அகிலன் பற்றி சா.கந்தசாமி

ஒரு நாள் சென்னை வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனைப் பார்த்து பேசிவிட்டு மாடிபடி.யில் இறங்கி கீழே வந்து கொண்டிருந்தேன்.

அகிலன் மேலேபடியேறி கொண்டிருந்தார். அவரோடு பழக்கம் கிடையாது. எனவே அவருக்கு என்னைத் தெரியாது என்று நினைத்துக்கொண்டே படியிறங்கினேன். அவர் நின்று “கந்தசாமி’ என்றார். வணக்கம் தெரிவித்தேன். என்னை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார். எதிர்நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு குடும்ப நலன், எழுத்து பற்றியெல்லாம் விசாரித்தார். நான் பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

“வானொலியில் ஏதாவது சிறுகதை சமீபத்தில் ஒலிபரப்பப்பட்டிருக்கிறதா?’ என்று கேட்டார். பதில் சொன்னேன்.

“வானொலியில் ஒலிபரப்ப பன்னிரெண்டு நிமிடங்கள் வருவது போல ஒரு சிறுகதை கொடுங்கள். ஒலி பரப்பலாம் கைவசம் ஏதாவது கதைகள் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

யாரோ அவர் அறைக்கு வந்தார்கள்.

“ஒரு வாரம், பத்துநாளில் கதை கொண்டு வந்து கொடுங்கள். முறைப்படி ஒப்பந்தம் வரும். கையெழுத்திட்டு அனுப்புங்கள். கதைக்கு சன்மானம் கொடுக்கப்படும்” என்றார்.

விடை பெற்றுக் கொண்டேன்.

இருபது நாட்கள் கழித்து “இப்படி நடந்தது’ என்று எழுதப்பட்ட சிறுகதைகயை எடுத்துக்கொண்டு வானொலி நிலையம் சென்றேன். அகிலன் இருக்கையில் இல்லை. அடுத்து நாற்காலியில் அவர் உதவியாளர் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரித்தேன். “என்ன விஷயம்’ என்று கேட்டார்.
“சிறுகதை கேட்டிருந்தார். கொடுக்க வந்திருக்கிறேன் என்றேன். அவர் கையை நீட்டினார். கதையைக் கொடுத்தேன். தலைப்பைப் படித்தார். இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். தலையை அசைத்துக்கொண்டு மேசை மீது கதையை வைத்துவிட்டு, இதுவரையில் வானொலியில் ஏதாவது கதை வெளியாகி இருக்கிறதா?” என்று வினவினார்.

“இல்லை” என்றேன்.

“வானொலியில் ஒரு கதை ஒலி பரப்ப சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கதை அதற்குள் வர வேண்டும். அதோடு தேவைப்பட்டால் கதைகயை சுருக்குவோம்; மாற்றி எழுதுவோம். சர்க்கார் விவகாரம். யாரும் ஒன்றும் சொல்லக்கூடாது” என்றார்.

நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர் முகத்தைப் பார்த்தேன். பின்பு, “அகிலன் வந்ததும் கதையைக் கொடுங்கள். அவருக்கு என்னைத் தெரியும்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.

“இப்படி நடந்தது’ என்ற சிறுகதை, ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் நடக்கும் கதை. சிங்கப்பூர், சென்ற சோமு கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருகிறார். மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அவனுக்கு ஒரு வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டப்படுவதை மகனும், தந்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருக்கிறார்கள். காற்று அடிக்கிறது. மழை பொழிகிறது. அவசரம் அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்குகிறார்கள். சுவர் இடிந்து மகன் மீது விழுகிறது. அவன் செத்துப் போய் விடுகிறான். தந்தை தன் மருமகளோடு சிங்கப்பூருக்கு கப்பல் ஏறுகிறார். கதை முடிந்துவிட்டது.

இப்படி நடந்தது சிறுகதைகயை ஒலிபரப்பமாட்டார்கள் என்று தான் கருதினேன். ஆனால் ஒலி பரப்பப்பட்டது. பின்னால் அகிலனை சந்தித்தேன். “கதையைக் கேட்டீர்களா? குரல்வளம் மிக்க வானொலி நாடக நடிகரைப் படிக்க வைத்தோம்’ என்றார்.

“நன்றாகப் படித்தார். கேட்க சந்தோஷமாக இருந்தது.”

“நல்ல கதைதான். ஆனால் கொஞ்சம் நெருடக்கூடிய கதை. இம்மாதிரியான கதைகளை எல்லாம் வழக்கமாக வானொலியில் ஒலிபரப்ப மாட்டார்கள். ஆனால் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் ஒலிபரப்பினோம். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமான பேர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.”

நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

“ஆறு மாதத்திற்கு ஒரு சிறுகதை கொடுங்கள் ஒலி பரப்பலாம்.”

ராஜாஜி அரங்கில் நடைபெற்றத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் அகிலனை ஒரு முறை சந்தித்தேன். அவர் சாகித்ய அகாதெமிக்காக, தமிழ்ச் சிறுகதைகள் என்றொரு தொகுப்பைக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். நான் கேட்டுக்கொண்டேன்.

“உயிர்கள்’ என்ற உங்கள் கதையைத் தேர்ந்து எடுத்திருக்கிறேன். உங்களுக்கு வேறு கதையைச் சேர்க்கலாம் என்ற கருத்து இருக்கிறதா” என்று கேட்டார்.

“உங்கள் தேர்வே என் தேர்வு” என்றேன்.

“சாகித்ய அகாதெமியில் இருந்து முறையான கடிதம் வரும். பதில் எழுதிவிடுங்கள்” என்றார்.

நான் கரம் குவித்தேன்.

சாகித்ய அகாதெமியில் இருந்து கடிதம் வரவில்லை. அகிலன் 1988-ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். அவர் தொகுப்பில் இடம் பெறாமல் போன அவருக்கு நெருக்கமான பிரபல எழுத்தாளர்கள் சண்டை போட்டு தொகுப்பு வெளிவராமல் முடக்கிவிட்டார்கள் என்று பின்னால் தெரிய வந்தது.

1993-ஆம் ஆண்டில் அகிலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பை சாகித்ய அகாதெமி வெளியிட்டது. தொகுப்பாசிரியர் அகிலன் என்று பெயர் இருந்தது. அதில் அவர் தேர்ந்தெடுத்த “உயிர்கள்’ சிறுகதை இருந்தது. அது “மஞ்சரி”யில் மறுபிரசுரமானது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’யில் வெளிவந்தது.

  • சா.கந்தசாமி
    நன்றி: தினமணி