இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

வணக்கம் அன்பர்களே..

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்..

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

அதை மீண்டும் பதிவு செய்து அந்த மேதையை வணங்குகிறேன்..

இதோ உங்களுக்காக..

என்னுடைய புது நாடகம் அரங்கேறி இரண்டாவதோ மூன்றாவதோ காட்சி மைலாபூர் கிளப்பில் நடந்தது..

நாடகத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த அந்த பிரபலத்தைக் கண்டதும் எங்களுக்கெல்லாம் தலை கால் புரியவில்லை.. எல்லோரும் அதிக அக்கரை எடுத்துக் கொண்டு நடித்தோம்.. மைலாபூர் கிளப் ரசிகர்களுக்கிடையே எங்கள் நாடகத்துக்கு பலத்த வரவேற்பு..

நாடகம் முடிந்து.. மேக்கப் கலைத்து.. வெளியே வந்தேன்..

அங்கே அந்த பிரபலம் நின்றிருந்தார்..

“வாய்யா.. நீ தான் இந்த நாடகத்தை எழுதினியாம்.. சபாஷ்”

இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷத்தில் எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை..

“நன்றி சார்.. நன்றி சார்”

என்று உணர்ச்சிவசப் பட்டேன்..

”நாடகம் ரொம்ப நல்லா இருந்தது.. காத்தாடிய பத்தி அவன் கிட்டயே சொல்லிட்டேன்.. அதனால உங்கிட்ட சொல்ல மாட்டேன்.. வசனங்கள்லாம் ரொம்ப நல்லா இருந்தது.. ஆனா அந்த இடத்துல..”

என்று ஆரம்பித்து ஒரு சில காட்சிகளை எப்படி இன்னும் மெருகேற்றலாம் என்று சொன்னார்.. சில வசனங்களை அவர் பாணியில் சொல்லியும் காட்டினார்.. நானும் என் கூட இருந்த எங்கள் குழு நண்பர்களும் அசந்து போனோம்..

எப்பேர்பட்ட நடிகர்..

அதன் பிறகு.. தான் நடித்த நாடகங்கள் பற்றி நிறைய பேசினார்.. ஒவ்வொரு நாடகத்துக்கும் தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி விவரித்தார்..

”ஒரு தடவை.. ரொம்ப நாள் முன்னால.. தொலைக் காட்சில ஒரு நாடகத்துல நடிக்க ஒப்பந்தம் பண்ணினாங்க.. ஜோசப் அனந்தன் ஸ்க்ரிப்டுன்னு நினைக்கறேன்.. சீரியஸான டாக்டர் ரோல்.. ஒத்திகை பார்க்கும் போதே என்னால முடியாதுன்னு அந்த இடத்துலேர்ந்தே ஓடிட்டேன்.. ஆனா அவங்க என்னை விடாம துரத்திட்டு வந்து.. நீ தான் பண்ணணும்னு அடம் பிடிச்சாங்க.. வேற வழி இல்லாம பயந்துக் கிட்டேப் பண்ணினேன்.. ஆனா நான் எதிர்பார்க்காத விதமா நல்ல பேர் கிடைச்சது.. ஒரு வேளை மத்தவங்கலாம் என்னை விட மோசமாப் பண்ணினாங்களோ என்னவோ”

சிரிக்காமல் அவர் பாணியில் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம்.

அவ்வளவு பெரிய நடிகர்.. இதையெல்லாம் எங்களிடம் சொல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை.. ஆனால் துளிக் கூடத் தயக்கம் இல்லாமல் மனம் விட்டுப் பேசினார்..

“மறுபடியும் நாடகத்துல நடிக்கணும்னு ஆசை தான்.. ஆசை இருந்து என்ன பண்ண? கடந்து ரொம்ப தூரம் வந்தாச்சு.. இனிமே முடியாது..”

வருத்தத்துடன் சொன்னார்.. ஏன் என்று நான் கேட்கவில்லை.. புரிந்தது..

திரைப் படத்துறையில் ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த அவமானங்களையும்.. பிரச்சனைகளையும் அவர் சொல்லச் சொல்ல..

இத்தனையும் தாண்டி இவரால் எப்படி சிகரம் தொட முடிந்தது என்று வியந்தேன்..

அங்கீகாரம் கிடைத்த பிறகு ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்.. நான்கு கால்ஷீட் என்று ஓடி ஓடி நடித்ததைப் பற்றிச் சொன்னார்.. இரண்டு மணி நேரம் கூட தூக்கம் இருக்காதாம்.. கிடைத்த நேரத்தில்.. கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்து விடுவாராம்.. ஷாட் ரெடியானதும் எழுப்புவார்களாம்..

நேரமாகிக் கொண்டே போனது.. ஆனால் எங்களுக்கு அவர் பேச்சை நிறுத்த மனமில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தோம்..

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்..

“நேரமாச்சு.. கிளம்பலாமா?”

அவரே சொன்ன பிறகு தான் எங்களுக்குக் கிளம்ப வேண்டும் என்ற நினைப்பு வந்தது..

காரில் அவர் புறப்பட்ட பிறகு.. அவர் போன திக்கையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்..

திருவிளையாடல் தருமி, எதிர்நீச்சல் மாது.. தில்லானா மோகனாம்பாள் சவடால் வைத்தி.. ஊட்டி வரை உறவு டாக்டர்..

வரிசையாக என் மனதில் வலம் வந்தார்கள்..

ஆம்.. நாங்கள் பேசிக் கொண்டிருந்தது அந்த மஹா நடிகர் நாகேஷுடன் தான்..

எப்பேர் பட்ட நடிகர்.. ஆனால் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல்..

பிரமையாக இருக்கலாம்.. ஆனால் அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு மணி நேரத்தில் எனக்கு ஒரு விஷயம் பட்டது..

நகைச்சுவைத் திலகமான அவர் ஆழ் மனதில் ஏதோ ஒரு சோக இழை ஓடிக் கொண்டிருக்கிறதோ?

துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் மொபைல் போன் கிடையாது.. கையில் கேமராவும் கிடையாது..

இருந்திருந்தால் உடனே ஒரு புகைப்படம் எடுத்து ஆவணப் படுத்தியிருக்கலாம்.. மறுபடியும் தவற விட்ட தருணம்.. என்னை இன்று வரை வாட்டிக் கொண்டிருக்கிறது..

இந்த சந்திப்பு.. பசுமையாக என் மனதில் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது.. அந்தத் தருணத்தை நினைத்தால் இன்னும் சிலிர்க்கிறது.. மறுபடியும் அப்படி ஒரு சந்திப்பு நேராதா என்று மனம் ஏங்குகிறது..

அதன் பிறகு அந்த உலகமகா கலைஞனை திரைப்படங்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது..

வாழ்க்கையில் சில சந்திப்புகள் தானாக நிகழ்பவை.. ஆனால் மனதில் ஆழமாகப் பதிந்து வேரூன்றிவிடுபவை..

நாகேஷ் அவர்களுடனான சந்திப்பும் அந்த வகையைச் சார்ந்தது தான்.. இத்தனை வருடங்கள் கழித்து இன்னமும் அந்த பசுமையான நினைவுகள் இதமாக மனதை வருடிச் செல்வதை உணர முடிகிறது..

2 Comments on “இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு”

  1. தில்லான மோகனாம்பாள் வைத்தியை மறக்கவே முடியாது. அடுத்ததாக எதிர்நீச்சல் மாது, பத்தாம்பசலி, சொர்க்கம், நம்நாடு, இராமன் தேடிய சீதை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அபூர்வ சகோதரர் கள் சினிமா முடிந்த பிறகு ஒரு மேடை நிகழ்ச்சியில் அவரைசந்தித்து பேசினேன்.

  2. Legacy என்று விக்கியில் போடுவது உண்டு.. ஏதோ ஒரு trend பாடுபொருள் மூலம் உருவானால் அதைப் பற்றிக் கூறுவது..

    தருமி மாதிரி வேறு யாரும், ஏன் நாகேஷே கூட நடிக்க முடியாது. தமிழ் நாட்டில் மிக அதிக அளவில் கேட்கப்பட்ட, பார்க்கப் பட்ட காட்சி அது. இந்துக் கடவுளின் சாகசம் சொல்லும் மகா செக்யூலர் காட்சி அது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் விழுந்து விழுந்து ரசித்த, ரசித்துக் கொண்டே இருக்கும் காட்சி. காரணம் சொல்ல வேண்டியது இல்லை.

    ஆனாலும், இதில் ட்ரெண்ட் எதுவும் உருவாகவில்லை.

    ஆனால், மாதுவும் சவடால் வைத்தியும் அனுதினம் சமூகத்தில் எங்காவது உலாவிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த வகை ஏழையை மாது என்றும், சவடால் பேர்வழியை வைத்தி என்றும் கூறுவது அநேகமாக நாற்பது வருடங்கள் தொடர்ந்தன.

    இந்த பாக்யம் வேறு யாருக்கும் கிட்டியது இல்லை.

    சிவாஜி கணேசனின் முதல் பட வசனமும், மஞ்சள் அரைத்ததையும் அடுத்த நூற்றாண்டு வரை பேசுவோமாக இருக்கும்.

    ஆனாலும், கதாபாத்திரம் நிலைக்கவில்லை.

    ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், அப்பாசாமித் திருடனும் கூட அடுத்த நூற்றாண்டு செல்லும் பாத்திரங்கள் தான்.
    ஆனால், சபையில் வேறு மனிதர்கள் அந்தக் கதாபாத்திரங்கள் பெயர்களில் அழைக்கப்படுவது இல்லை. இவ்விரண்டும் தருமிக்கு சமமான பெர்ஃபார்மன்ஸ் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனாலும், வைத்தியும் மாதுவும் வாழும் கதாபாத்திரங்கள். எப்படி வந்தியத்தேவன் நம் வீடுகளில் வாழும் கதாபாத்திரமோ அதேபோல.

    தன் நடிப்பால் கதாபாத்திரங்களை சமூகத்தில் உலவ விடுகிற‌ ஆற்றல் படைத்தவன் ஒருவன் நம்மிடையே வாழ்ந்து, (வெறுமனே வாழ்ந்து தான், பரிசுகள் எங்கே கொடுத்தோம்?) மறைந்து இருக்கிறான் என்பதை விட நமக்கு வேறென்ன பெருமை வேண்டும்?

Comments are closed.