வாருங்கள் அவசியம்/கணேஷ்ராம்

தெய்வானைக்கு
இடம்
கொடுத்ததில்
வள்ளிக்குக்
கோபம்
அறுபடை
வீட்டில்
ஒன்றில் தான்
துணை இணையெல்லாம்

ஓரிரண்டு
பைரவருக்கு
ஒரு
இழையாவது
சுற்றி
விட்டிருக்கலாம்
விசுவரூபத்தை
வேடிக்கை
பார்க்க
வேண்டியவன்
கோவர்தனகிரியின்
குடைக்குள்
ஒடுங்கினான்
இருநூறு வருட
மார்க்கண்டேயன்
பொம்மையில்
சிவனுக்கு
ப்ராயம்
ஏறிப்போச்சு
எமனின்
எகத்தாளம்
எருமையில்
வழிகிறது

ராமனின்
அருகில்
நிற்பவள்
சீதையல்ல
என்று
இப்போது
சொல்கிறாள்
சீதையல்ல
என்று
எப்பவோ
தெரிந்த
ராமன்
இப்போதும்
சொல்லவில்லை

குடமுழுக்குச்
சந்தடியில்
ஜானவாசம்
ஊர்கிறது
குபேரன்
சம்பத்தில்
செட்டியார்
பழக்கூடை
கவனம்
சிதறுகிறது

நின்ற பெருமாள்
கால் வலித்து
கால் வலித்து
அமர்ந்த வாக்கில்
அயர்ந்த பொழுதில்
சயன கோலத்தில்
நாலைந்து

அதிலொன்று
சிவனென்று
இருந்தால்தான்
என்ன?

எல்லாமே
சாமிதானா
சநாதனமன்றி
வேறில்லையா
என்கிறாள்
எங்கிருந்தோ
பெண்

அட ஆமாம்
என்றாலும்
இன்னுமொரு
அங்குலத்திற்கு
இனியேதும்
இடமில்லை..

ஏற்கனவே
மூணு படி
நாலாவதாய்
புக் ஷெல்ஃப்
பூராவும்
பிள்ளுக்குட்டி

மற்றதெல்லாம்
அங்கங்கே
இடமில்லாக்
கொடுமையினால்

ஓரெட்டு
எடுத்து
வைத்தால்
இங்கிருக்கும்
மாம்பலத்தில்
என் மனைவி
தனியாளாய்
வந்தவரை
உபசரிப்பாள்

சிறுவயது
காலமெல்லாம்
சிதறுகாய்
போலாச்சு
நவீனக்
கொலுவில் தான்
நாகரீகம்
ஏறிப்போச்சு..

2 Comments on “வாருங்கள் அவசியம்/கணேஷ்ராம்”

Comments are closed.