பாலகுமாரன் பற்றி சாருநிவேதிதா

பாலகுமாரனுக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசுகிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா..

“யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய, ‘இதுபோதும்’ என்ற நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். ‘இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்தே ஆகணும்’னு என்னிடம் கேட்டுக்கொண்டார். யோகியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்திருப்பார். அவர் எழுதியதில் முக்கியமான புத்தகம் அது.

தன்னுடைய இறுதிக்காலத்தை முன்கூட்டியே உணர்ந்த சித்தர் அவர். போன வருடம் முகநூலில் தன்னுடைய இறப்பு குறித்து, ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். எல்லா மனிதனையும் சமமாகப் பாவித்தவர். பெண்கள், பாலகுமாரனிடம் பழகும்போது, கிடைக்கிற சுதந்திரத்தை, வேறு யாரிடமும் உணரமுடியாது. நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அன்பின் சொரூபம் அவர். அதனால்தான் பெண்களுக்கு அவரை அதிகம் பிடித்திருந்தது.

சினிமாவில் வித்தியாசமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். ‘நாயகன்’, ‘பாட்ஷா’வை எல்லோருக்கும் தெரியும். ‘புதுப்பேட்டை’ போன்ற ஹார்ட் பிரேக்கிங் படத்துக்கும் அவர் எழுதியுள்ளார். அவருடைய இடத்தில் இருந்து, தரைமட்டமான ஒரு இடத்துக்கு எழுதியிருப்பது ஆச்சர்யமான விஷயம். வசனத்தில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக எழுதியவர் பாலகுமாரன். சினிமாவில் வசனத்தை மிகுந்த உயரத்துக்குக் கொண்டுபோனதில் அவரின் பங்கும் அளப்பரியது. இலக்கியத்தில் எதிர்காலம் குறித்து எழுதியவர் சுஜாதா. இலக்கியத்தை வரலாறு நோக்கி நகர்த்தியவர் பாலகுமாரன். அவரைப்போல அன்பான மனிதனைப் பார்ப்பது கஷ்டம்!” என்று, கண்ணீர் தளும்ப பேசினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நன்றி: விகடன்

One Comment on “பாலகுமாரன் பற்றி சாருநிவேதிதா”

Comments are closed.