தாரை வார்த்தல்/தங்கேஸ்

மீன்களின் சுவை
தெரியும் யாருக்கும்
நீந்துதலின் சுவை தெரியாது

ஒரு கைப்பிடி நதியை
என் உள்ளங்கைகளுக்குள்
தேக்கி வைத்திருந்த சமயம்
வானமும் கடலும்
கூடிக்களிக்கின்றன

கத கதப்பான மீன்குஞ்சுகளின் செதில்கள்
விரல்களை பரிவாய்
உரசிச் செல்கின்றன

நுனி நதியில் அட்சரம் எழுதிப்போகும்
நீர் பூச்சிகளும்

சுழலில் கிறு கிறு வண்ணம்
சுற்றும்
முதிர் சிறகுகளும்

அலை நெளிவுகளில்
புனல் நாட்டியம் பழகும் நீர் பாம்புகளும்

படித்துறையில் வெண்பட்டு விரிக்கும்
நுரைப்பூக்களும்

கரையில் நிற்கும் ஒருவனுக்கு
கடவுள் சாட்சியாய்
நதியை தாரை வார்த்துக் கொடுக்கின்றன

One Comment on “தாரை வார்த்தல்/தங்கேஸ்”

Comments are closed.