இது நான் எழுதிய முதல்/ஜெயராமன் ரகுநாதன் 

இது நான் எழுதிய முதல், இல்லை இல்லை, ஏறக்குறைய முதல் கதை. ஆகவே அதன் அமெச்சூர்த்தனங்களை மறந்து ரசியுங்கள்….

சில விஷயங்கள்

விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகடன் எடுக்குமுன் என்னைத்தள்ளிக்கொண்டு ஒரு பையன்.

”நாடாரே! ரெண்டு பட்டர் பிஸ்கேட்”.

பையன் என்றா சொன்னேன், இல்லை. பையன் மாதிரியான உடல் வாகு, அகலவாட்டத்தில் ஐந்து அல்லது ஆறு அங்குலம் தான் இருப்பார். முகத்தில் கரிக்கோடுகளாய் அரும்பு மீசை. முழு கால்சட்டையும் அரைக்கை வைத்த பனியனுமாய் இருந்தார். ஒரே பரபரப்பாய் இருந்தார்.

“நாடாரே! கேட்டேனே, ரெண்டு பட்டர் பிஸ்கேட்’

கடைக்காரர் நாடாரா என்று தெரியவில்லை. அவரும் மறுக்கவில்லை.

இவர் கால் மாற்றி கால்மாற்றி நின்றார். மறுபடி “தர்ரீங்களா”

இதற்க்குள் விகடனை எடுத்து விட்ட கடைக்காரர் அதை என்னிடம் கொடுத்துவிட்டு, “இருப்பா, வேலையாத் தானே இருக்கேன்”

பட்டர் பிஸ்கெட் பாட்டிலின் மேல் உள்ள தகர மூடியில் ஒரு ரூபாய் காயினால் ”டொக் டொக்” என்று தட்டினார்.

”பட்டர் பிஸ்கெட், ரெண்டு”

மறுபடி கால் மாற்றல்.

என்னுடைய சில்லறைக்கு முன்பாகவே கடைக்காரர் ரெண்டு பட்டர் பிஸ்கெட்டை அவரிடம் கொடுத்து ”ஒரு ரூபாய் குடு” என்று கேட்டு வாங்கிவிட்டு எனக்கு சில்லறை கொடுத்தார்.

“என்னா அவசரம் பாருங்க!”

பட்டர் பிஸ்கெட் ஆசாமி கடைக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தார்.

கவனித்தேன்.

ஒரு பிஸ்கெட்டை சின்னதாகக்கடித்தார். அதன் இனிப்பில் மொரமொரப்பில் கிளர்ந்து கண்களை மூடி அனுபவித்தார். இப்போது அடுத்த கடி.

ஓரக்கண்னால் அவரைப்பார்த்தேன்.

இன்னும் ரசித்து அடுத்த துண்டை முடித்தார். ரெண்டாவது பிஸ்கெட்டை ஆசையோடு பார்த்தார். தின்னலாமா வேண்டாமா என்று யோசனைபோல நிதானித்தார். ஏதோ முடிவுக்கு வந்தவர் போல சின்ன சின்ன கடிகளாகக்கடித்து தின்று முடித்தார். அந்தச்சிறிய காகிதத்தை கசக்கி தெருவோரம் எறிந்து விட்டு பரபரப்பாக ரோடைக்கடந்து எதிரே உள்ள டெய்லர் கடையில் புகுந்தார்.

அவரின் முக பாவம், பரபரப்பு, அந்த ரசனை எல்லாம் என்னை அவர்பால் இழுக்க, நானும் ரோடைக்ராஸ் செய்து டெய்லர் கடைக்குள் நுழைந்தேன்.

“ஜீன்ஸ் கிழிந்த இடத்தில் தைத்துக்கொடுப்பீர்களா?”

ஏதானும் கேட்கவேண்டும் என்று கேட்டேன்.

நம்ம பிஸ்கெட் ஆசாமி இதற்க்குள் தரையில் உட்கார்ந்து காஜா எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

“குட்த்தனுப்புங்க சார். அந்த மூணாவது தெரு, தனி வீடுதானே? டேய்! சாப்டுட்டு சார் வூட்டுக்கு போய் ஜீன்ச வாங்கியா, என்ன?”

” இப்பதான் சாப்ட்டேன்! தோ உங்க கூடவே வீட்டுக்கு வரவா சார்?

இன்று என்னால் சாப்பிட முடியும் என்று தோன்ற வில்லை.