
ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம் ஏதோ தீண்ட தகாத ஒன்றாகத்தான் மனது கொள்கிறது. ஆனால் அந்தச்சத்தம் கேசவ்விற்கு மிகப் பழக்கப்பட்ட ஒன்று.
மறுபடியும் வேட்டுச்சத்தம் விடாமல் தொடர்ச்சியாக.
இப்போது அவர் சமாளித்துக்கொண்டுவிட்டார். விட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடி
“பக்கத்துத் தெருவில் சாவு போல. இது அவங்களோட வழக்கம். பொணம் போகும்போது வெடி போட்டுகிட்டேதான் போவாங்க. பிரிந்து போன ஆத்மா வீட்டைச்சுத்திகிட்டே இருக்குமாம். அதைச் சுடுகாட்டுக்கு அனுப்பிவைக்கத் தான் இந்த வெடிச் சத்தம்”
கைகள் தன் வேலையைச் செய்து கொண்டிருக்க, ராமசாமி சாஸ்திரிகள் பேசிக்கொண்டிருந்தார்.
கேசவ்விற்கு அவை எதுவும் காதில் விழவில்லை. அந்த வெடிச்சத்தம் பல நினைவுகளைக் கிளறிப்பார்த்துக்கொண்டிருந்தது. அவை எல்லாவற்றிலும் தவறாது முகம் காட்டியது குரங்கு. காரணம் அவன் குடி இருப்பில் குரங்குகள் அதிகம். அவற்றை விரட்ட அவ்வப்போது அவன் அப்பா இதைப்போல் வேண்டாத நேரங்களில் ஒத்தை வெடியை வெடித்துப்போடுவார். அவன் நினைவுகளில் குரங்கு மற்றும் அப்பா இருவரும்.
ஒரு தீபாவளியின் அடுத்த நாள் காலை. அப்பா அம்மாவிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
“உன்னை யாரு ரத்தினத்தை விட்டு வாசலை பெருக்க சொன்னா? “
“தனியா நான் சொல்லணுமா? வாசல் முழுவதும் பட்டாசுக் குப்பை. பெருக்கித்தள்ளி இருக்கா”
அப்பா பதில் பேசாமல் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் ஒரு குச்சியை விட்டு எதையோ தேட ஆரம்பித்தார்.
கேசவ் மெதுவாக அவர் முதுகைத்தொட்டான்.
“என்னப்பா தேடற?”
அப்பா கைகளை உயர்த்திக்காட்ட, வெடிக்காத சில ஊசிப்பட்டாசுகளிம் எலெக்ட்ரிக் வெடிகளும் அங்கே இருந்தன.
“அய்ய, இது நா நேத்து தீபாவளிக்கு விட்ட பட்டாசுப்பா. எல்லாம் புஸ்குன்னு போய் வெடிக்காம கிடக்குது. “
இவற்றை எதற்கு அப்பா பொறுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறார்?
“தெரியுண்டா. வெய்யில்லே வச்சு எடுத்தால் வெடிச்சுடும்.அதற்குத்தான்”
அவனுக்குப்புரியவில்லை.
“எதுக்குப்பா? கார்த்திகைக்கா?”
“அட, இல்லடா, குரங்கு வந்தா வெடிச்சுப்போட”
” இன்னும் நான் திறக்காத பிஜிலி பாக்கெட் ஒன்னு இருக்கு. அதை எடுத்துக்கோ”
“போடா, இந்த சனியனுக்காக அதைப் பாழாக்குவானேன். நீ அதை விடு. இதுக்கு இந்த வெடிக்காதவையாகக் காய வெச்சா போதும்.”
அவர் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பை அவன் என்றும் கண்டதில்லை.
இது எப்போது அல்லது எதனால் ஆரம்பமாகி இருக்கும். அவனிடம் நிறையக் குரங்கு கதைகள் இருந்தன. யோசிக்கத்தொடங்கினான்.
ஒரு விடுமுறை நாள் மதிய நேரம். அவர்கள் சில மாதம் முன்னர் தான் அங்கே வீடு மாற்றிக்கொண்டு வந்திருந்தனர். வீட்டின் பின்புறம் நிழலுக்காக முழுவதும் அஸ்பெஸ்டாஸ் தகடுகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். மாடி திறந்தவெளியாக அதற்குப்போக வேண்டிய படிக்கட்டு வீட்டுக்கு வெளியே வீட்டை ஒட்டி இருக்கும். அவன் நிறைய நேரம் மாடிக்குச்சென்று யாரும் அறியாமல் அந்த அஸ்பெஸ்டாஸில் இறங்கி பக்கத்து வீட்டிலிருந்து தாழ்வாக இவர்கள் வீட்டின் மீது படர்ந்து நின்ற கொய்யா கிளைகளில் இருந்து கொய்யாப்பழம் பறித்துத் தின்பதுண்டு.
அவன் வீட்டுப்பாடங்களை முடித்துக்கொண்டிருந்தான். அப்பா நடு ஹாலில் சின்னதாகத் தூக்கம். அம்மா மதியம் டிபனுக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.
அப்போதுதான் தப தப என்று யாரோ அவசரமாக ஓடுவது போல் அஸ்பெஸ்டாஸ் சத்தம் கொடுத்தது. அப்பாவிற்குச் சட்டென்று முழிப்புத்தட்டியது. அவர்கள் வீடு இருந்த இடம் ஒரு அத்துவானம். எங்கோ தெரு என்று கூறப்படும் மண் பாதையின் ஏதோ ஒரு மூலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில வீடுகள்.இவர்கள் வீடும் துணைக்குக் கட்டப்பட்டிருந்த பக்கத்து வீடும் மட்டும் தான் சற்றே புது மோஸ்தரில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
அவசரமாக அம்மா மாவு கைகளுடன் ஓடி வந்தாள்.
“எவ்வளவு சொன்னேன், கேட்டாதானே. பாரு இந்த அத்துவானத்திலே வந்து மாட்டிக்கொண்டோம். மாடியிலே பட்டப்பகலிலே திருடன். என் புது புடவை வேறு கொடியிலே இருக்கு. போங்கோ, போய் துரத்தி விடுங்கோ”
அப்பா அவசரமாக இடுப்பில் நெகிழ்ந்து நின்ற வேட்டியை இருக்கக்கட்டி கைகளில் ஒரு கொம்புடன் கிளம்பினார்.
“பக்கத்து வீட்டுக்கு ஜன்னல் வழியே குரல் கொடுத்து அலெர்ட் பண்ணு. நான் போய் பார்க்கிறேன்”
“ஜாக்கிரதை. தூரமா நின்னு பயம் காட்டுங்கோ. வெட்டி கிட்டி செஞ்சுடப்போறான். ஒரு ஆள் போல தெரியல. பல காலடி சத்தம் தொம் தொம்ன்னு கேக்கிறது. கும்பலா இருந்தா வந்துடுங்கோ”
அம்மா நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்க, அப்பா மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினார்.
அவன் மெதுவாக ஜன்னல் ஓரம் சென்று நின்றுகொண்டான். அப்பா மிகச் சத்தத்தோடு படிகளில் ஏறிக்கொண்டிருந்தார். அவன் மனதிற்கு அது சரியானது அல்ல என்றே தோன்றியது. திருடன்களுக்கு எச்சரிக்கை செய்வது போல் இருந்ததாகப் பட்டது. ஒரு வேளை அது தான் அப்பாவின் எதிர்பார்ப்போ?
அப்பா மாடிக்குச்சென்று கொஞ்சம் நேரமாகிவிட்டது. எந்த சத்தமும் வரவில்லை. திருடர்களை அடிக்கும் சத்தமோ அல்லது அவர் திருடர்களிடம் அடி வாங்கும் சத்தமோ ஒன்றும் கீழே கேட்காமல் நிசப்தமாக இருந்தது. அந்த நிசப்தம் சற்றே பயமூட்டியது.
“அம்மா, பயமா இருக்கு”
சொல்லாவிட்டாலும் அம்மாவின் பயம் முகத்தில் வழிந்தது.
“போடா நீ ஆண்பிள்ளை தானே. போ,போய் என்னாச்சுன்னு பார்.”
அதற்குள் பக்கத்து வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, எல்லோரும் ஒரு படையாக மாடிக்குச்சென்றார்கள்.அங்கே அவர்கள் பார்த்தது இன்றும் அவன் நினைவிற்கு வந்து சிரிப்பை வரவழைக்கிறது.
அவன் உயரத்திற்கு இருந்த குரங்கு ஒன்று கொம்புடன் நின்று கொண்டிருக்கும் அவன் அப்பாவைப் பார்த்து கேனத்தனமாக பல்லைக்காட்டியபடி, கொடியில் இருந்த அவர் பனியனை தலை வழியே மாட்டிக்கொள்ள முயன்று கொண்டிருந்தது. அதன் பின்னால் இரண்டு சின்ன குரங்குகள் அப்போதுதான் பறித்த கொய்யாப்பழங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தது. இன்னும் சற்றே பெரிய சில குரங்குகள் மரக்கிளையில் ஊஞ்சலாடியபடி விளையாடிக்கொண்டிருந்தன.
எங்களைப்பார்த்ததும் அப்பா மிகத் தைரியமாக கைகளில் இருந்த கொம்பை பட் படலென்று தரையில் தட்ட, ஒரு உறுமல் உறுமி விட்டு, அவன் அம்மாவின் புது புடவையை கைகளில் சுருட்டி எடுத்து, சர்கஸில் வித்தை காட்டும் பெண்போல் அதை ஒற்றைக் கைகளில் பிடித்துக்கொண்டு, மறு கைகளால் இரண்டு குட்டிகளையும் அள்ளிக்கொண்டு சர் என்று கீழே தொங்கிக்கொண்டு சென்றது.
“அட,குரங்குங்க. பக்கதுலே டிஃபன்ஸ் காடு இருக்கு பாத்தீங்களா. அதான் இங்கே இதுங்க வந்து அநியாயம் செய்யுங்க. நீங்க புதுசா வந்திருக்கீங்க. அதான். இனிமேல் பழகிடும்” பக்கத்துவீட்டுக் கும்பல் அவசரமாக யாரோ வந்து காத்திருப்பதுபோல் கீழிறங்கிச்சென்றார்கள்.
அப்பா மிகக் குறைவான ஆடை வாங்குபவர். தினசரி உபயோகத்திற்கு மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள இரண்டு மற்றும் மழைக்காலத்தில் காயாமல் போகும்போது தேவைக்கு அதிகப்படியான ஒன்று என்று பனியன்கள் வைத்திருப்பவர். அதில் ஒன்றை இன்று இந்த குரங்கு போட்டுக்கொண்டு போய்விட்டது.
அப்போது இந்த வெறுப்பு வந்திருக்குமோ? இல்லை என்று தோன்றியது.அன்று அப்பா முகத்தில் அவன் கோபத்தைத்தான் பார்த்தான்.
ஒருவேளை இதே குரங்கு பக்கத்து வீட்டு மாமி தப்பிக்க உதவியபோது ஏற்பட்டிருக்குமோ?
அது மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சி. அவர்கள் இருந்த ஏரியா ஒரு இரண்டு வருடத்தில் நன்றாக முன்னேற்றம் கண்டுவிட்டது. நெருப்புப்பெட்டி போல் பக்கம் பக்கமாக வரிசை வீடுகள். அவற்றிற்கு நடுவே கட்டப்பட்ட முள் வேலிகள்.
அப்போது சாயந்தரம் ஆறு மணிக்கு ஆரம்பம் ஆகும் தூர்தர்ஷண் நிகழ்ச்சிக்கு அனைவரும் ஐந்து மணியில் இருந்தே காத்திருக்கத்தொடங்குவார்கள். தூர்தர்ஷணில் பாட்டுடன் கறுப்பும் வெளுப்பும் கூடிய உருண்டை வரத்தொடங்கியபோதுதான் அந்த அலறல் கேட்டது.
“திருடன் திருடன், வளையை புடிங்கிக்கிட்டு ஓடறான்….”
எல்லோர் வீட்டிலும் அவசரமாக வெளியே வந்தார்கள்.
பக்கத்து வீட்டு மாமி கைகளை ஒரு மூலையில் காட்டிக்கொண்டிருந்தாள். அங்கே ஒரு உருவம் புதருக்குள் நுழைந்து மறைவது போல் தோன்றியது.
“அவன் தான், கொசுத் தொல்லை தாங்கலியேன்னு ஜன்னலைச் சாத்த கையை வெளியே விட்டேன். பாரு, காத்திருந்தாப்பலதான் கை வளையைக் கழட்டிக்கிட்டு போய்ட்டான்” வெறுமையாக இருந்த கைகளை ஆட்டியபடி சொல்லிக்கொண்டிருந்தாள்.
” நாலு பவுன்”
அனைவரும் செய்வதறியாது உச் மட்டும் தாராளமாகக் கொட்டினர்.
ஏதும் பேசாமல் அம்மா மட்டும் உள்ளே சென்றாள்.
“என்ன, அக்கம் பக்கம் இருக்கோம். ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல? விருட்டுன்னு உள்ளே வந்துட்டே” அப்பா அம்மாவிடம் போட்டு வாங்கிக்கொண்டிருந்தார். அவன் இருப்பதை அறியாமல் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்
“அட, நீங்க வேற. போனது ஒரு குரங்குங்க. நான் தான் கண்ணால பார்த்தேனே”
“உளறாத, கை வளையை தொலைச்சுட்டு நிக்கிறா, பாவம். அவ சொல்றது பொய்யா?”
அம்மா ஏதோ ரகசியத்தைச் சொல்லப்போவது போல் அப்பாவின் அருகில் சென்றாள்.
“நிச்சயமா. நான் நம்ம வீட்டு ஜன்னல் சாத்த சித்த முன் போனபோதே அந்த ஜன்னல் சாத்தி இருந்தது.அதனால அவ வெளியே கையை இப்போ நீட்டி இருக்க முடியாது. இன்னும் ஒரு விஷயம். தெருவே அதைப்பார்த்துச் சிரிக்கிறது. அவ புருஷன் நண்பன் கோபாலன்னு ஒரு வெட வெடன்னு வளர்ந்த ஆள் ஒருத்தன் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஒண்ணுலே வருவான் தானே. அவன், மாமா இல்லாத போதுதான் பார்த்து வருவான். இன்னைக்கும் அது போலத் தான். ஆனால் அவ கஷ்ட நேரம், திடுதிப்புன்னு வந்துட்டார். அதுதான் இந்த திருடன் கதை. அவன்தான் பின்னாடி வழியா ஓடி இருக்கான். அவ ராசி, இந்த குரங்கும் அங்கே வர, அதைக் கைகாட்டி எல்லோர் கவனத்தையும் திருப்பிட்டா”
அப்பாவின் முகம் என்ன என்று சொல்ல முடியாத பாவத்தைக்காட்டியது.அவருக்குப் பக்கத்து வீட்டு மாமாவை மிகவும் பிடிக்கும். அவருக்கு இப்படி ஒரு கஷ்டம் வரும்போது, அதைத் தெரிய விடாமல் உதவிய குரங்கின் மேல் அப்போது இந்த வெறுப்பு வந்திருக்குமோ?
இதுவும் இருக்காது என்றே தோன்றியது. வேறு ஒரு சம்பவம் நினைவில் வந்தது. அந்த வெறுப்பு ஏற்படுத்திய சம்பவம் நிச்சயம் அதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
அப்போது அவன் சித்தப்பா சித்தூரில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தார்போல் விடுமுறை வர, அவர்கள் சித்தூருக்கு அவருடன் இருக்கச்சென்றனர்.
ஆரவாரமில்லாத ஊர். ஸ்டேஷன், அதன் பக்கம் சித்தப்பா வீடு, மற்றும் ஒரு பத்து வீடுகள் என்று சென்சஸ் கணக்கில் மிகச் சுலபமாக எழுதிவிடக்கூடிய கிராமம். சித்தப்பாவின் வீட்டிற்கு அருகிலேயே ஓங்கி உயர்ந்து, விரிந்து பரவிய புன்னை மரம். வீட்டைச்சுற்றிப் பல மரங்கள். நாள் ஒன்றுக்கு மொத்தமே இரண்டு ரயில் வண்டிகள் தான் அங்கே நிற்கும். அதற்குப் பச்சைக் கொடி அசைத்து வழி அனுப்பி விட்டால் சித்தப்பாவிற்கு வேறு வேலை என்று எதுவும் கிடையாது அவனுடன் விளையாடுவதைத்தவிர. அவன் புன்னை மர இலைகளை உருட்டிச் செய்யும் நாயனத்தில் இருந்து வரும் பீ பீ எனும் கர்ண குடூர சப்தத்திற்குக்கூடத் தாளம் போட்டு ரசிப்பார்.
சித்தி செய்யும் வடையின் மணம் அந்த ஸ்டேஷன் வரை பரவிக்கிடந்தது.
அப்போது தான் அங்கேயும் ஒரு குரங்கு தன் முகத்தைக்காட்டியது. சித்தி வடைகளைத் தட்டிப்போட்டு எண்ணெய்யில் இருந்து எடுத்து வைக்க வைக்க, அவர் திரும்பிப்பார்ப்பதற்குள் காணாமல் போய்க் கொண்டிருந்தது. அவன் அப்பாவிற்கு வடை மிகவும் பிடிக்கும். அவர் பக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் எடுத்துச்சாப்பிடுகிறார், கேட்கவேண்டாம் என்று பேசாமல் இருந்தவளுக்கு, ஜன்னல் வழியாக புசு புசுத்த கை ஒன்று மெதுவாக உள்ளே வந்த போது சற்றே அதிகம் திடுக்கிட்டு இதுவரை யாரும் கேட்டிராத ஒரு சத்தத்தை வெளிப்படுத்தினாள்.
அது மிகப்பெரிய குரங்கு. ஆஜானுபாகுவாக மனித ஜாடையில் இருந்தது. சத்தத்திற்குக் கவலைப்படாமல் ஆடி அசைந்து சென்றது.
“இதுவரை எந்தக்குரங்கும் இங்கே வந்ததில்லை தெரியுமா. உங்க ஊர் குரங்கை இங்கேயும் பிடித்து வந்து விட்டீர்களா?” என்று சித்தி கேட்டது அப்பாவை ரோஷப்படுத்தியது.
“இன்னும் மூணு நாள் இருக்கப்போறேன். அதற்குள் பிடித்துக் காட்டுகிறேன்.” அப்பா செயலில் முழு மூச்சாக இறங்கினார்.
” சாமி, இது கருங்குரங்கு சாமி. லேசுல புடிக்க முடியாது. பக்கம் போனா ஆளப் பிடுங்கி எடுத்திடும். பொம்பளை குரங்கா தெரியல. அது குட்டி போட்டுச்சுன்னா, இந்த எடமே நாசமா போயிடும்.”
சித்தப்பா சித்தி முகத்தில் அப்பட்ட பயம்.
“புடிச்சிடுப்பா”
“கையால புடிக்க இயலாது சாமி. மருந்து தான் வைக்கணும்”
“அய்யோ, மாருதி அது. ராமர் பக்தர். கொல்லக்கூடாது” சித்தி அவசரமாகக் குரல் கொடுத்தாள்.
“அய்ய, நா வெஷம் வெக்க சொல்லல தாயி. வெறும் மயக்க மருந்து தான். புடிச்சு கட்டிப்போட்டுடலாம்.”
மருந்து வாழைப்பழத்தில் வைக்கப்பட்டு வாழைப்பழம் ஜன்னல் பக்கம் வைக்கப்பட்டது. அதே புசு புசுத்த கை லாவகமாக அதை எடுத்துச்சென்றது.
காத்திருந்தார்கள்.
அரை மணி நேரத்தில் கிணற்றடியில் அந்த கருங்குரங்கு மயங்கிக்கிடந்தது.
அப்போதுதான் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆயிற்று. அதை எங்கே வைப்பது? ஒருவரும் வராத அந்த ஸ்டேஷனுக்கு எதன் மூலம் அதை எங்கே கொண்டு விடுவது?
சித்தப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தார்.
“ஒரு நாள் அதை வைத்துக்கொண்டு சமாளிக்கச் சார். நாளைக்கு ஏதாவது செய்யரோம்”
அப்போதுதான் அப்பா அந்த யோசனையைச் சொன்னார். அங்கே அவுட்டரில் குட்ஸ் வண்டியின் ஒரு கம்பார்ட்மெண்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது அந்த ஊர் வியாபாரி ஒருவர் தன் தேவைக்கென வரவழைத்திருந்த பொருட்கள். அதை அவர் பணம் கட்டியபின் தான் எடுத்துப்போக அனுமதிக்கப்படுவார். அவரின் போதாத நேரம், கைகளில் அப்போது தேவையான பணம் இல்லாததால், தினமும் வந்து ஸ்டேஷன் மாஸ்டரான சிற்றப்பாவிடம் அதைத் திறந்து தரும்படி பல மணி நேரம் கெஞ்சி விட்டுப்போவார். மிகவும் கடமை தவறாத சித்தப்பா ஒரு வாரமாக அவரை தாட்ஷண்யம் பாராது திரும்ப அனுப்பிக்கொண்டிருந்தார்.
அந்த குட்ஸ் கம்பார்ட்மெண்டைத்தான் அப்பா இப்போது கொண்டுவந்தார்.
“அதன் சாவி உன்கிட்டத்தானே இருக்கு?”
சித்தப்பா ஆம் என்று தலை அசைக்க
“அப்போ தீர்ந்தது தொல்லை. அந்த வண்டியைத் திற. அதில் இந்த கருங்குரங்கை அடைத்து வைப்போம். போலீஸ் மீட்பு வந்த உடன் திறந்து விட்டுடலாம். அவங்க பிடிச்சுகிட்டு போயிடுவாங்க.”
சித்தப்பா மிகவும் யோசித்து பின் வேறு வழி ஏதும் தெரியாமல் கதவைத்திறந்து விட்டார். உள்ளே என்னப்பொருள் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்குள் குரங்கு லேசாக அசையத்தொடங்க அவசரமாக அதை உள்ளே தள்ளி கதவைப் பூட்டி காபந்து செய்தார்.
அடுத்த நாள் போலீசும் வந்துவிட்டது அந்த வியாபாரியும் பணத்தோடு வந்து விட்டார். நல்ல வேளையாக அவர் வருவதற்குள் அந்த குரங்கை போலீஸ் பிடித்துச்சென்றதால்,சித்தப்பா எதுவும் நடக்காதது போல் கதவைப் பூட்டி வைத்து விட்டார்.
அந்த வியாபாரி வந்து கதவைத் திறந்த போதுதான் அவருக்கு, சித்தப்பாக்கு, எங்களுக்கு என்று அனைவருக்கும் அதிர்ச்சி
” அய்யோ, உள்ளே வெச்சிருந்த மூணு க்ரேட் அல்போன்ஸ் மாம்பழத்தை காணமே.வெறும் கொட்டைதானே இருக்கு” அவர் போட்ட சத்தத்தில் அந்த ஊர் பத்து வீடுகளும் அங்கே வந்து குழுமினார்கள்.
லேசான தடுமாற்றத்தோடு சித்தப்பா உள்ளே என்ன பொருட்கள் உள்ளன என்று அந்த வியாபாரியால் கொடுக்கப்பட்ட பட்டியலை எல்லோர் முன்னும் நீட்டினார்.
“அட, இங்கே பாருங்க, இதுலே என்னவோ இரும்பு சாமான்கள், மரச்சாமான்கள்ன்னு பட்டியல் இருக்கு. எங்காவது மாம்பழம் இருக்கா?”
படிக்கத்தெரிந்த சிலர் முன்னால் வந்து சரி பார்த்தனர்.
“அட, ஆமாலே, இங்கிட்டு மாம்பழம் பத்தி மென்ஷன் எதுவும் இல்லியே”
“அப்போ, நா என்ன பொய் சொல்லுதேனா? பாம்பேலேயிருந்து வந்த அல்போன்ஸ். ஒரு பழம் இருபது ரூபா. என்னமா இனிக்கும் தெரியுமா? அத்தனையும் போச்சே…..ஒரு நூறு பழம் போச்சே….”
சித்தப்பா மிகவும் கெத்தாக
“இதப்பாரு, நீயி லிஸ்டுலே கொடுத்தியா? இல்லீல்ல, சொல்லு, ஆமாம் நா பொயி லிஸ்ட் கொடுத்து சாமான எடுத்துவந்தேன்னு. போலீசுக்கு சொல்லட்டுமா…? ஏமாத்துக்கார மனுஷனா இல்ல இருக்க”
சித்தப்பா வெறும் போலீசுடன் நிறுத்தி இருந்திருந்திருக்கலாம். தேவை இல்லாமல் ஏமாத்துக்கார மனுஷன் என்று சொல்லப்போக, அந்த வியாபாரி சாமி வந்தது போல் ஆடத்தொடங்கினார்
“எலே, என்னை யாருன்னு நினைச்சே. ஸ்டேஷன் மாஸ்டரா இருக்கியே, நாளைக்குத் தயவு வேணுமேன்னு பாத்தா, நாக்குல நரம்பு இல்லாம இல்ல நீ பேசுற. சரி இந்த பொட்டியோட சாவியை நீதானே வெச்சிருந்தே. இந்த பொட்டிக்கு எங்காவது ஜன்னல் இருக்கா? யாரும் உள்ளே வர முடியாதில்ல? அப்போ உள்ளே இவ்வளவு மாம்பழக்கொட்டைகள் எப்படி வந்தது? ஆங், இப்போ புரிஞ்சு போச்சு, நீதான் அம்புட்டையும் எடுத்து தின்னுட்டு வெறும் கொட்டையை உள்ளாற போட்டு வெச்சிருக்கே. உனக்குதான் உள்ளே என்ன இருக்குன்னு லிஸ்ட் இருக்கில்ல., மாம்பழம் லிஸ்ட்டுல இல்ல, நல்ல வாசனையா இருக்கு, எடுத்து முழிங்கிடலாம்ன்னு நினைச்சு செஞ்சிருக்கே”
பல மணி நேரம் வாக்குவாதம் தொடர்ந்து ஒரு வழியாக முடிந்தது. ஆனால் அங்கே பலரின் முகத்தில் சித்தப்பாதான் பழங்களைச் சாப்பிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதன் பின் சித்தப்பாவிற்கு அப்பாவின் மீது கோபம் குறையவே இல்லை. பல வருடங்களுக்கு, ஏன் இன்றும் கூட ஏதோ ஒரு சாக்கிட்டு அன்று அப்பாவால் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் சொல்லத்தவரியதே இல்லை.
“என்ன ? நினைவுகளிலே முழுகிட்டீங்க போல? வாங்க நாழியாயிடுத்து. பாடிய எடுத்திடலாம். காரியத்தைச் சீக்கிரம் முடிங்கோ”
மறுபடியும் பக்கத்துத்தெரு வெடிச்சத்தம்.
“இந்த வெடி குரங்கு எதுவும் குறுக்கே வரக்கூடாது என்பதற்காகவும் வெடிக்கலாம்”
ராமசாமி சாஸ்திரிகளுக்குப் புரியவில்லை. கீழே கிடத்தப்பட்டிருந்த அப்பாவிற்குப் புரிந்திருக்கும்.
