கவிதை/க நா சு

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே

போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்று தான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்

துறைகள்
தோன்றின – நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும் தான்
திருப்தி தருவதில்லையே!

அதனால்,
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும். கலையின்

பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

எழுத்து ஜனவரி 1959