
ஆவியென மேலெழும்பிக் குளிர்ந்து
ஆதாரத்தைத் தேடி வந்த மேகப் பொழிவு
சிற்சிலத் துளிகளாய்ச் சொட்டிய புன்னை மரம்
காற்றில் சிலிர்த்து சடசடவெனக் கொட்டும் நேரம்
பிரிந்த நீ சென்றதெங்கே என அறியேன்
ஓட்டைக் கண்ணுள்ள சிரட்டையில்
நீர் அள்ளி நீரள்ளி ஓய்ந்து விட்டேன்
புன்னை வனப்பிடையே மட்டும்
மழை ஈரம் சூடிய உன் கைகள் நின்றழைக்கும்
நினைவின் வலியுடன் வரும் மகிழ்ச்சி
வெயிலிடையே பெய்யும் மழை போல
விந்தையும் வேதனையும் இணைந்த ஒன்று
நீரன்றி அமையாது உலகல்லவா?
