கோதார் நினைவுகள்/ராஜன் குறை

தீவிர உடல் உபாதைகளால், மருத்துவ உதவியுடன் சுவிட்சர்லாந்தில் இன்று உயிர் நீத்தார் தொன்னூற்றொரு வயதான Jean Luc Godard (1930-2022).

திரைப்படச் சங்க நடவடிக்கைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எண்பதுகளில் என்னை மிகவும் வசீகரித்த இயக்குனர்களில் ஒருவர் கோதார்.

பெர்க்மன் தொடங்கி நீண்டதொரு வரிசையில் கோதாரின் மீது தனியான ரகசிய காதல் ஒன்றும் இருந்தது. ரகசியம் ஏனென்றால் அந்த காதலை விளக்குவது கடினம். மூன்று திரைப்படங்களை பார்த்த சந்தர்ப்பங்களை நினைவு கூற விரும்புகிறேன்.

La Chinoise

ஏதோ காரணங்களால் இந்த திரைப்பட பிரதி FFSI சுற்றுக்கு எண்பதுகளின் இறுதி ஆண்டுகளில் வந்தது. என்னால் திருச்சியில் திரையிடலை நிகழ்த்த இயலவில்லை. அதனால் 16mm படப்பெட்டியை எடுத்துக் கொண்டு மதுரை சென்றேன். யதார்த்தா அப்போது மீண்டும் இயங்கத் தொடங்கியிருந்தது. ராஜன் அன்று இல்லை. ஆனால் வேறு சில உறுப்பினர்களிடம் பொறுப்பை கொடுத்திருந்தார். ஒரு கல்லூரி ஆடிட்டோரியம். மொத்தமே ஆறேழு பேர்தான் இருந்தோம். மனதை உலுக்கிய திரை அனுபவம். கிரிலோவின் தற்கொலை என்னை முழுமையாக ஆட்கொண்டது. தாஸ்தாவ்ஸ்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். கோதாரின் படங்களின் ஒரு வகைமையை உறைந்த கவிதை (Icy Poetry) என்று மொனோகா வர்ணித்திருப்பார்.

Prenom Carmen

என்ன ஒரு அசாதாரணமான படம். படப்பெட்டியை பெற்றுவர புதுக்கோட்டை சென்று அங்கு முதல் நாளே படத்தை ஒருமுறை பார்த்துவிட்டேன். பின்னர் திருச்சிக்கு கொண்டுவந்து அன்னதான சமாஜத்தில் திரையிடல். இடது சாரி தொழிற்சங்கங்களை சேர்ந்த ஒரு இளைஞர் குழு புதிதாக உறுப்பினர் ஆகியிருந்தனர். அவர்கள் படம் முடிந்த பிறகு கேள்விகளால் என்னை துளைத்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் விவாதம் நிகழ்ந்தது. அன்று அந்த படத்தை உணர்வும், உணர்ச்சியும் கொப்பளிக்க நான் விளக்கிய விதத்தை கோதார் கேட்டிருந்தால் ரசித்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் படம் பார்த்தபிறகுதான் கார்மென் ஒபரா பிரதியை தேடிப் படித்தேன். ஃபிரான்ஸிஸ்கோ ரோசியின் படத்தையும் பார்த்தேன். ஆனால் கோதாரின் கார்மன் வேறே அவதாரம். படத்தின் துவக்கக்காட்சியும் வசனமும் மறக்க முடியாதவை. கார்மனின் முகத்தின் அருகாமைக் காட்சி. அவள் கூறுவாள்: “If shit is worth money, the poor will not have assholes”.

King Lear

குரோசாவாவின் ரான் படத்தையும், கோதாரின் கிங் லியரையும் ஒரே நாளில் பார்க்கவேண்டும் என்ற என் நெடு நாள் ஆசை அம்பேத்கர் பல்கலைகழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நிறைவேறியது. வெகு நாட்களாக அப்படி பார்க்கும்போது குரோசாவாதான் என் மனதை ஆட்கொள்வார் என்று நம்பியிருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராத விதமாக கோதார் என்னை சிதறடித்தார். கோதாரின் படத்தின் சிறப்பே அவர் சித்தரிப்பை, ரெப்ரசண்டேஷன் என்பதை முற்றிலும் புறக்கணித்து படைப்பின் ஆன்மாவிற்குள் முற்றிலும் எதிர்பாராத விதங்களில் பிரவேசிப்பதுதான். அறிவார்த்தமான அணுகுமுறையின் உச்சத்தில் கலை பைத்தியக்காரத்தனமாக வெளிப்படும் உன்மத்தம்தான் கோதாரின் கிங் லியர் என்று சொல்லத் தோன்றுகிறது.

என்றாவது ஒரு முழு நூலை எழுதி அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். Love you Godard. My life would have been much impoverished without you.