பரிசில் யானையும் பாவலர் இருவரும்/லாவண்யா சத்யநாதன்

தமிழ்நாட்டில் ஒரு ஊரில் ஒரு புலவனிருந்தான். கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திக்கும் வாய்த்த அரண்மனைத் தொடர்புகள் அவனுக்கு
வாய்க்கவில்லை.

அதனால் வறுமையிலிருந்தான். அடுப்பில் வைக்க அரிசிகூட இல்லை. யாசகத்துக்குப் புறப்பட்டவன் ஆறை என்னும் நகருக்குச் சென்றான். அங்கு மகதேவன் என்றொரு அரசனிருந்தான். அவனுக்கு வாணன் என்ற பெயருமுண்டு. புலவன் அரசனிடம் சென்று தன் வறுமையைச் சொல்லியழுதான். அரசன் இரக்கப்பட்டு புலவனுக்கு யானை ஒன்றை பரிசாகத் தந்தான். புலவனால் பரிசை மறுக்கவும் முடியவில்லை.ஏற்கவும் முடியவில்லை. நொந்துபோனான். தன் துயரத்தை அந்தப் புலவன்

ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறான்.

  உலைக்குரிய பண்டம் உவந்துஇரக்கச் சென்றால்
  கொலைக்குரிய வேழம் கொடுத்தான் --- தலைக்குரிய
  வாணர்கோன் ஆறை மகதேவனுக்கு இந்தப்
  பாணனோடு என்ன பகை?

கம்பர் இயற்றிய இந்தப் பாடல் புலவனின் துயரத்தை சொல்வதோடு நின்று
விடுகிறது. பரிசாய் கிடைத்த யானையை புலவன் என்ன செய்தான்? சோற்றுக்கே
வழியில்லாத சோப்பளாங்கிப் புலவன் யானைக்குத் தீனிவைக்க எங்கே போவான்?
வீட்டுக்கழைத்துச் சென்றானா என்ற கேள்விகளைக் கம்பர் நம் கற்பனைக்கு
விட்டுவிடுகிறார்.

15ஆம் நூற்றாண்டு யானை 20ஆம் நூற்றாண்டு கவிஞனின் கற்பனையில்
நுழைகிறது. கற்பனை விரிவடைகிறது.

புலவன் யானையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.
அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறான். யானை ஓடுகிறது. புலவனுக்கு அனுபவம்
புதிது. அச்சத்தில் இறங்கிக் கொள்கிறான்.

வழியில் என்ன நடக்கிறது? யானை புலவனைத் தொடர்ந்து அவன் வீட்டுக்கு
வருகிறது.—காட்டில் தொலையாமல்.

வீட்டில் என்ன நடக்கிறது? தேடிச் சென்று தீனி தின்று யானை வீட்டுக்கு வந்து
முற்றத்தில் மலங்கழிக்கிறது. நீர்ப்பெருக்காய் சிறுநீர் கழிக்கிறது. வேடிக்கை பார்க்க சிறுவர்கள் கூடுகிறார்கள். முதியவர்கள் புலவனைக் கடிந்து கொள்கிறார்கள்.

புலவனின் மனைவி யானையை தொலைக்காவிட்டால் பிறந்தகம் போவேனென்று
மிரட்டுகிறாள். புலவன் என்னசெய்வான் பாவம்!

யானையை அரசனிடம் திருப்பித்தர அழைத்துக் கொண்டு வருகிறான்.
அரண்மனை வாயிற்காப்போனிடம் தன் வருகையை அரசனுக்குத் தெரிவிக்கச் சொல்கிறான்.

கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க வைக்கிறது.

ஞானக்கூத்தன் பல கவிதைகளில் கவிதையின் உட்பொருளை லாவகமாக
எங்கேனும் மறைத்திருப்பார். தேடித்தான் காணவேண்டும். அதனால் தேடினேன்.

புலவன் யானையை அரசனிடம் திருப்பித்தர எத்தனை காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணங்கள் இரண்டென்று மனதில் பட்டது.

ஒன்று, யானை முற்றத்தில் கூடை கூடையாய் மலங்கழித்ததைப் பார்த்த மற்ற புலவர்கள் ‘பாட்டுக்கேற்ற பரிசு’ என்று பழித்ததை தாங்க முடியாமல் புலவன் யானையை அரசனிடம் திருப்பித் தர வந்திருக்கவேண்டும்.

இரண்டாவது ஒருமுறைகூட கடிந்து பேசாத புலவனின் மனைவி பிறந்தகம் செல்வேனென்றதும் புலவன் யானையைத் திருப்பித் தர முடிவெடுத்திருப்பானென்றும் தோன்றுகிறது.

இந்தக் கவிதை காட்சித் தொடர்களாக நிகழ்கிறது. பேச்சு மொழியும் எழுத்து
மொழியும் கலந்த உரையாடலாய் கவிதை நகர்வதால் படிக்க எளிதாயிருக்கிறது.

புலவனுக்குப் பக்கத்தில் வாசகனைக்கொண்டுபோய் நிறுத்துகிறது.

களிற்று யானை ஞானக்கூத்தனின் சிறந்த கவிதைகளில் ஒன்று.

களிற்று யானை

வாயிலோயே! வாயிலோயே!
அறம்பிழைப்பறியா அழுங்கல் மூதார்
வேந்தனின் கோயில் வாயிலோயே

வாரம் தோறும் திங்கள் தோறும்
அல்லது ஆண்டுக்கொருமுறை மானியமாய்
ஊதியம் பெறுகிற வாயிலோயே!

உறையில் இருக்கும் உன் நெடிய வாளும்
நடுக்கம் அறியா உன் கை பிடித்த
உன்னைக் காட்டிலும் உயரமான வேலும்
உனது முகமும் ஒளியுடன் உள்ள வாயிலோயே

என்னை உனக்கு நினைவில் உள்ளதா?
அங்கே நிற்கும் களிற்று யானையை
அரசன் நல்க யான் ஊர்ந்து சென்றது
நினைவில் உள்ளதா வாயிலோயே?

காலைப் பணிகள் முடித்துன் வேந்தன்
அரசியைப் புதல்வரை அமைச்சரை மற்றும்
ஒற்றரைப் பார்த்தபின் அமைதியாய் அவையில்
உள்ளான் எனில் நீ வாயிலோயே
புலவன் ஒருவன் வந்துளான் என்று
சொல்லுமாறுன்னை வேண்டுவேன் வாயிலோயே!

புலவன் என்றால் வேந்தன் ஒருகால்
முணுமுணுப்பானாகில் சொல்லுக
பரிசு பெறுவதற்கன்று, நல்கிய
பரிசைத் திருப்பத் தரவே வந்துளான்
போலும் என்று சொல்க வாயிலோயே!

இந்தக் களிறைக் கொண்டு சென்ற
நாள்முதல் எனக்கு நிம்மதி இல்லை
சொந்த ஊரினை அடையும் முன்பே
காட்டில் இதனை விட்டுவிட்டுப்
போய்விடக் கருதினேன் வாயிலோயே!

ஓட்டமாய் ஓட்டமாய் ஓடுவதின்றி
நடப்பதே இல்லை இந்தக் களிறு
இதன் மேல் அமர்ந்து செல்வதற்கஞ்சி

இடைவழி அதனில் இறங்கிக் கொண்டேன்.
தொடர்ந்து வராமல் காட்டில் மறையும்
என்னுமோர் ஆசையால் மறைந்து சென்றேன்.
என் பின்னாலேயே தொடர்ந்து வந்தது
வேந்தன் கொடுத்த பரிசுக் களிறு.

‘தொலைந்துபோ களிறே தொலைந்துபோ’ என்றேன்.
‘நான் போய் விடுவேன் புலவனே. ஆனால்
வேந்தன் பரிசை இழிவு செய்தாய் என்று
தண்டனை பெறுவாய்’ என்றது வேழம்.

வாயிலோயே! வாயிலோயே!
ஊரில் சுற்றமும் உறவும் களிறு
வந்த நாளன்றே வெறுக்கத் தொடங்கினர்.
பலவகைப் பயிர்களைத் தேடிச் சென்று
வயிறாரத் தின்று மலத்தை மட்டும்
கூடை கூடையாய் வீட்டு முன்றிலில்
பரப்பும் இந்த வஞ்சகக் களிறு
பாட்டுக்கேற்ற பரிசென்று மற்ற
புலவர் என்னைப் பழித்தனர் வாயிலோயே!

சிறுநீர் ஓடை பெருக்கும் இதனைச்
சிறுகுடிப் பெண்கள் வெறுத்ததோடு
என்னையும் இகழ்ந்தனர் வாயிலோயே.

சிறுநீர் ஊற்றும் அதனைப் பார்க்கச்
சிறுவர் சூழ்வதால் கெடுமதி என்றெனை
சான்றோர் சீறினர் வாயிலோயே!

வாழ்வில் ஒருமுறைக் கூட என்னைக்
கடிந்துரை செய்யாக் கவின் மனையாளும்
வேழத்தைத் தொலைப்பீர். இல்லையேல் யாம்
பிறந்தகம் புகுவேம் என்றனள் வாயிலோயே!

வாயிலோயே ! வாயிலோயே! –
அறம் பிழைப்பறியா அழுங்கல் மூதூர்
வேந்தனின் கோயில் வாயிலோயே!
இவை இவை அரசிடம் சொல்வையேல்
பஃறுளியாற்று மணலிலும்
பலநாள் வாழ்க நீயென வாழ்த்துவமே.