
காலையில் எழுந்தேன். மனைவி
காப்பி இல்லையென்றாள். காப்பிப்பொடி தீர்ந்து விட்டதாம்.
எங்கே வரும் உற்சாகம்?
காய்கறிக்காரர் வந்தார்.
கால் கிலோ இருபது ரூபாய்.
காய்கறி எல்லாமும்.
எங்கே வரும் உற்சாகம்?
செய்தித்தாள் விழுந்தது. சேர்த்தெடுத்துப் புரட்டினேன்.
முதல்பக்கம் நகைக்கடை கொள்ளை.
இரண்டாம் பக்கம் இளஞ்சிறுமி வன்புணர்வு. மூன்றாம் பக்கமோ மூன்று கொலைகள் ஓட ஓட விரட்டி.
எங்கே வரும் உற்சாகம்?
அஞ்சல்காரர் வந்தார்.
ஆறேழு சிற்றிதழ்கள் அழகாய் வந்தமர்ந்தன.
அவற்றைப் புரட்டினேன்.
அனைத்துக் கவிதைகளும் அடியேனுக்குப் புரியவில்லை.
அதன்பெயர் இருண்மையாம்.எங்கே வரும் உற்சாகம்?
ஆனால்
இதோ இதோ இவற்றாலெல்லாம்
ஒரு கவிதை பிறந்து விட்டதே.
மனத்தில்
உற்சாகம்
உற்சாகம்
