நரிக்குறவர்கள்/சோ தர்மன்

ஒரு வழியாக நரிக்குறவர்களை பழங்குடியினராக பட்டியலிட மத்தியரசு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நியாயமான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் சந்தோஷமே.அவர்களை அரசு பிற்படுத்தப்பட்டோராக அதாவது பி.சி.அல்லது எம்.பி.சி.லிஸ்ட்டில் இதுவரை வைத்திருந்தது என்பது கூட அனேகம் பேருக்கு தெரியாது.
1980 காலகட்டம்.என்னுடன் பஞ்சாலையில் பணியாற்றிய ஏ.ஐ.டி.யு.சி.யூனியனில் இருந்த நண்பர் ராஜகோபாலும் நானும் இன்னும் சிலரும் சுமார் 200நரிக்குறவர் இன குடும்பங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தை கோவில்பட்டியில் துவங்கினோம்.அதில் முக்கிய கோரிக்கையே எங்களை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும்.
போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தியவர் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர்.அழகர்சாமி எம்.எல்.ஏ.அவர்கள்.எங்கள் பின்னால் நின்றது இந்திய கம்னியூஸ்ட் கட்சி.அப்போதெல்லாம் இடதுசாரி இயக்கங்களில் அன்றாடக் காய்ச்சிகளான கூலித்தொழிலாளிகள்,தீப்பெட்டி,பஞ்சாலை,கட்டிடத்தொழில்,தையல் தொழில் ,பஞ்சாலைத்தொழில் செய்வோர்களே 90சதம் உறுப்பினர்களாக இருந்தனர்.இப்போது மாதிரி அரசு ஊழியர்கள்90சதம் உறுப்பினர்களாக இல்லாத காலம்.
போராட்டம் வருடக்கணக்காக நீட்டித்தது.நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரண்டு போய் தாலுகா அலுவலகத்திற்குள் நுழைந்து அப்படியே அமர்ந்து கொள்வது.ஒவ்வொருவர் கையிலும் பாம்பு,தேள்,நண்டு,பூனை,முயல்,காடை,கௌதாரியை வைத்திருப்பார்கள்.பணியாற்றும் அலுவலர்கள் அனைவரும் எழுந்து வெளியே ஓடிவிடுவார்கள்.காவல்துறை இவர்களை வெளியேற்ற படாதபாடு படும்.இலேசாக தாக்கினாலும் போதும் அவர்களாகவே கல்லை எடுத்து மண்டையை தாங்களே உடைத்துக் கொண்டு இரத்தம் வழிய அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி காவல்துறை மீது புகார் கொடுப்பார்கள்.எங்களுக்கென சில மருத்துவர்களையும் சில வக்கீல்களையும் நாங்கள் வைத்திருந்தோம்.என்னையும் ராஜகோபாலையும் போலீஸ் வலைவீசித் தேடும்.நாங்கள் ஏதாவது ஒரு நரிக்குறவரின் குடிசையில் சுகமாகத் தூங்குவோம்.சாமானியமாக யாரும் குடிசையை நெருங்க முடியாது.
‌‌. கடைசியில் வேறு வழியே இல்லாமல் அரசு அவர்களுக்கு வீடுகள்,பள்ளிக்கூடம்,தண்ணீர் வசதி அனைத்தையும் செய்து கொடுத்தது.அந்த இடத்திற்கு தோழர்.ராஜகோபால் நகர் என்று பெயர்.இப்போதும் பஸ்டாப் இதே பெயரில் உள்ளது.காரியம் அத்தோடு முடியவில்லை.பஞ்சாயத்து தேர்தலில் மந்தித்தோப்பு பஞ்சாயத்தில் நரிக்குறவர் ஒருவரை வார்டில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்து பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் ஆக்கி செக்கில் கையெழுத்திட பயிற்சி கொடுத்து செக்பவர் உள்ள ஒரு பதவியை பெற்றுக் கொடுத்தோம்.இத்தனைக்கும் உறுதுணையாக இருந்தது இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியும் எம்.எல்.ஏ அழகர்சாமி அவர்களும்.அழகர்சாமி நல்லவர் மட்டுமல்ல வல்லவரும் கூட.
அதன் பின்னர் நரிக்குறவர்களை அரசாங்கம் பழிவாங்கியது.அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன.தேவாங்கு வைத்திருப்பதை சட்டவிரோதமாக்கியது.தேவாங்கை அழிந்துவரும் அபூர்வ இனமாக அரசு அறிவித்தது.நரிக்குறவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.அப்புறம் காடை,கௌதாரி,முயல்வேட்டையை தடை செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தது.வனத்துறை இவர்கள் மீது மிக மோசமான வழக்குகளை பதிவு செய்து கைது செய்தது.கடைசியில் அவர்களின் வாழ்வாதாரமான பூர்வீக வேட்டைத் தொழிலை இழந்து வீதிக்கு வந்து திருவிழாக்காலங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடனான என் அனுபவத்தை”இரவின் மரணம்”என்ற பெயரில் ஒரு குறுநாவலாக எழுதி வெளியிட்டேன்.கரசூர் பத்மபாரதி அவர்கள் நரிக்குறவர்களைப் பற்றிய இன வரைவியல் நூல் ஒன்றை வெளியிட்டார்.இந்நூல்தான் சமீபத்தில் ஜெயமோகன் அவர்களால் முன்னெடுக்கப்படும் இரண்டு லட்சம் ரூபாய்பரிசுடன் கூடிய பெரியசாமி தூரன் விருதைப் பெற்றது.
நரிக்குறவர்கள் பழங்குடியினராகும் அறிவிப்பை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்களுக்கு முதலில் அவர்களுடைய பூர்வீக உரிமையான வேட்டையாடும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள்.இல்லையென்றால் எதற்காக காடை,கௌதாரி,முயல் இவற்றை வேட்டையாடக் கூடாது என்பதற்கான காரணத்தை யாவது சொல்லுங்கள்.இதை பல வருட காலமாக மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு சொல்லாமலேயே வைத்திருக்கிறார்கள்.இவைகள் தேசிய பறவைகளோ விலங்குகளோ இல்லை.அருகிவரும் அரிய இன வகைகளின் வகைப்பாட்டிலும் இல்லை.அப்புறம் ஏன் தடைசெய்ய வேண்டும்.தயவு செய்து துப்பாக்கியுடன் நரிக்குறவர்களைப் பார்க்க வழி செய்யுங்கள்.கையேந்தி பிச்சையெடுப்பதைப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.
இந்தியக் கம்னியூஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.தோழர் அழகர்சாமி,ஏ.ஐ.டி.யு.சி.உறுப்பினர் பஞ்சாலை தொழிலாளி தோழர்.ராஜகோபால் இருவர் விதைத்துச் சென்ற விதை ஒன்று இன்று முளைவிட்டிருக்கிறது.ஆம்.அது ஒரு பழங்குடியின மரமாக வளரும்.பழங்குடியின மக்கள்தான் வனங்களை வளர்ப்பவர்கள்.காப்பவர்கள்.வழிபடுகிறவர்கள்.
இரண்டு தோழர்களையும் நினைவுறுத்தி ஒரு செவ்வணக்கம்.