முந்தி நட/கோ.முத்துசுவாமி

“முந்தி நட ” என்றுரைத்தான் முன்னே சென்றோன்;
மூச்சிரைக்க நடைபயின்றேன் முந்திப் பார்க்க!
“எந்தவிடம் தொடுவதற்கோ? ” எனக்கேட் பீரோ?
“எதுவானால் என்ன? நட! ” என்றான் சென்றோன்!
முந்தமுந்தும் வேகத்தில் முழங்கால் தூக்கி
முன்னெடுத்து நடைவைத்து மேலே பார்த்தேன்!
மந்தநடை இதுதானோ? எனத்தோன் றிற்று
மனதிற்குள்; முன்னீளும் விரிந்து தூரம்!

நடநடவென் றுரைத்தவனோ ‘நான் ‘முன் இல்லை!
நாற்காலம் தாண்டியவன் நகர்ந்து விட்டான்!
படபடவென் றிருப்பதுபோல் உணர்ந்தும் வெற்றுப்
பாவனையோ நடைவேகம் எனவும் தோன்றும்!
தடதடவென் றுரக்கவரும் கால்கள் சப்தம்
தன்பின்னால் பலர்நடந்து தாண்டல் காட்டும்!
அடவிடுவென் றிருப்பதற்கும் மனமோ இல்லை;
“அயர்ந்தாலும் நட”வென்றான் சென்றோன் தோன்றி!

“முன்னெடுப்பை பின்னடைவு மூடும் முன்னர்
முந்திநட” எனவொலித்தான் மறைவாய்ச் சென்றோன்!
என்னெடுப்பும் என்னடையும் எனக்குண் டான
எல்லைகளில் தேங்கிடுமோ எனவும் சோர்ந்தேன்!
“பன்னெடுங் காலங்காலம் பதித்துக் கொண்ட
பாவனைகள் விடுபடவுன் பாதை மாற்றி
முன்நட!நன் னடையாக முந்து! முந்து!
முந்திநட! ” எனயிழுத்தான்! முந்த லானேன்!