
முகநூல் பதிவு : ஆர்.கந்தசாமி
1970-ஆம் ஆண்டில் சென்னை வாலாஜா சாலையில் இருந்த க.நா.சுப்ரமணியம் வீட்டில் தான் சுந்தர ராமசாமியைப் பார்த்தேன்.
“என்னை சுந்தர ராமசாமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “கசடதபற’ ஆள். சிறுகதைகள், நாவல் எழுதியிருக்கிறார்” என்றார். சுந்தர ராமசாமி என்னை நிமிர்ந்து பார்த்து லேசாக முறுவலித்தார். அது தெரியும் என்பது போலப்பட்டது. ஆனால், அவர் ஒன்றும் பேசவில்லை. க.நா.சுப்ரமணியம் தமிழ், கன்னட, மலையாள இலக்கியங்கள், இலக்கிய ஆசிரியர்கள் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவர் தில்லியில் சில ஆண்டுகள் வசித்துவிட்டு வந்திருந்தார். “வங்காளிகள் தாகூரை வைத்துக் கொண்டு வீண் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள். அது தில்லியில் நன்றாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. விரைவில் இந்தியா முழுவதற்கும் தெரிந்துவிடும்’ என்றார்.
அவர்கள் வெகு நேரமாகப் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் போலும். எனவே காபி சாப்பிட என்னையும் அழைத்துக் கொண்டு டிரைவ் இன் ஓட்டலுக்குச் சென்றார்கள். மசால் தோசை சாப்பிட்டுவிட்டு காபி சாப்பிட்டோம்.
சுந்தர ராமசாமி தான் பேசுவதை விட, இன்னொருவர் பேசுவதை காது கொடுத்து கேட்கக்கூடியவராக இருந்தார். இடையில் புகுந்து பேசக் கூடியவராக இல்லை. நான் ஏழெட்டு முறை சென்னை, மைசூர், தில்லியில் சந்தித்ததிலிருந்து தெரிந்து கொண்டது. அவர் மகிழ்ச்சிகரமான மனிதராகவே இருந்தார். அவருடைய ஒரே மகள் கேன்சர் கண்டு காலமான பின்னர் சென்னையில் சந்தித்தேன். அப்பொழுது பேசும் நிலையிலோ கேட்கும் நிலையிலோ அவர் இல்லை. அவரை நான் சந்தித்த போது அவர் மிகுந்க வருத்தமுடன் இருந்துதான் தெரிந்தது. அவர் எனக்குப் படிக்கவென்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லசீடர் மகேந்திர குமார் டைரியைப் படிக்க சிபாரிசு செய்தார். கூடவே “தமிழ் வேண்டாம். ஆங்கிலம் படியுங்கள்” என்றார்.
அவருக்கு உற்ற நண்பர் என்றால் கிருஷ்ணன் நம்பிதான். அவரின் “நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்தீர்களா என்று கேட்டார். ஆனால் அவர் ஒருபொழுதும் தன் படைப்புகளை படித்திருக்கிறீர்களா என்று கேட்டது இல்லை. ஆனால் அவர் க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன், மெளனி, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா பற்றிப் பேசக் கூடியவராக இருந்தார். தி.ஜானகிராமன் படைப்புகள் அவரை வசீகரித்திருந்தன.
அவரை படைப்பு எழுத்தாளர், இலக்கியப் பிரசரகர் என்றே குறிப்பிட வேண்டும். அவருக்குத் தன் இலக்கியப்படிப்பு மீதும் அவை பற்றி சொல்லும் கருத்துகள் மீதும் அதிகமான நம்பிக்கை இருந்தது.
பிரபல சினிமா ஆர்ட் டைரக்டரான பி.கிருஷ்ணமூர்த்தி ஜி.வி.ஐயரிடம் உருவானவர். ஐயர் படங்களிலும், மலையாள படங்களிலும் கலை இயக்குநராகப் பணியாற்றி தேசிய விருது பெற்றவர். அவருக்கு சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை’யை, தேசிய திரைப்பட வளர்ச்சி வாரியத்தின் உதவியால் படம் எடுக்க வேண்டுமென்று விருப்பம் இருந்தது. அவர் சுந்தர ராமசாமியிடம் உரிமை வாங்கிக் கொண்டு திரைப்படம் எடுக்க விண்ணப்பித்தார். சில ஆண்டுகள் அதே வேலையாக கிருஷ்ணமூர்த்தி அலைந்தார். ஆனால்” ஒரு புளிய மரத்தின் கதை’ சினிமா படமாக வரவில்லை.
ஓர் எழுத்தாளன் படைப்பு சினிமா படமாவதும் மொழி பெயர்க்கப்படுவதும் அவர் சம்பந்தப்பட்ட காரியமல்ல. அவற்றில் ஈடுபாடு கொண்ட யார் யாரோ செய்வது. எழுத்தாளர் ஒரே பணி எழுதுவது தான். உனக்கு உகந்ததாகப்படுவதை தனக்கு உகந்த முறையில் எழுதுவதுதான். அதைத்தான் சுந்தரராமசாமி செய்து வந்தார்.
சாகித்ய அகாதெமிக்காக தகழி சிவசங்கரன் பிள்ளையின் “செம்மீன்’ நாவலை மொழி பெயர்த்தார். அது தான் அதிகமாகப் படிக்கப்படும் மலையாள நாவல் அதற்கு சுந்தர ராமசாமி மொழி பெயர்ப்புதான் காரணம். மொழி பெயர்ப்பு நாவல்கள், சிறுகதைகள் பற்றி எத்தனைத்தான் உயர்வாகச் சொல்லப்பட்டாலும், தானே படித்து விமர்சனம் செய்ய மொழி பெயர்ப்புளே காரணமாகின்றன.
நவீன தமிழ் எழுத்தாளர்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். அவரது “ஒரு புளிய மரத்தின் கதை’ ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஐரோப்பிய மொழியான ஹீப்ருவிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
இலக்கியத்தில் அவர் திறந்த மனம் கொண்டவர். தனக்குப் பிடித்த அசலான எழுத்தாளர்கள் பற்றிய நினைவுகளை நினைவோடை என்ற தலைப்பில் மனதில் தோன்றிய முறையில் பதிவு செய்து உள்ளார். அதில் அரசியல் இல்லை. சொந்த விருப்பம் கிடையாது. அவர் நினைவோடைகள் பல எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிரியமானவர்கள் பற்றி யோசிக்கவும், எழுதவும் வைப்பது தான்.
அவர் நினைவோடையில் க.நா.சுப்ரமணியம், மெளனி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், தொ.மு.சி.ரகுநாதன், பிரமிள், கிருஷ்ணன் நம்பி எல்லோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
சுந்தர ராமசாமி ஒரு செயற்பாட்டாளர். தான் எழுதி பெயர், விருது பெற வேண்டும் என்று மட்டும் இருந்தவர் கிடையாது. தமிழ்நாட்டில் செழிப்பான இலக்கியச்சூழல் ஏற்பட வேண்டும்; தரமான படைப்புகள் எழுதப்படவேண்டும்; அவை வாசிக்கப்பட்டு பொது அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பியவர். அதற்காக அவர் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார்; இலக்கியக் கூட்டங்களில் பேசினார்.
ஒரு சமயத்தில் அவை மட்டும் காணாது என்று கருதி 1988-ஆம் ஆண்டில் காலச்சுவடு- என்ற இலக்கியக் காலாண்டு இதழைத் தொடங்கினார். ஆனால் தொடர்ந்து அவரால் நடத்த முடியவில்லை. நிறுத்திவிட்டார். அவர் மகன் கண்ணன் எடுத்து நடத்துகிறார்.
2003-ஆம் ஆண்டில் நான் ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள் என்று ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தேன். சிலரிடம் அனுமதி கேட்கவில்லை. சிலரிடம் கடிதம் எழுதி அனுமதி கேட்டேன். பலரிடம் வாய்மொழியாகவே அனுமதி கோரினேன். பலரும் அனுமதி வழங்கினார்கள்.
“கதா சூடாமணி விருது’ வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு “ஆயாராம் சோயாராம்’ என்ற சிறுகதையை ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் சேர்க்க அனுமதி கேட்டேன்.
“பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்
“கடிதம் எழுத வேண்டுமா?”
“எதற்குக் கடிதம். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
“உங்கள் அப்பா பெயரை எப்படி எழுதுவது? ”
“எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் என்றே எழுதுங்கள்” என்றார்.
கதா சூடாமணி விருது விழா முடிந்ததும் அடுத்த நாள் சாகித்ய அகாதெமி கலையரங்களில், “நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் எந்தக் காரியத்தையும் ஒழுங்காக, அதுவும் இலக்கியம் சம்பந்தப்பட்டது பதிவு செய்யப்பட வேண்டுமென்று நினைக்கிறவர். அவர் உரை தமிழில் இருந்தது. அது அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. என்ன அச்சிடப்பட்டிருந்ததோ அதையே பேசினார்.
1988-ஆம் ஆண்டில் மலையாள கவி குமரன் ஆசான் விருதும். 2001-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் தமிழ் ஆளுமைகளுக்கு கனடாவில் இருந்து வழங்கும் வாழ்நாள் சாதனை இயல் விருதும் அவருக்கு வழங்கப்பட்டன.
அவருக்கு இலக்கியப் பரிசுகள் மீது குறிப்பாகத் தமிழ் மொழிக்கு வழங்கப்படும் விருதுகள் மீது கோபம். அது தனக்கு வழங்கப்படவில்லை என்பதால் ஏற்பட்டதில்லை. அசலான, முதல் தரமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதாலும், தர மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதாலும் ஏற்பட்டது.
1998-ஆம் ஆண்டில் எனக்கு “விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படுவதாக தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. காலையில் சில எழுத்தாளர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவர்களில் நான் மதிக்கும் சுந்தர ராமசாமியும் இருந்தார். அவர் சொன்னார்: “நல்வாழ்த்துகள் கந்தசாமி, க.நா.சுப்ரமணியம் இருந்தால் நீங்கள் சாகித்ய அகாதெமி விருது பெறுவதைக் கண்டு ரொம்ப சந்தோஷப்படுவார்’ என்று.
அவருக்கு அறுபத்தேழு வயதாகியிருந்தது. நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள், மொழி பெயர்ப்புகள், இலக்கியக்கட்டுரைகள் என்று பலவும் தரமாகவே எழுதி பெயர் பெற்று இருந்தார். அவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கும். வாழ்த்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் வருமென்றே இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 2005-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் காலமாகிவிட்டார்.
சுந்தர ராமசாமி இல்லாமல் போனவர் இல்லை; தமிழ் இலக்கியப் பரப்பில் என்றும் இருக்கிறவர்.
–
