
சாகித்திய அகாதெமியும் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம் ஒன்றை இன்று (16-09-2022) நடத்தினார்கள். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் வைகைச் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலையில் இந்த விழா நடந்தது.
கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் (அநுத்தமாவும் கலைமகளும்), திரு அகிலன் கண்ணன் (அநுத்தமாவின் வாழ்வும், படைப்புகளும்), மரு.ஜெ.பாஸ்கரன் (அநுத்தமாவின் படைப்புகளில் பெண்ணீயம்), ரா.ராஜேஸ்வரி (அநுத்தமாவின் படைப்புகளில் வாழ்வியல் நெறிகள்), கு.பத்ம பிரியா (அநுத்தமாவின் கதைக்களம்) ஆகியோர் பங்கேற்ற இந்த இலக்கிய அரங்கில், அநுத்தமாவின் படைப்புகளின் பல்வேறு பரிமாணங்கள் பேசப்பட்டன.

அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தவர் திரு சந்திரசேகர் ராஜு (சாகித்திய அகதெமி). விழாவுக்கு அண்மையில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் திரு மாலன், மணிமேகலைப் பிரசுர இயக்குனர் திரு ரவி தமிழ்வாணன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவி பிரபாவதி மிக அருமையாக திருவருட்பாவையும், பாரதியின் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ பாடலை இராகமாலிகையிலும் பாடி விழாவினைச் சிறப்பாகத் தொடங்கி வைத்தார்.
அநுத்தமாவைப் பற்றி சில செய்திகள்….
அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன் – சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15 க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.
1950 – 1960 களில் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதைகளை எழுதியுள்ளார்.
முன்னேறத் துடிக்கும் பெண்களுக்க அவரது வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம்.
14 வயதில் திருமணம் செய்ததால், படிப்பைப் பாதியிலே நிறுத்திவிடுகிறார். பின்னர் ஒன்பது ஆண்டுகள் கழித்து மெட் ரிகுலேஷன் படிப்பில் மாகாணத்திலேயே முதல்வராக வருகிறார்.
சொந்த முயற்சியில் இந்தி, ப்ரெஞ்சு, தெலுங்கு, ருஷ்யன், சமஸ்கிருதம் மொழிகளைக் கற்றுக்கொள்கிறார். ஆங்கில இலக்கியத்தில் நல்ல பற்று உண்டு.
25 ஆவது வயதில் எழுதத் தொடங்குகிறார். 1947 ல் முதல் சிறுகதை ‘அங்கயற்கண்ணி’ கல்கி போட்டியில் இரண்டாம் பரிசு பெறுகிறது.
கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் ‘மணல்வீடு’ புதினம் முதல் பரிசு பெறுகிறது –
மனோதத்துவ ரீதியில் வெளிவந்த முதல் நாவல், இவரது ‘ஒரே ஒரு வார்த்தை’. (தி.ஜ.ரங்கநாதன் முன்னுரையில்).
1956 ல் ‘பிரேமகீதம்’ என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதினைப் பெற்றது.
‘ஜகன்மோகினி’ இதழில் இவர் எழுதிய ‘மாற்றாந்தாய்’ சிறுகதை தங்கப் பரிசு பெற்றது.
கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மோனிகா ஃபெல்டன் எழுதிய ஆர் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மையாரின் வாழ்க்கையை அநுத்தமா ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து, அது கல்கியில் தொடராக வெளி வந்தது.
அநுத்தமாவின் மொழிபெயர்ப்பில் சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கையையும், அவரது சமூக சீர்திருத்த சேவைகளையும் வாசிக்கும்போது – “சேவைக்கு ஒரு சகோதரி” அல்லயன்ஸ் – அநுத்தமா என்னும் எழுத்தாளரின் சமூக சீர்திருத்த நோக்கினையும், பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் விழிப்புணர்வுகுறித்தும் அவருக்கிருந்த ஆர்வத்தையும் உணர முடியும். அவரது படைப்புகளில் அதன் தாக்கம் நீக்கமற நிறைந்திருப்பதையும் காண முடியும்.
1950 களின் வாழ்க்கையை, பண்பாட்டை மிகைப்படுத்தாது சித்தரிப்பதாக இவரது எழுத்துக்கள் உள்ளன.
“நான் வாழ்ந்த சூழலில் என் கண்ணில் பட்ட பிரச்சனைகளை, என்னை பாதித்த விஷயங்களை அதற்கான தீர்வுகளோடு எழுதினேன். பலரது வாழ்க்கையில் எனது கதைகள் நல்ல திருப்பங்களை உண்டாக்கியிருக்கின்றன. இதைத்தான் நான் எழுத்தின் வெற்றியாக, எனக்குக் கிடைத்த பெருமையாக, உயர்ந்த மதிப்பீடாகக் கருதுகிறேன்” – அநுத்தமா.
அவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஆர் சூடாமணி.
“என் எழுத்துக்கான நோக்கம் அனுபவப் பகிர்வுதான். விளம்பரத்திற்காக எழுதவில்லை. பணம் புகழ் என்று எந்த வித உள்நோக்கமும் இல்லை”என்கிறார்.
அவரது பெண் பாத்திரங்கள் எல்லாம் அன்றைய கூட்டுக்குடும்பங்களில் உள்ளவை. பாட்டிகள், அம்மாக்கள், மாமிகள், திருமணமான பெண்கள், திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள், வேலை பார்க்கும் பெண்கள், வீட்டுப் பொறுப்பைச் சுமக்கும் பெண்கள்- இவர்களின் உறவுச் சிக்கல்களை அலசுபவை.. எளிய அன்பையும், தியாகத்தையும் தீர்வாக முன்வைப்பவை அநுத்தமாவின் படைப்புகள்.
காதலை மென்மையாகச் சொல்வதில் அநுத்தமாவை மிஞ்ச முடியாது. பெண் மன உணர்வுகளை மிக மென்மையாக மனதை வருடும் வகையில் எழுதியிருப்பார்.
“பெண்களுக்கு ஓர் அந்தரங்க உலகம் உள்ளது. அது இலக்கியத்துக்கு வரவேண்டும். அநுத்தமாவின் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அதிக மிகையுணர்ச்சிகள் இல்லாமல், உபதேசங்கள் இல்லாமல் இருக்கின்றன” – க.நா.சு.
பெண்கள் வெளியே வருவதற்கே கடினமாக இருந்த காலத்தில், அநுத்தமாவின் கணவரும், மாமனாரும், அவர் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தனர் என்பதே வியப்பானது!
அவர் தன் எழுத்துக்களில் பெண்ணியமோ, அரசியலோ பேசவில்லை. ஆனாலும், குடும்பம், வாழ்க்கை முரண்கள், உறவுச்சிக்கல்களை கதைகளாக எழுதும்போது, உளவியல் ரீதியாகப் பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். பெண்களின் கோபங்கள், தாபங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களை மிக இயல்பாகச் சொல்லும்போது, அதன் பின்னாலிருக்கும் மன வலியை வாசகனால் புரிந்துகொள்ள முடியும். அதற்கான தீர்வுகளைச் சொல்லும்போது அவருக்கென திட்டவட்டமான பண்பாட்டு மதிப்பீடுகள் இருந்தன.
எழுத்தாளர் அகிலன் ஒருமுறை ‘சமையலுக்கு மட்டுமல்ல, கதைகளுக்கும் பாத்திரங்களை சமையலறையில் இருந்து எடுக்கிறாயே!’ என்று பாராட்டினாராம். உண்மை, 50 களில், அங்கிருந்துதானே பெண்கள் வெளி உலகத்தைப் பார்க்கின்றனர் – அங்கிருந்துதானே வெளியே வந்து சாதனைகளைப் படைக்க வேண்டும்! இன்றைய பெண்களின் தொடக்கப் பள்ளி, அன்றைய சமையலறைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! இதனை அநுத்தமாவின் கதைகளில் காணமுடியும். சமையலறைப் பெண்கள் எடுக்கும் முடிவுகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவது அநுத்தமாவின் படைப்புகளின் சிறப்பு.
ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டென் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள குடும்பத்தில் பிறந்தவர். இவரது நடுத்தர மக்களைப் பற்றிய புனைவுகள் – குறிப்பாக ஆண், பெண் உறவுச்சிக்கல்கள் பற்றியவை – ஆங்கில இலக்கியத்தில் இவருக்கு ஒரு நிரந்தர இடத்தை அளித்துள்ளன. அந்தக் காலக்கட்டத்தில், பெண்கள் சமூகத்தில் முன்னேறவும், பொருளாதார ஆதாயத்துக்காகவும், ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டின.
அதே போல, அநுத்தமாவின் புனைவுகளும் நடுத்தர குடும்பத்துப் பெண்களின் உறவுச் சிக்கல்களையும், வாழ்க்கை முரண்களையும் சுட்டுகின்றன. இவரது கதைக் களன்கள் பெரும்பாலும் மத்திய தர கூட்டுக்குடும்பங்கள்தான் – அதில் ஏற்படும் உறவுச்சிக்கல்களையும், முரண்களையும் மிக எளிமையான நடையில், தெளிவாகப் பெண்களின் பார்வையில் அவர் எழுதியிருப்பார். தமிழ்நாட்டின் ‘ஜேன் ஆஸ்டென்’ என்றே புகழப்பட்டவர் அநுத்தமா.
