தொடர்பு எல்லைகளுக்கு வெளியே/ எஸ் வி வேணுகோபாலன்

கேட்டிருந்தால்
நான் இதமாகத் தந்திருப்பேன்
அவரோ மூர்க்கமாக
அதனைப் பெற்றுக் கொண்டார்
நன்றி சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை நான்
ஆனால்,
முறைத்துக்கொண்டு போவதுபோல்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
வேகநடை போட்டுச் சென்றவர்
சட்டென்று கதவைக் கடந்ததும்
குதித்திறங்கிப் போய்விட்டார் நடைமேடையில்….

அனிச்சைச் செயலில்
நானும் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து
இரண்டடியில் கதவை அடைந்து
எட்டிப் பார்க்கையில்
இறங்க முடியாத வேகமெடுத்திருந்தது புறநகர் ரயில்

எல்லோரது தொடர்பு எல்லைகளில் இருந்தும்
இத்தனை இலகுவாக என்னை
விடுவித்துக் கொண்டுவிட்ட
பக்குவ நிலையை
எவருக்கேனும் சொல்லலாம் எனில்

அதற்கான கருவியைக்
கையால் பறித்ததைக் கால்சராய்ப் பையில் போட்டபடி
மெல்ல மெல்லக்
கூட்டத்தில் கலக்க ஆரம்பித்திருந்தார் அவர்

பதட்டமின்றி அமர்ந்து
பத்திரிகைகள் வாசிக்கத் தொடங்கினேன் நான்.

15 Comments on “தொடர்பு எல்லைகளுக்கு வெளியே/ எஸ் வி வேணுகோபாலன்”

  1. அருமை!!!.அலைபேசி திருடு போன விஷயம் கூட இப்படி கவிதையாக உங்களால்தான் சொல்ல முடியும்.!!!!.வீட்டில் தங்க வந்த திருடன் விளக்கு எடுத்துப் போவதைப் பார்த்த பாதிரியார் இன்னொரு விளக்கும் கொடுத்த கதை நினைவு வருகிறது. ( ஒரு வேளை அது வெறும் அலை பேசியோ, ஒருவேளை அறிதிறன் பேசியெனில் வேறு எதிர்வினை ஆகி இருக்குமோ?).

  2. இடுக்கண் வருங்கால் நகுக
    அடுத்தவனுக் கல்ல தனக்கு
    சுவையற்ற செய்தியையும்
    கவிமணி உரைத்தீர்.
    எடுத்தவன் அறிவானோ அது
    பணமதிப்பிழந்த அறிவுப்பேழை
    என பாவம் வறியவன்.

  3. அலைபேசி என்பது ஒரு உருவகம்தான். அது பறிபோவதூ, காலம் காலமாக பழக்கத்தில் இருக்கும் “ஏதோவொன்று” (அழகிய சிங்கர் மன்னிக்கவும்) தடாலென்று காலவெள்ளத்தில் அடித்துப் போகப்படும் போது, எழுகிற திகைப்புதான்.
    நான் ஏற்கனவே சொன்னதுதான்.

    பல் விழுகிறது போலத்தான், ஃபிலாஸஃபிக்கள் விழுவதும். அததற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் உண்டு, பிரபஞ்சத்தை முடிவற்ற சங்கிலியாக உருவகித்தும்.

    மூடநம்பிக்கைகளில் மிகமுக்கியமான தாலிக்கயிற்றில் முடி போடுவது கூட, முடிந்து விடுகிற இரு துருவங்களை இணைத்து, முடிவற்ற ஒரு ப்ரயாணத்தைத் தொடங்கும் உருவகம் தான்.

    வாழ்க்கை முடிவுறலாம். நம் வழக்கில் தாம்பத்யம் முடிவடைவது இல்லை, அது மூடநம்பிக்கையின் உச்சமாக இருந்தாலும்.

    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் பிறப்பாலான தாயும் தந்தையும் மாற முடியாது.

    ஆனால், கொள்கைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. காலணா பொறாத தத்துவங்களும்.

    ஆனால், அவற்றை முழுமூச்சாக நம்புபவர்களின் கண் முன், அவர்களை உதாசீனப்படுத்தியவாறு கடந்து போவது துக்ககரமானது தான்.
    ஆனாலும் அதுதான் எதார்த்தம்.

  4. இக்கட்டான சூழலிலும் வாசிப்பை…பதட்டமின்றித் தொடர்வது, வாசிப்பின் ருசி அறிந்தவர்களால்தான் இயலும். கவிதையும் மனதில் உருவாகி எழுத முடிகிறதென்றால்… மனம் பக்குவப் பட்டவர்களால்தான் முடியும்.
    வாழ்த்துக்கள். 💐💐💐

  5. சித்தாந்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பின் சுந்தர ராமசாமி எழுதிய நாவல் ‘ஜே ஜே சில குறிப்புகள்’.. மாயையிலிருந்து விலகி ஞானம் அடையும் போது படைப்பாற்றல் பெருகும் .. மனித நேயம் வரும்.. கடிவாளங்கள் கழன்று உலகம் இன்னும் வெளிச்சத்தில் தெரிய ஆரம்பிக்கும் தருணம்… கணேசராமன் சொன்னாற்போல் அலைபேசி என்பதை உருவகமாகக் கொண்டால்.. கவிஞருக்கு வாழ்த்துகள்..

  6. பறித்தவனுக்கு அது நாய் பெற்ற தெங்கம்பழமே..அவன் அறியான்..வேணுவின் விரல் தொட்டால் திறக்குமென..
    சட்டென்று அலைபேசியை ,நீங்கள் டம்மி பீஸ் ஆக்கி விடுவீர்கள் என உணராது, வீசி எறிய அதைத் தாண்டி செல்லும் அவசரக் கூட்டம்.

  7. அலைபேசி பறிபோன அதிர்ச்சியில் இருந்து மீண்டு கவிதை எழுத வேண்டும் எனில் அசாத்திய பக்குவம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. பிறகென்ன?
    எங்களுக்கு ஒரு பாடம் நடத்தி விட்டீர்கள்..

  8. அலைபேசியை பறிகொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு கவிதை எழுத அசாத்திய பக்குவம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. எனக்கு இது ஒரு பாடம்

  9. அலைபேசியைப் பறிகொடுத்த பின்னரும் என்னவொரு நிதானம்!
    பதறியடித்து, கத்திக் கலவரம் பண்ணி கூட்டத்தைக் கூட்டாமல் அமைதி காத்தது எப்படி?
    ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் கவிஞன், காதலில் கட்டுண்டவன், பைத்தியம் எல்லோரும் ஒன்றே என்பான்.
    கவிஞன் ஒரு ஞானியும் தான் என்றாக்கியுள்ளீர். வாசிப்பின் சுவை அறிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் புதிர் இது. நன்றி கவிஞரே! அடுத்த பயணம் எப்போது? அடுத்த கவிதைக்காக காத்திருக்கிறோம்.

  10. சுஜாதவின் வந்தவன் கதை நினைவுக்கு வருகிறது. ஆனாலும் இன்று நம் அங்கமாகவே மாறி விட்ட அலைபேசி பறி போனால், ஏற்றுக் கொள்வது கடினம்தான். அதுவும் புத்தகம் படிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஞானிதான் சார்!

Comments are closed.