம் தொலைப்பாள்.