
அத்தெருவில் அவன் நடந்து போய்க்கொண்டிருந்தான். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இதமான சூழல். அவன் மனமும் அப்படித்தான் இருந்தது. இவ்வாறு ஒரு நாள் நடந்தது என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அது அவன் வாழ்க்கையில் ஒரே முறை நடந்த ஒன்று. மறக்க முடியாதது. அவ்விடத்தில் முன்பு ஒரு நாள் அதே தெருவில் இரவில் அதே போல் அவன் நடந்து போனபோது வானத்தில் நிலவும் கூடவே வந்த நேரமும் உண்டு. பிறகு ஒரு நாள் அவன் அந்த மரத்தின் கீழ் வெள்ளை நிற சட்டை அணிந்து நின்றபடி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
பிற்காலத்தில் அவன் அதை ஒரு நினைவு குறிப்பாக ஒரு கட்டுரை போல் எழுதினான். அது இவ்வாறு இருந்தது. பின்பு தனி சுற்றுக்கு மட்டும் வினியோகம் செய்யப்படும் ஒரு பத்திரிக்கையில் அக்கட்டுரை பிரசுரம் கண்டது. வெகு நாட்களாக அக்கட்டுரையைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை. அக்கட்டுரையைப் பற்றி நண்பர்கள் மத்தியில் ஒரு விவாதத்தின் போது ஒருவன் சுட்டிக் காட்டினான். அக்கட்டுரை இவ்வாறு இருந்தது.
இக்காதல் இதுபோல் நடப்பதற்கு முன் தான், அவன் அவளை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவளுக்கு அவன் ஒரு புதிய அறிமுகம் போல் அவன் இருந்தான். அவனுக்கு அவள் ஒரு பரிசு போல் இருந்தாள். வெய்யில், மழை, நிலவொளி, பகல் பொழுது என்று எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு ஏற்றார்போல் மாறிவிடும் ஒரு அதிசயத்தை அவனும் அவளும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவள் வசிக்கும் வீட்டை நோக்கி நடக்கையில், அந்த பொழுதில் அவனும் அவளும் ஒருவருக்கு ஒருவர் அவர்கள் நினைத்தபடி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவனும் அவளும் சந்தித்துக் கொண்ட முதல் நாள், எதோ இதற்காகவே அவர்கள் காத்திருந்தது போல் உடனே நண்பர்களாயினர் பிறகு தான் அவர்கள் காதலர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். இப்படி நிறையே பேருக்கு நடந்திருக்கும் அது அவர்களுக்கும் நடந்தது.
அந்த வீட்டின் தோட்டத்திலே நிழல் பரவும் அந்த மரத்தின் கீழே இலைகள் சலசலக்கும் அந்த பகல் நேரத்தில் அவர்கள் தங்கள் ரகசியங்களை ஒளித்து வைத்தார்கள். அது அவனது வாழ்நாள் முழுவதும் அவனைச் சித்திரவதை செய்யப் போவதை அவன் அப்பொழுது அறியாமல் இருந்தான். வெய்யில் படாத அந்த மரத்தின் நிழலில் அத்தோட்டத்தின் மண்ணில் அதற்கான பாதையில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
அவன் அவளது நட்பினால் தூயவனாகவும் தைரியமானவனாகவும் ஆகிப் போனான். அதே நேரத்தில் அவன் நிலைமையைக் கண்டு மிகுந்த குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தான். எதிர்பார்ப்புடனும் நிறைந்து வழியும் மனதுடனும் அவன் அவள் வீட்டுக்குப் போவான். அவள் இருப்பாள்.அவளுடன் அவள் குடும்பமும் இருக்கும். அவன் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளது பார்வை அல்லது அப்பக்கம் ஒரு கனமான செய்தியைச் சொல்வது போல் உடல் அசைவை ஏற்படுத்தும்படி அவள் நடந்து கொண்டவளாக இருப்பது அல்லது உட்கார்ந்திருந்தவள் சட்டென்று எழுந்து ஏறக்குறைய அவனை விட்டுப் பிரிவது போல் போவது போன்ற காரியத்தால் அவனை நிலை குலையச் செய்தாள்.
அவர்களது காதல் அது. அது அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மனம் போன போக்கில், அது அவர்களுக்கு மட்டுமே என்கிற பித்து நிலையில் அதைப் பிரத்தியேகமானதாக அவர்கள் கருதும்படி அந்த காதல் நடந்துகொண்டது. அவர்களின் எந்தவிதமான சந்திப்பின் போதும் அது தோன்றுவது இயல்பானதே. உண்மையில் அக்காதலை அவர்கள் உருவாக்கினார்கள். அது அவர்களை வேவு பார்த்தது. எல்லாவற்றிற்கும் ஒரு தீவிர செயல்பாடு தேவைப்படுகிறது. அவர்கள் நம்பினார்கள் அவர்களது காதலை, பின்பு தானாகவே அது நீர்த்துப் போகும் என்பதையும் கூட. அவனை அவள் என்று யாரவது ஒருவர் சந்தித்திருக்காவிட்டால், அங்கே எதுவும் நிகழ்ந்திருக்காது. அந்த காதல் உருவாக்கியிருந்த நம்பிக்கைகள் நிஜ வாழ்க்கையில் அர்த்தமற்று இருந்தன. ஆனால் அவர்களது காதல் கற்பனைக்கு மிக அழகாகத் தோன்றியது. அவர்கள் அந்த காதலோடு இருந்தார்கள். அதைத் தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் கூட அவர்கள் பிரிந்து விட முடிவு செய்து இருக்கலாம். இருவர் காதலிப்பது பிரிவது என்பது இரண்டும் வெவ்வேறான செயல் அல்ல என்று அவர்களுக்கு உறுதியாகத் தோன்றியிருக்கலாம்.
அவளை விட்டு அவன் பிரியும் போது அவனை திடீர் என்று தாக்கிய, முடிவெடுத்தே ஆகவேண்டிய பெரும் பயத்தில் அவன் இருந்தான். அதை அவளிடம் கூறவும் முடியாது. இரண்டு பேரும் விவாதித்து எடுக்க வேண்டிய முடிவு அல்ல அது என்று அவன் நினைத்தான். அவன் தனி ஒருவனாக முடிவெடுத்து அதற்கான பழியை அவனே ஏற்கவேண்டும் என்றும் எப்பொழுதும் அக்காதலைப் போல் அது நிலைத்திருக்க வேண்டும் என்றும் இது தான் இம்முடிவுக்குச் சரியான அர்த்தத்தைக் கொடுக்கும் என்றும் அவன் நம்பினான். ஆனால் அவர்களது காதல் அப்படியே இருக்க, அவனது காதல் மட்டும் எப்படித் தோன்றியதோ அதே போல் அதேபோல் பிரிய வேண்டும் என்கிற அவனது முடிவும் இருக்கவேண்டும் என்று அவன் நினைத்தான். அவனுக்கு இது சரியான பாதை என்றும் அப்பொழுதுதான் அந்த காதல் அப்படியே அழியாமல் இருக்குமென உறுதியாக நினைத்துக்கொண்டான். எதிர்காலம் என்பது சீராக அமைய இது தான் முடிவு என்று அவன் நினைத்தான்.
அப்படி அவன் நடந்துகொண்டது இப்பொழுது சரியென அவனால் நினைக்க முடியவில்லை.
இருந்தாலும் அப்பொழுது அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவளைத் தொடர்ந்து காதலிப்பது, அவளுடன் இருப்பது இவை எல்லாவற்றையும் விட அவளை விட்டுப் பிரிவது மற்றும் அவளை விட்டுத் தனித்து இருப்பது, என்பது தான் அந்த காதலை அப்படியே என்றென்றும் காப்பதற்கு வழி என அவன் நினைத்தான். அவன் சட்டென்று விலகினான். இல்லாமலே போனான். அவனது இருப்பை அவன் மறைத்துக் கொண்டான். இதற்கெல்லாம் அவள் மௌனமாக இருந்தாள். அவள் மௌனம் அவளை அவளது பருவத்தைக் கடந்து போகச் செய்தது. அவள் திடீரென தனியாக ஒரு கப்பலில் பயணம் செய்வது போல் உணர்ந்தாள். ஆனால் அவள் மனம் கடினமாக மாறுவதை அவள் அறிந்தாள். இதற்குப் பிறகு அவள் வாழ்க்கையில் அவள் சந்திக்கும் எந்த மனிதனையும் அவள் அணுகும் முறை வேறு மாதிரியாகத்தான் இருக்கப் போகிறது. அவர்கள் பிரிந்தது சரியோ தவறோ அது நடந்து விட்டது. அது நடப்பதுக்கான உந்துதலும் சக்தியும் அந்த நேரத்தில் தோன்றி மறைந்து விட்டது. அதன் பாதிப்பை அவர்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு மனிதர்களாக ஆகிப்போனார்கள். அதே நேரத்தில் அவன் தான் இவள், இவள் தான் அவன் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவன் அவளை நினைப்பது போல அவள் அவனை நினைக்கக் கூடும். அவன் எடுத்த முடிவு அவனுக்கு எப்படி உகந்தாக இருந்ததோ அதேபோல் அம்முடிவைப் பற்றி நன்கு உணர்ந்தவளாக அவள் நடந்து கொண்டாள்.
அவர்கள் பிரிந்ததே அன்றையே நேரத்தில் நேர்ந்த அவனது பயத்தில் உண்டான விபத்து. அந்த விபத்தில் இருவரும் காணாமல் போனார்கள். அவர்களது காதல் இறந்து போனது. அது உண்மையில் இறந்து போகவில்லை. மறைந்து போனது. இதையெல்லாம் அவர்கள் வாழ்நாள் முழுக்க அறிந்திருக்கப் போகிறார்கள். இதனால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை எந்த பாதிப்பையும் அடையவில்லை. இது ஓடுவது போலவே அதுவும் கூடவே ஓடிக்கொண்டிருந்தது. இதில் பெரிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஏன் இப்படி நடந்தது என்று வருத்தப்படுவதற்கும் அர்த்தம் இல்லை. எல்லாவற்றையும் சுமந்து திரியும் இந்த வாழ்க்கை அவர்களையும் அவர்களது காதலையும் வெவ்வேறு நேரங்களில் அசைத்து அசைத்து அவர்களுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. ஒரு தொடர்பு அவர்களுக்குள் இருந்தது. அது எப்பொழுதும் இருக்கப் போகிறது. அதை அவனும் சரி அவளும் சரி மறக்கப் போவதில்லை.
என்ன மாற்றங்கள் வந்தாலும் அது அப்படியே அங்கேயே அதே இளமையுடன் அவர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கப் போகிறது.
பின்னே திடீரென்று இப்படி அவர்கள் பிரிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பிரிந்ததற்கான காரணங்கள் தெரிந்திருந்தாலும் அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பிரிந்தே விட்டார்கள். ஒன்று சேரமுடியாத ஆளுக்கொரு வாழ்க்கையை இருவர் தனித்தனியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவனொரு பக்கம் அவளொரு பக்கம் என இருந்தாலும் அவர்கள் ஒரே நகரத்தில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இருவர் மனதிலும் அந்த காதல் அப்படியே இருந்ததை போலவே அவர்கள் பிரிவதற்கான காரணமும் அர்த்தமற்று அப்படியே இருந்தது. ஆனால் அப்பொழுது அந்த பிரிவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. காரணம் அவர்களது பயமுறுத்திய எதிர்காலம் அவர்களைத் திசை திருப்பியது. அவர்கள் எடுத்த முடிவு அவர்களைப் பிரித்தது மட்டும் அல்லாமல் அவர்களைச் சிதைத்து வேறு வேறு பாதைகளில் போராடும் பயணத்தை மேற்கொள்ளவைத்தது. அவனது அர்த்தமற்ற வாழ்வின் பிரதி தான் அவளது வாழ்க்கையும் என்று நினைத்தான்… அவனுக்குச் சந்தோஷம் என்றால் அவளுக்கும் சந்தோஷம் தான்.
இருவரும் தனித்தனியே வெவ்வேறுமாதிரி இருந்துகொண்டிருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலிருந்தாலும் அவர்களை இப்பிரதியின் வழியாக நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவன் அவள் என்பது மட்டும் தான் அவர்களுக்குள் வித்தியாசம் என்றும் கூட தோன்றியது.
அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாகவும், முன்பு மனம் விட்டுக் காதலித்தவர்களாகவும் , அந்த காதலை அறிந்த நிலையில் இருவரும் பிரிந்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் முன்பின் தெரியாதவர்களாக எப்பொழுதும் இருக்க முடியாது. அவர்கள் வெவ்வேறு விதமான வாழ்க்கையிலும், தனித்தனியான குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களின் மனத்தில் அவர்கள் எதிர்மறையான பிம்பத்தில் தோன்றத்தான் செய்தார்கள்.
இப்பொழுது அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டார்கள்.
அவள் மிகுந்த ஆச்சரியத்துடன் அல்லது அப்படித் தோன்றும்படியாகவும் அவள் இருந்தாள். அப்பொழுது அவள் முகம் மற்றும் அவள் அலங்காரம், சட்டென்று அவர்களுக்கே தெரிந்த கடந்தகாலத்தைக் கடந்து வந்த பாதையில் நின்றபடி அவள் அவன் முன்னே தோன்றினாள். அந்த நிகழ்ச்சி நடந்த, அவர்கள் சந்தித்துக் கொண்ட அந்த கட்டிடம் இப்பொழுது இல்லை. அதை இடித்து விட்டிருந்தார்கள்.
“எப்படி இருக்கே, எவ்வளவு நாளாயிற்று” என்றாள்.
“இருக்கிறேன் “
கொஞ்சம் தாமதித்து, “ வருகிறேன்” என்றாள்.
அவள் சிறிது நேரம் அவனையே பார்த்தபடி இருந்தாள். அப்படி அவள் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனும் அவளைப் பார்த்தான். அவனது பார்வையை விட அவளது பார்வை சற்று கம்பீரமாய் இருப்பது போல் தோன்றியது. இப்பொழுது அவளை அவன் பார்ப்பதற்கு முன்னே அவளை அவன் பார்த்திருக்கிறான். நீண்டநாள் கழித்து அவளைப் பார்க்கும்போது சட்டென்று எதோ ஒன்று அவனுள் உடைந்து போனது. உண்மையில் அவன் எங்கே இருந்தான். அவன் அவளுக்கு முன்னே நின்றிருந்தானா,. அல்லது அவளது உள்ளத்திலா. எல்லோரும் அங்கே நடமாடிக் கொண்டிருக்கையில் அவர்கள் மட்டும் ஏன் அங்கே தனித்து, காலத்தில் மறைந்த அவர்களது உறவும் பிரிவும் இன்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கடந்த காலத்தின் பயணத்தில் எதோ ஒரு இடத்தில் அவர்கள் நிற்கிறார்கள்.
இப்பொழுது நிலைமை வேறு ஒன்றாக மாறிப்போனது. ஒன்றும் செய்யமுடியாது. அது இருவருக்கும் தெரியும். இவற்றைச் சுலபமாகக் கடந்து போகலாம். மீண்டும் அதே நிலைமை தான். அதே முடிவு தான். யாருக்குத் தெரியப்போகிறது. மீண்டும் சந்தித்தோம் என்பதே அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒன்று.
எதோ ஒரு தேவை இருந்திருக்கிறது. அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவருக்குமான தேவை மற்றும் ஆளுக்கொன்று என அவர்களுக்கான ஒரே தேவையாக அது இருக்கவில்லை. அவர்கள் சந்தித்துக் கொள்வதற்குக் காரணமானதை அவர்கள் உணரக்கூட இல்லை. அங்கே மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முன்பு நடந்ததிற்கு மாறாக வேறு மாதிரியாகப் புதிதாக ஒன்று தொடங்கப் பட்டிருக்கலாம். இதற்குப் பிறகு எப்பொழுதாவது அவர்கள் சந்தித்துக் கொள்ளலாம். அப்பொழுது அவர்களின் சந்திப்பு இதே மாதிரி இருக்காது.
அவன் அந்தகாலத்தில் நாட்குறிப்பு எழுதிக்கொண்டிருந்தான். அதை அவன் மறைக்கவேண்டும் என்று அப்பொழுது அவன் நினைக்கவில்லை. அதில் அவனும் அவளும் சந்தித்துக்கொண்ட முதல் நாளிலிருந்து எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவன் அந்த நாட்குறிப்பில் எழுதி வைத்தான். ஒருநாள் அவர்கள் சந்தித்துக்கும்போது அவன் அவளிடம் அந்த நாட்குறிப்பைக் கொடுத்து அதை அவளைப் படிக்கும்படி சொன்னான்.
அவள் அதை ஆரம்பத்திலிருந்து படிக்கத் தொடங்கி இன்று அவன் அவளிடம் கொடுத்த நாள் வரையிலான குறிப்புகளைப் படித்து முடித்தாள். படித்து முடித்ததும் அவளுக்குத் தோன்றிய முதல் எண்ணம் அவன் பல விஷயங்களை மறைத்து விட்டான் என்பதுதான். மீண்டும் அவள் அந்த நாட்குறிப்பை அங்கும் இங்கும் ஆகப் புரட்டிப் படித்தாள். அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது அவன் வேண்டுமென்றே திட்டமிட்டு சில நிகழ்வுகளை அவன் மறைத்து விட்டிருக்கிறான். அவள் அந்த நாட்குறிப்பு அவனிடம் திருப்பிக்கொடுத்து,
” அற்புதமாய், அப்படியே நடந்தவற்றை நடந்தபடி எழுதி இருக்கிறாய் ” என்றாள். அவன் எழுதாமல் விட்டதைப் பற்றியோ, அதை அவள் அறிந்துகொண்டதைப் பற்றியோ அவள் எதையும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. இப்பொழுது அந்த நாட்குறிப்பு எங்கே போயிற்று, எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
——புஷ்பால ஜெயக்குமார்
