
“இப்போ எதுக்குடி போன் பண்ணினே..”
“ஒன்னுமில்ல அத்தான் ரெண்டு மூனு நாளா
மனசு சரியில்ல..”
“உனக்கு மனசு சரியில்லாட்டி எனக்கு எதுக்குடி போன் பண்ற
முட்டாள்தனமா..”
“என்னை முட்டாள்னு சொல்லு.. ஒத்துக்கறேன்த்தா.
ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “
“லூசு.. நானே டாக்டரு.. எனக்குத் தெரியாதா.. என் உடம்பைப் பார்த்துக்க.. கனவு அதுஇதுனு முட்டாள்தனமா உளறாதே”
கட் கட் கட்.
“ம்ம்ம்..”
“என்னத்தான் வழக்கம் போல ரொம்ப ப்ஸியா “
“தெரியுதுல்ல..”
அவள் போனை வைத்துவிட்டாள்.
அன்றைக்கு என்னவோ அவள் கூட இரண்டு வார்த்தைகள்
பேசி இருக்க கூடாதானு மனசில முதல் முறையா சின்னதா
ஒரு ஏக்கம் வந்திச்சி..
இதுக்கு முந்தி அவ போன் பண்ணினப்போ வந்தக் கோபம்
எரிச்சல் இப்போ இல்ல. அது ஏன்னு தெரியல.
எப்போதும் அவன் குரல் கேட்டவுடன் விரியும் புன்னகையோட
கேட்கும் அவ குரலில் இன்னிக்கு எதோ இனம்புரியாதப் பதட்டம்..தெரிஞ்சுது.
அவள் ஏன் இப்படி இருக்கா..
அவள் இப்படி இருக்கறதாலேதான் அவள முழுசா ஒதுக்கிட முடியலயா
இப்போதும் அவ எங்கேயோ அவனுக்குள்ள இருக்காளா..
அவள் பேசிய ஒவ்வொரு போன் காலும் நினைவுக்கு வந்துச்சு..
“ஒன்னுமில்லேங்க .. இன்னிக்கி சித்திரை பெளர்ணமி ஆச்சே.
உங்கப் பொறந்த நாளில்லே.. அதுதான்.. ..”
“சரி.. சொல்லிட்டே இல்ல.. இப்போ போனை வையி கீழே..”
“அய்யோ நானு இன்னும் சொல்லவே இல்லையே ஹப்பி பெர்த் டே னு.”
“சர்ரி..போதும். பை.”
சரியான நியுசென்ஸ்.. இவளோட.தொந்திரவு ..
காலச்சுத்தின பாம்பு மாதிரி சனியன் எப்போ பாரு..ன்னை ந்னைனு.
தொலைய மாட்டேங்கு..
பிஸியான வாழ்க்கை.
எப்போதாவது வருஷத்திற்கு ரெண்டுதடவையோ மூணு தடவையோ
அவள் மறக்காம போன் செய்றா.. 40 வருஷமாகுது.. அவள லூசுனு
சொல்றதா என்னனு சொல்றது. அது என்னவோ தெரியல
அவள எல்லாத்திலேயும் வேண்டாம்னு ஒதுக்கிவச்சவனால
அவள ப்ளாக் பண்ண முடியல. எதோ ஒன்னு இப்போவும் அதைச்
செய்யவிடாமா அவனத் தடுத்து வச்சிருக்குப் போல.

*
வீட்டில் சொத்துப்பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.
அண்ணன் தம்பி சண்டைகள்..
இது காணாதுனு ஹார்ட் அட்டாக் வந்த நாளிலிருந்து
மனைவி மகள்கள் மருமகன்கள் எல்லோருமே அவன் உயில்
எழுதி வச்சிடனும்னு அடிக்கடி நினைவுப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
3 பொண்ணுகள் வசதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் சொத்துப்பிரச்சனைனு வரும்போது எல்லோருமே பிச்சைக்காரிகள்
ஆகிவிடுகிறார்கள். மனைவிக்கு எப்போதும் வீடு வாசல் அவள் பெயரில்
இருக்க வேண்டும் என்று ஆசை. ஆரம்பத்தில் வரிப்பிரச்சனைக்காக
அவள் பெயரில் வீடு வாங்கியதுதான் தப்பாகிவிட்டது. இப்போ
உட்கார்ந்து கூட்டி கழிச்சிப்பார்த்தா அவன் பெயரில் எந்தச் சொத்தும்
இல்லை… பேங்கில் சில இலட்சங்கள் தவிர.
அவனும் ஓடிக்கொண்டே இருந்தான். பணத்தைச் சேர்த்துக்கொண்டே
இருந்தான். பதவி கெளரவம் அந்தஸ்த்து எல்லாமும் வேணும் வேணும்னு
சேர்த்தாச்சு.
வயதான அவன் அம்மாவுக்கு ஊரிலிருக்கும் சொத்து நம்ம கைக்கு
வருமா என்ற கவலைதான். அவள் வேறு தன் பங்கிற்கு
எதுக்கும் ஒரு தடவை ஊருப்பக்கம் போயிட்டு வந்துருப்பா..
அந்த தோட்டத்தில குடியிருக்க குடிசைப்போட்டுக்கோனு
உங்க தாத்தா கொடுத்த தோட்டமும் வீடும்தான் தேவி இருக்கிற வீடு.
எப்படிப்பார்த்தாலும் இன்னிக்கு அந்த தோட்டத்தோட மதிப்பு
கோடிக்கணக்கில போகும். நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
தேவியைப் போய் பார்க்கனும்னு ஒரு நாள் கூட தோணல.
பயமா என்னனு தெரியல. போனா அந்த மோகினிப்பேய் பிடிச்சிக்கும்னு
நினைச்சான்.. தேவி கல்யாணம் பண்ணிக்கல. அவ கல்யாணம் ஏன்
பண்ணிக்கலனு யாரும் கேட்கவும் இல்ல. யாருக்கும் அதப்பத்தி கவலையும்
இல்ல. அதைக் கேட்டப்போ கூட அதுவும் அவளுக்கு விளையாட்டா
தெரிஞ்சுது.
“ஊருக்கு எப்போ வருவே அத்தான்?”
“உன் கல்யாணத்திற்கு வாரேன்..”
அவள் சத்தமா சிரிச்சா..
“என் கல்யாணத்திற்கா.. அப்போ என் கருமாதிக்குதான் வருவே..”
“உனக்குனு ஒருத்தன் பிறக்காமல இருக்கப்போறான்.
எதாவது கருவாடு விக்கறவன் கூடவா கிடைக்கல”
“கிடைப்பான் கிடைப்பான் , ஏன் கிடைக்கமாட்டான்.?
எவன் கிடைச்சாலும் ரெண்டு மார்லேயும்
உன் பேரைக்குத்தி வச்சிருக்கேனே.. அதப் பார்த்திட்டு
மொத ராத்திரியிலேயே ஓடிப்போய்டுவான்!”
“லூசு.. லூசு..”
அவ பேசறதெல்லாமே லூசுத்தனமாத்தான் இருக்கும். ஒரு நாள் இப்படித்தான் உங்க பழைய சாக்சை என்ன செய்வீங்க அதில ரெண்ட எனக்கு அனுப்பக் கூடாதானா கேட்டப்போ உண்மையிலேயே அவனுக்கு சிரிப்பு வந்திடுச்சி.
இப்படி பேசறவள் லூசுனு சொல்லாம வேறு என்ன சொல்றது?
**
‘சொல்லிட்டே இருந்தேன்.. நீ எங்க காதில வாங்கின.
இப்போ பாரு.. நீ வாரேனு சொல்லி ஒரு வாரத்தில
அவ மண்டையைப் போட்டுட்டா பாரு.. ..
‘பெரிய தோட்டம், தண்ணி வத்தாத கிணறு..
ஆண்டு அனுபவிச்சிருக்கா.. ஊர்ல எவனெவனெல்லாம் இப்போ அதில
பங்கு கேட்கப்போறானோ!
அவ உயிரோட இருக்கும்போதே போயி உன் பேர்லே
எழுதி வாங்கிட்டு வந்திருனு சொல்லிட்டே இருந்தா
உனக்கும் புரியல, உன் பொண்டாட்டியும் உன்ன விடல.
இப்போ அந்த இடத்தில ஒரு செண்டு வாங்கமுடியுமா?”
அம்மா காலையிலிருந்தே புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
டிரைவரிடம் சொல்லி வண்டியை எடுத்துக்கொண்டு
கிளம்பற வரைக்கும் அம்மாவுக்கு ஊருக்குப் போறோம்னு
நம்பிக்கை வரல.
ஒரு வழியா அம்மாவையும் அழைத்துக்கொண்டு
எட்டுவழிச்சாலையில் வண்டி விரைந்தது.
இரவே செய்தி வந்துவிட்டதால் காலையில் 7 மணிக்கெல்லாம்
கிளம்பிட்டான்.
அம்மாவுக்கு அவ பிறந்த ஊருக்கு பல வருஷம் கழிச்சிப் போறா
சந்தோஷமா சாவு வீட்டுக்கு போறோமேனு நினைப்பா, இல்ல
சொத்து நமக்கு கைக்கு வருமானு கவலையா.. தெரியல.
அவளோடு அப்பா வீட்டுத் தோட்டம். அம்மாவோட சொத்து.
அவ ஒரே மகள் சட்டப்படி சொத்து அம்மாவுக்குத்தான் வரும்.
பார்க்கலாம்.. என்ன செய்யறதுனு யோசிக்கனும்..
என்னவெல்லாமோ நினைவுகள் வந்து அலைக்கழிச்சுது.
பொதுவா நீண்ட பயணங்களில் பின் சீட்டில் உட்கார்ந்து
கொஞ்ச நேரம் கண்மூடி ஓய்வெடுப்பதுண்டு.
அல்லது அவனுக்குப் பிடித்தமான பழைய பாடல்களைக்
கேட்பதுண்டு.
‘அத்தான் என்னத்தான் அது உன்னைத்தான்.. ‘ பாடல் கட்டாயம் ஒலிக்கும்.
அந்தப்பாடல் ஆரம்பித்தவுடன் கண்களை மூடிக்கொள்வான்.
பாட்டு முடியும் போது.. ‘அந்த லூசு அத்தான் அத்தான்னு அழைப்பது
காதில் விழும்.. அந்த அத்தான் அத்தான் என்றைக்கும் இல்லாமல் இன்று அவன் பயணம் நெடுக அவனைத் துரத்திக் கொண்டே இருந்தமாதிரி..
அவன் என்ன செய்வதுனு தெரியாமல் பாடலை நிறுத்திவிட்டு சன்னலைத் திறந்து வைத்துக்கொண்டான்.
வெளிக்காற்று முகத்தில் அறைந்தது.
அம்மா மூக்குக்கண்ணாடிக்குள் கண்களை மூடிக்கொண்டு
சின்னதா குறட்டை ஒலியுடன் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
அம்மா ஒரு தனிரகம்.
எதுவும் அவளைப் பாதிப்பதில்லை.
எதோ விளையாட்டுத்தனமா .. அவ வயசுக்கு வந்தவுடனே
பட்டுப்பாவடை வாங்கிக்கொடுத்து பூச்சூடி பொங்கிப்போட்டு
தலைக்கு தண்ணி ஊத்தி தீட்டுக்கழிச்சப்போ..
எம்மவனுக்கு இவளத்தான் கட்டிக்கப்போறேன்னு சொல்லிட்டாளாம்.
இந்த லூசு அதை அப்படியே நம்பிடுச்சி. அவ்வளவுதான்.
அப்புறம் அவன் பெரிய ஆஸ்பத்திரியில பெரிய டாக்டரா ஆகி
பெரிய இடத்தில பொண்ண கட்டிக்கிட்டு பெரிய மனுஷனா செட்டிலாகி..
பெரிய பெரிய இடத்துக்கு வந்தாச்சு..
பள்ளிக்கூடம் படிக்கறப்போ என் கூடவே மூக்கை வடிச்சிக்கிட்டு’
ரெட்டைப்பின்னல் கட்டிக்கிட்டு வருவா.
அப்புறம் அவன் காலேஜ்லே சேர்ந்தப்போ ஒரு தடவை தாத்தாவைப்
பார்க்கப்போனப்போ அதே ரெட்டைப்பின்னலோட
‘அத்தான் சுகமா இருக்கேளானு” கேட்டா.
அதே தெத்துப்பல்லு. கறுப்பு கன்னத்தில
நாவல் பழத்தின் மினுமினுப்பு.
அதே ரெட்டைப்பின்னல். தாவணிப்போட்டிருந்தா..
அவன் முன்னால அதிக நேரம் வரல.
வெட்கப்பட்டாளானு தெரியல.
ஆனா என்னவோ அன்னிக்கு அவள் ரொம்ப அழகா இருக்கிற மாதிரி அவனுக்கு தோணிச்சி.
அதுக்குப்பிறகு அவளப் பார்க்கல அவன்.
அவ ஏன் இப்படி லூசுத்தனமா இருக்கானு புரிஞ்சிக்க முடியல.
அதைப் பத்தி எல்லாம் நினைக்க அவன் பிஸி வாழ்க்கையில
நேரமும் இல்ல..
அவன் படிப்பு பணம் அந்தஸ்த்து இந்த வாழ்க்கையில
அவ எந்த இடத்தில
அவனோட பொருத்திக்கிட்டானு புரியல.
அன்னிக்கு இருந்த அவனோ அவன் அம்மாவோ
இன்னிக்கு இல்லைதானே.!
இன்னிக்கு அவனோட கார்டிரைவருக்கு கூட ஆப்பிள் போன் வாங்கி
கொடுத்திருக்கான். . இத எல்லாம் அவ ஏன் புரிஞ்சிக்கல. சரியான பட்டிக்காடு, லூசு. முட்டாள்.
ஊர் நெருங்கிவிட்டது. எட்டுவழிச்சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குச் செல்லும் ரோட்டில் போக ஆரம்பிக்கும்போதே டிராபிக் ஆரம்பித்துவிட்டது.
அவன் வண்டிக்கு முன்னால் பல வண்டிகள், ஜீப்புகள், ஸ்கூட்டர்கள்..
வரிசையாக ஹாரன் அடித்துக்கொண்டு..
அதில் சிலர் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் சுமாரா இருந்த
காபிக்கடையில் அம்மாவுக்கு காஃபி வாங்கப்போன டிரைவர் வந்து சொன்னப்பிறகுதான் டிராபிக்கின் காரணமே புரிந்தது.
கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது.
ஆமாம் அவளோட பேரு தேவி தான். அவ சாவுக்கு வந்திருக்கும்
கூட்டம்… நம்ப முடியவில்லை. லூசு தேவிக்கா இவ்வளவு கூட்டம்!
சார் .. இறங்கி நடந்துப்போனா தான் மய்யம் எடுக்கறதுக்குள்ள போக
முடியும். கலெக்டர் வரேன்னு சொன்னதால கொஞ்சம் வெயிட் பண்றாங்களாம்! இப்போதான் எங்க வூட்ல இருந்து போன் வந்திச்சி.
மவராசி… சுத்துப்பத்தில இருக்கிற வீட்டுக்க்கெல்லாம் விளக்கேத்தினவா..
அவ படிக்க வச்ச பிள்ளைங்களே இந்த சுத்துப்பட்டு கிராமத்தில
நூற்றிக்கணக்கில இருப்பாங்க. கடுமையான உழைப்பாளிய்யா.
நல்ல சாக்காலம். தூக்கத்திலேயே உசிரு போய்ட்டாம்.
மவராசி… ‘
காபிக்கடையில் கண்ணாடி க்ளாசை வைக்கும்போது கடைக்காரர் சொல்ல சொல்ல மடக்கு மடக்குனு குடிச்ச சுக்கு காபி
நெஞ்சுக்குழியை எரிச்ச மாதிரி எரிய ஆரம்பிச்சுது.
“சார், நானும் கடை மூடிட்டு கிளம்பறேன்.
அம்மாவை வேணும்னா சைக்கிள் பின்னால உட்காரச்சொல்லுங்க.
நீங்க அப்படியே அந்த ஓடையைத் தாண்டி குளத்தங்கரை வழியா ரெண்டு
எட்டு வேகமா நடந்தா அரைமணிக்கூர்ல வந்திடலாம்.
இதுக்கு மேல கடையை திறந்தி வச்சிருக்க முடியாது.
இது கூட அவ சாவுக்கு தூரத்தில இருந்து வருத ஆட்களுக்கு
ஒருவாய் காபித்தண்ணி போட்டுக்குடுய்யானு என் பொண்டாட்டியும் மவளும் விரட்டினாங்கனுதான் வந்தேன்.. எம் மவ கல்யாணத்துக்கு கூட தன் கையில போட்டிருந்த முத்துவளையல கடைசியா கழத்திக்கொடுத்திச்சுய்யா…
அதெல்லாம் மனுஷப்பிறவி இல்லய்யா.. தெய்வப்பிறவிய்யா…”
… அம்மா எப்படியோ தன் பட்டுப்புடவையை எடுத்து சொருகிக்கொண்டு
சைக்கிள் பின்பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். ஓடையில் முழங்கால் வரை தண்ணி ஓடிச்சி. ஷூவை கழட்டிக் கையில வச்சிக்கிட்டு சாக்சை கழட்டும் போது கை நடுக்கம் எடுத்துச்சு.
அவள் அருகில் நெருங்க முடியலை. அவ்வளவு கூட்டம். அந்தக் கூட்டத்தில் பிணமா படுத்திருக்கும் அவளைத் தவிர அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறமாதிரி தெரியல. இதுவே சென்னை சிட்டியா இருந்தா எந்தக் கூட்டத்திலும் அவனை அடையாளம் கண்டுப்பாங்க. இல்லாட்டாலும் அவன் கையில கட்டியிருக்கும் விலையுயர்ந்த வாட்ச், அவன் ஷ்ர்ட், அவன் பளபளக்கும் ஷூ இதெல்லாம் அவனோட ஸ்டேட்டசைக் அடையாளப்படுத்தி அவனுக்கு மற்றவர்கள் ஒதுங்கி நின்று முன்வரிசையைக் கொடுக்க வச்சிடும்.
இங்க யாரும் அவனைக் கண்டுக்கல. கலைக்டர் வந்தவுடனே கூட்டம் ஒதுங்கி அவருக்கு இடம் கொடுத்திச்சி. அவரு கொண்டுவந்திருந்த மலர்வளையத்தை கால்மாட்டில வச்சிட்டு கையெடுத்துக் கும்பிட்டாரு.
நன்றி மறக்கல, இந்தப் பையன், பாருங்களேன் வந்துட்டாருனு கூட்டத்தில
யாரோ சொன்னது அவன் காதில விழுந்திச்சு. இன்னும் யாராவது அக்கா முகத்தைப் பார்க்கனும்னா கடைசியா ஒரு முறை வந்துப் பார்த்துக்கோங்க..
அவளைத் தூக்குவதற்கு ரெடியாக இருந்தப்போ யாரோ ஊருப்பெரியவர் சத்தமா சொன்னது அவன் காதில் விழுந்துச்சு.
‘அத்தான்.. வந்துட்டியா…
நீ வருவேன்னு தெரியும்த்தான்.. “
அவள் குரல் அவன் காதுக்கருகில் ஒலித்தது.
அவனையும் அறியாமல் அவன் கூட்ட நெரிசலை தள்ளிக்கொண்டு அவளருகில் போனான். என்ன செய்கிறோம்னு ஒரு நிமிடம் அவனுக்கே புரியல. அவன் காலில் போட்டிருந்த ஷூ சாக்சை கழட்டி அவள் பாதங்களில் மாட்டிவிட்டான். அவள் பாதமிரண்டும் குளிர்ந்து பனிக்கட்டிமாதிரி விறைப்பா இருந்திச்சி. அவளோட காலிரண்டின் பெருவிரல்களை இணைத்துக் கட்டி இருந்த கயிறு அறுந்து விழுந்துச்சு.
அவன் அவள் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துப் பிடித்துக்கொண்டு முதல்முறையாக குனிந்து முத்தமிட்டான். எங்கோ தூரத்தில் கூட்டத்தில் இருந்த அவன் அம்மா வாயில் புடவையை வைத்து மூடிக்கொண்டு
விம்மி அழுதாள்.
இப்போதுதான் முதல் முறையாக கூட்டத்திலிருந்தவர்கள் அவன் யாராக இருக்கும் என்று அவனைத் திரும்பி பார்த்தார்கள்.
*

நல்ல கதை அசத்தல் வி ரணை! இந்த க்ளிசே முடிவைத் தாண்டி வர முடியாதா?
#
சிறகு இரவி
மனதிற்குள்ளாக இருவர் நேரடியாக உரையாடலை நிகழ்த்துவதைபோல உணர்வு ஏற்படுகிறது புதியமாதவியின் கருமாதி பந்தல்