1980-ஆம் ஆண்டு

“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி.

சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான பயணம் அது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்) செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் செய்திருந்தார்

அவருடன் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லிஸ் உடன் வந்திருந்தார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் முகமது அலிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க கூடியிருந்த மக்கள் திரளைக் கண்டு வியந்த முகமது அலி,

“என்னை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாப்பேன்” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துசண்டை போட்டி நடந்த போது சுமார் இருபதாயிரம் சென்னைவாசிகள் திரண்டிருந்தனர். முகமது அலி அரங்கினுள் நுழைந்த போது அரங்கமே கரகோஷங்களால் அதிர்ந்தது.

ஜிம்மி எல்லிஸ் உடன் மோதிய முகமது அலி சென்னையில் பயிற்சிமுறை பாக்சர்களாக இருந்த சிலருடனும் விளையாட்டாக மோதினார்.

தமிழ்நாட்டின் அப்போதைய மாநில குத்து சண்டை சாம்பியனான திருவள்ளூரை சேர்ந்த ராக்கி பிராஸ் என்பவருடனும் முகமது அலி மோதினார்.

‘முகமது அலியுடன் மோதினார்’ என்கிற ஒரே காரணத்திற்காகவே எட்டாம் வகுப்பு கூட தேறாத ராக்கி பிராஸ்க்கு தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. எக்மோர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்தார் ராக்கி பிராஸ்.

‘ஷோ பைட்’ போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்..

“எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்…?” என அலியிடம் கேட்டார்.

அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே… அது எங்கு கிடைக்கும்? ” என்றார்.

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற நம் தலைவரிடம், அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா…? அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு தகவல் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணியிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் ‘வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சோறு, மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம்’ என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

உணவு அருந்தியபின் “உணவு எப்படி இருந்தது” என தலைவர் எம்.ஜி.ஆர் கேட்டாராம்.

அதற்கு முகமது அலி, “எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக் கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்” என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போய் நின்றாராம்.

இப்படித்தான் முகமது அலியின் சென்னை விசிட் நெகிழ்வாக அமைந்தது அன்று.
மக்கள்திலகம் பிறந்த நாளான ஜனவரி 17 தான் முகமது அலிக்கும் பிறந்த நாள்.

பொன்மனச்செம்மலின் பிறந்த நாளில் பிறந்த முகமது அலி அவர்கள் திரு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று இயற்கை எய்தியதுதான் வியப்பிலும் வியப்பு…

-அகில உலக எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம்

முகநூலில் : ஆர். கந்தசாமி