கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

கல்யாணம் 1

ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
எல்லோரும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்

கல்யாணம் 2

ஒரு திருமணத்தில்
கலந்து கொண்டேன்

வாசலில் வா வா என்றார்கள்
உள்ளேயும்
வா வா என்றார்கள்
டிபன் சாப்பிடும்
கூடத்தில்
சிலர் புன்னகைத்தார்கள்
யாரும் பேசவில்லை

கல்யாணம் 3

டிபன் சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
டிபன் சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
சாப்பாடு சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி
சாப்பாடு சாப்பிட்டேன்
சரி சரி சரி சரி சரி

கல்யாணம் 4

இன்று மாலை சூட்டிக் கொண்டார்கள்
நினைத்த மாதிரி
நினைத்த நேரத்தில்
நடந்து விட்டது எல்லாம்
நண்பர்கள், உறவினர்கள்
வந்திருந்து
கைக்குலுக்கிக் கொண்டார்கள்
இனிமேல் அவர்கள்தான்
அவர்களுக்குள்
பேச ஆரம்பிக்க வேண்டும்

கல்யாணம் 5

எல்லாம் முடிந்து விட்டது
எல்லோரும் கிளம்பிப் போய்விட்டார்கள்
காலியாக இருந்தது கல்யாண மண்டபம்
நாற்காலிகள் தாறுமாறாக கிடந்தன
காப்பிக் கோப்பைகள்
சிதறிக் கிடந்தன
இன்னும் துப்புறவாளர்கள்
வரவில்லை

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 11 செப்டம்பர் 2022
அன்று வெளிவந்தது )

One Comment on “கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்”

Comments are closed.