அசோக மித்திரன் பற்றி../சுஜாதா தேசிகன்

58 வருட காலமாக தமிழில் எழுதி வந்திருக்கிறார், அதில் 43 வருடங்கள் முழு நேர எழுத்தாளராகவே வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார். இவரை போலவே இவர் எழுத்துக்களும் எளிமையாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் செலிபிரிட்டியாக கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் பலர் காரோ ஸ்கூட்டரோ வாங்குவது, அவர்கள் எழுதுவதுடன், வேறு வேலை பார்த்து அங்கு ஒன்றாம் தேதி கிடைக்கும் சம்பளத்தில்தான்.! ஆகவே அசோகமித்திரன் முழு நேரம் தமிழ் எழுத்தாளராக இருந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்று சொல்வேன்.

வேறு வேலை எதுவும் தேடவில்லையா என்ற கேள்விக்கு, “யாரும் தரவில்லை. எனக்கும் கேட்கத் தெரியவில்லை என்று கூற வேண்டும். ஒரு முறை முனைந்து ஒருவரிடம் சென்றேன். எல்லாம் நம் சாவிதான். அப்போது தான் ‘தினமணி கதிர்’ பொறுப்பேற்றிருந்தார். வா வந்து சேர்,” என்றார்.

“கணையாழி என்று டில்லிக்காரர் பத்திரிகை ஒன்று இருக்கிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.எனக்கு அதில் வருவது மாதம் ஐம்பது, நூறு தான் என்றாலும் என்னையே நம்பியிருக்கிறார்கள். நான் அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அது எந்த விதத்திலும் கதிரின் பாதையில் குறுக்கிடாது,” என்றேன்.

சாவியால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. “ஆனால் சில ஆண்டுகளுக்குள் கணையாழியின் உரிமையாளரே, தினமணி நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்து வந்தது வாழ்க்கையின் Dramatic irony என்று தான் கூற வேண்டும்.” என்கிறார்.

அசோகமித்திரன் ஏன் சினிமாவிற்குள் போக முடியவில்லை அல்லது போகவில்லை என்று கேள்விக்கு விடை இல்லை. இத்தனைக்கும் இவர் ஜெமினியில் பொதுஜனத் தொடர்புப் பிரிவில் உதவியாளராக சேர்ந்து அதிகாரியானவர். தமிழ் சினிமா இவரின் எழுத்துகளை உபயோகப்படுத்தத் தவறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.

எதையும் வித்தியாசமாகச் செய்யும் ஒரு டைரக்டர் இவருக்கு ஒரு ஆட்டோ பிடித்து கொடுத்தார்.

எழுதிப் பிழைப்பதில் உள்ள சிரமங்கள்? என்ற கேள்விக்கு இவரின் ஒரு வரி பதில்:
“எல்லாச் சிரமங்களையும் துயரங்களையும் அனுபவித்தாயிற்று.”

முகநூலில் தெரியப்படுத்தியவர்: ஆர்.கந்தசாமி