அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!

அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என் சினிமா நாடக சின்னத்திரைவேட்கை வேட்டை நன்றாகவே தெரியும்..

நிறைய சமயங்களில் என் தரப்பு பணிகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்த தோழர்களும் தோழிகளும் உண்டு.மேனஜர் உட்பட எல்லோருக்கும் நான் செல்லப்பிள்ளையாய் இருந்த பொற்காலம்.

கதைவிவாதம், ஒத்திகை, காசில்லா டப்பிங்குரலளிப்பு, நடுநிசிவரை விவாதம் என ஆந்தைக்கு இரண்டாவதாய் நான் இரவுகளுடன் வெகுநேரம் புழங்கிய காலம்.

பேஜர் எண் (numeric) மட்டும் பிரபலத்துவங்கிய நாட்கள்.

நான் அந்த மகாகலைஞனுடன் அவரின் பால்ய ஸ்நேகிதனாக,அவரை கதைப்படி ஒருமையில் அழைக்கும் அளவு அணுக்க நண்பனாய், அவரின் குடும்பவக்கீலாய் பங்கேற்றிருந்தேன் சன் டிவியில் வந்த தொலைக்காட்சி தொடரில் (prime time 7.30 to 8 ) அடிக்கடி என் கிளை அலுவலக தொலைபேசியில் அழைப்பு வரும்.”இன்னிக்கு இப்ப ஒரு அரைமணிநேரம் கற்பகத்தில dubbing patch work..கொஞ்சம் வாங்களேன்”
.சட்டென்று என் மேலதிகாரி காதைக்கடித்துவிட்டு ‘எஸ்”ஸாகி விடுவேன்.

வர மதியம் ஆகிவிடும்.

என்தோழி பாவம் “rk வோட வேலை என்கிட்ட குடுங்கோ” எனக்கேட்டு வாங்கி முடித்திருப்பார்..

என்னை வாஞ்சையாய் விரட்டும் கோபு “எங்கடா திடீர்னு எஸ்ஸாயிட்ட…” என்றபடி ஆபீஸ் க்ரில் கேட்டுக்கு வெளியே என்னை அழைத்துச்சென்று

“என்னடா அவரோட combination scena?” என்பார்..

தலையாட்டுவேன் ஆமோதிப்பாய்..

தோழியிடம் போய் நன்றி என் வேலையையும் இழுத்துப்போட்டு செய்ததற்கு என்பேன்..

ரொம்ப கூலாக அவரோ “நீ வேற rk..இது எல்லாராலயும் முடியறததுதான் நீதான் என்னமோ சாதிக்கணும்னு டிரை பண்ற..நாங்க ‘ஆ’ன்னுவாய் பிளக்கிற அவரோடல்லாம் நடிக்கிற..நீ நிச்சயம் ஜெயிப்பே..அப்போ எங்களையெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ.. உன்னைப்
பாக்கலாம்ணு வந்தா appointment குடுப்பியோ இல்ல PA- வவிட்டு விரட்டிவிட்ருவியா” எனச்சிரிப்பார்.

எனக்கு அவருடன் ஷூட்டில்லாத நாளொன்றில் கடமை தவறா ஒழுக்கத்துடன் ஆபீஸ் வந்துவிட்டேன்.

ஆனால் வழக்கம்போல் லேட்டாக.
சமத்தாய் என்னிடருக்கையிருந்தேன்.

மேனேஜர் பின்னால் வந்து நின்றுதோள் தொட்டார். என் வழக்கவழிசலாய் “

“குட்மார்னிங் ஸார்” என்றேன்.

(பின்கதை என்கிற பிளாஷ்பேக்கில் அவரிடமிருந்து– பொதுவாக மற்றவர்பயன்பாடு தவிர்க்கும் என் மேனஜரின் பிரத்யேக நம்பருக்கு –அவர் போன்.

“நான்தான் “….”பேசறேன்..
ஏன் அந்த வக்கீல் ஷூட்டில்லன்னா வரமாட்டாரோ..? ஓஹோ..!இன்னும் வர்லியா?வந்தா உடனே வேளச்சேரி ஸ்பாட்டுக்கு வரச்சொல்லுங்கோ..கொஞ்சம் பேசணும் என்றிருக்கிறார்)

“நீ ஒண்ணும் வேலை பாத்து கிழிக்க வேணாம் நீ கெளம்பு வேளச்சேரிக்கு என்றார்..நான் முழிக்க (இங்கே fast forwadil பிளாஷ்).

“அப்ப ஜாட்டிங்”என இழுத்தேன் கடமைஅழுத்த.

“எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கெளம்பு” என விரட்டினார்..
கிளம்ப யத்தனிக்கையில் செல்லக்கெஞ்சலாய் அருகில் வந்தவர் தன் கற்பூரவெற்றிலை பன்னீர்புகையிலை வாசனை மணக்கும் அருகாமைக்கு வந்து

“டேய்..அவர ஒருநாள் நம்ம பிராஞ்சுக்கு கூட்டிண்டு வாயேன்..”

“அவர் பிஸி ஸார்..but tryபண்றேன்”
என அவரின் செக்ரட்டரி ரேஞ்சுக்கு கித்தாப்பாக பதில் சொல்லிவிட்டு அவரை நோக்க வேளச்சேரி நோக்கி ஸ்கூட்டரினேன்..

அவருடைய மகனாக திரு. தியாகுவும், மிகைநடிப்புசாரா இயல்பு நடிப்பால் எனக்கு பிடித்த கவிதாலயா கிருஷ்ணனும் நடித்திருந்தனர்..(இது முடிந்த
பல வருடம் கழித்து ஒரு ஷூட் ஸ்பாட்டில் என்னைபார்த்த கவிதாலயா கிருஷ்ணன் ஒரு பொது நண்பர் முன் “நானும் இவரும் அவரோட ஒண்ணா நடிச்சிருக்கோம் என அன்புகலந்த சிலாகிப்புடன் நினைவுகூர்ந்தார்.

இன்று அந்த மகா கலைஞன் பிறந்த நாளில்..இதை சாத்தியமாக்கி என் கனவை சத்தியமாக்கிய இயக்குநர் அர்விந், தொடரின் தயாரிப்பாளர் குழு என் தோழமை கூட்டம் அனைவர்க்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரமும் நன்றியும்..!

அந்த அவர்தான் மகா கலைஞன் திரு.நாகேஷ் அவர்கள் என்று சொல்லித்தான் புரியணுமா என்ன உங்களுக்கு..??!!(தொடர் பெயர் அப்பா அப்பப்பா)– அன்புடன் ஆர்க்கே…!!

இன்று மகாகலைஞன் நாகேஷ் அவர்கள் பிறந்த தினம்!

One Comment on “அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!”

  1. திரையில் நாகேஷ் தெரியாமல் வைத்தியும் தருமியும் மட்டும் தெரியும்படி நடித்த அற்புதமான நடிகர். சாதாரண நிலையிலிருந்து
    நடிப்புத் திறனால் உயர்ந்த மனிதர். இப்படிப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைப்பதேகூட ஒரு பாக்கியம்தான்.
    வாழ்த்துக்கள் ஆர்க்கே சார்.
    லாவண்யா சத்யநாதன்.

Comments are closed.