மௌனங்கள் உதிரும் அழகு/ அனங்கன்


்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
ஒரு கல்லறையின் மௌனம்
அந்தச் சாலையில் இருந்தது.

நாம் சந்திப்பதற்காக
நீதான் அச்சாலையைத்
தேர்வுசெய்தாய்.

நீ மட்டுமே
பேசிக்கொண்டிருக்கும்
அத்தருணங்களில்
உனக்காகவே
அச்சாலை மௌனமாய்
இருப்பதாய்த் தோன்றும்.

நாம் அமரும்
கொன்றை மரத்தடி
பூக்களை உதிர்த்து
நமக்கான மஞ்சட் பாய்விரிக்கும்.

மரத்தை உலுக்கி
இன்னும் பூக்களை
உதிரச்செய்ய நான்
விழையும்போது..
நீ என்னைத் தடுத்துவிடுவாய்.

தென்றல் விடுவதாயில்லை
அது எனக்கான
வேலையைச்செய்தது..
நீ இன்னும் அத்தெருவில்
இருப்பதற்காக.

உன் தலையில் உதிர்ந்த
பூக்களை மட்டுமே வைத்து
நான் ஒரு தலையணை
செய்திருக்கிறேன்.

இன்று அதில்
படுத்தால்
உறக்கம் வருவதில்லை.

சரக்கொன்றைப் பூக்கும்
அந்தச் சாலையின் முடிவில்
இன்னும் அந்த மௌனம்
குடிகொண்டிருக்கிறது.

நான் மட்டும் வந்து
இலையுதிர்ந்த அந்த
மரத்தை இ்ன்னும்
பார்த்துவிட்டுப் போகிறேன்.