சிவு-வுடனும் தி. ஜா-வுடனும் ஒரு இனிய மாலை/வெங்கி

பேருந்து சிம்லாவை நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது வெள்ளை மழை…” பாடிக்கொண்டிருந்தது. நான் பின்சீட்டுக்களில் ஒன்றில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தேன். மனது அந்தக் குளிரை அனுபவித்துக்கொண்டிருந்தது. அனைத்திந்தியப் பயணத்தில், அடுத்தநாள் குஃப்ரி செல்வதாக ஏற்பாடு.

சிம்லாவிற்குள் சென்று பஸ் இரவுணவிற்காக நின்றது. நண்பர்கள் இறங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். வெளியில் குளிர் யாரோ ஐந்து டிகிரி இருக்கலாம் என்றார்கள். பேருந்தின் முன்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. நண்பிகள் எழுந்து ஒரு சீட்டினருகில், கும்பலாய் நின்றிருந்தார்கள். கேட்டு விஷயமறிந்த போது, சிவு-விற்குத்தான் உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அதிகக் குளிர் சிவு-விற்கு ஒத்துக்கொள்வதில்லை. கயல்விழி சிவு-வின் கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்டிருந்தார். பாதங்களை ஈஸ்வரி தேய்த்துக் கொண்டிருந்தார். என்னுள் மெல்லிய வருத்தம் படர்ந்தது.


கல்லூரியின் கடைசி வருட அனைத்திந்தியப் பயணத்தின்போது, பெங்களூரில் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். இண்டோ அமெரிக்கன் ஹைப்ரிட் சீட்ஸ், IIHR…இன்னும் சில இடங்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விடுதியின் கீழேயே ரெஸ்டாரண்ட் ஒன்று இருந்தது.

இரண்டாம் நாள் மாலை, சுகன்யாவின் உறவினர் வீட்டிற்கு நண்பர்கள் சிலர் போயிருந்தோம். அங்கேயே இரவுணவு சாப்பிட்டோம். சுகன்யா கன்னடத்தில் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

மூன்றாம் நாள், முன்னிரவு ஏழு மணி இருக்கும். சிவு கையில் ஒரு உடையுடன் அறைக்கு வந்தார். “என்னப்பா பண்ற?” கேட்டுக்கொண்டே இடதுபக்கம் சேரில் உட்கார்ந்துகொண்டார். நான் பாலாவின் “இனியெல்லாம் சுகமே” படித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தின் முன் அட்டையை சிவு-விடம் காட்டினேன். கையில் ஊசி வைத்து கொண்டு கொண்டுவந்த உடையில் ஏதோ தைக்க ஆரம்பித்தார். “படிக்கறதெல்லாம் சரிதான். முடிச்சிட்டு கீழே இறங்கிடணும். மிதந்துகிட்டே இருக்கக்கூடாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ”“உள்ளம் கவர் கள்வன்” படிச்சேன். ரொம்ப நல்லாருந்தது. நீ படிச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே பற்களால் நூலைக் கடித்தார். பேச்சு, பாலா, ஜே.கே, தி.ஜா…என்று சுற்றியது. “சரி, வா…வெளியில போகலாம். சார் பார்த்தாருண்ணா, இங்க இந்த ரூம்ல என்ன பண்ற-ன்னு திட்டப்போறார்” என்று எழுந்தார்.

விடுதியை விட்டு வெளியில் வந்து மெயின் சாலையில் இடதுபுறமாகவே நடந்தோம். மறுபடி இடதுபுறம் வளைவு திரும்பியதும், மெஜெஸ்டிக் பேருந்து நிலையம் ஒளிவெள்ளத்தில் எதிர்ப்புறம் தெரிந்தது. பேச்சு பாலாவின் புத்தகங்களைப் பற்றி சுற்றியது. தி.ஜா-வின் பெண் பாத்திரங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டு வந்தேன். தி.ஜா-வின் மீதான சில சீனியர்களின் அவதானிப்பு பற்றி சொன்னேன். ”அகிலன் சொல்றாரு, தி.ஜா. ப்ராக்டிகலாவே இல்ல; பொண்ணுங்க அழகைக் கண்டு பயப்படுறாரு; அதை நேருக்கு நேரா சந்திக்க முடியாம, கடவுள் ரேஞ்சுக்கு உசத்திர்றாரு-ன்னு”. “உண்மைதானே” என்று சிவு சிரித்தார் ”அன்னிக்கு, லேடீஸ் ஹாஸ்டல் வந்துட்டு விஸிட்டர்ஸ் ரூம்ல சேர்ல எப்படி உட்கார்ந்திருந்தேன்னுதான் பார்த்தேனே” என்றார். அன்று, சிவு-விடம் ஜெராக்ஸ் எடுக்க வாங்கியிருந்த வகுப்புக் குறிப்புகளை, திருப்பிக் கொடுத்துவிட்டு, ஊரிலிருந்து சிவு-வைப் பார்க்க வந்திருந்த அப்பாவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போயிருந்தேன். விஸிட்டர்ஸ் ஹாலில், சேரின் நுனியில் ஒரு அமைதியில்லாத்தனத்துடன்தான் உட்கார்ந்திருந்தேன்.

மெஜஸ்டிக் முன்னால் இன்னொரு ரெஸ்டாரண்ட் பக்கத்திலிருந்த தியேட்டருக்கு அருகில் மறுபடியும் திரும்பினோம். தள்ளு வண்டிகளில் வாழைப்பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். பானி பூரி வண்டிகளும் ஒன்றிரண்டு இருந்தன. நேரே சென்று திரும்பினால், ஒரு சுற்று சுற்றி நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு போய்விடலாம். “டீ சாப்பிடலாம் சிவு” என்றேன். முக்கிலிருந்த பெட்டிக்கடையில் டீ வாங்கிக்கொண்டு கடைக்கு அருகிலேயே நின்றுகொண்டோம். சிவு-திருமங்கலம் வீட்டிற்கு வந்திருந்தபோது, மதிய உணவு முடித்துவிட்டு வீட்டு படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஹேமா ஆனந்ததீர்த்தனின் சிறுகதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்கார அம்மா, சிவு சென்ற மறுநாள், என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் “என்ன, இப்படி பேசிக்கிறாங்க” என்று. அம்மா சிரித்துக்கொண்டே “என்னடா பேசுனீங்க அப்படி?” என்று கேட்டார். “ஒண்ணுல்லம்மா, ஒரு கதையைப் பத்தி பேசிட்டிருந்தோம்” என்றேன். நினைவினால் புன்னகைத்துக்கொண்டேன்.

”அழகை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துறதுல என்ன தப்பு சிவு?. ஒண்ணுமே பண்ணமுடியுமாம திகைச்சு நிக்கும்போது, ஏதாவது ஒரு சரியான வழி கண்டுபிடிச்சு சேன்னலைஸ் பண்ணலேனா, அந்த உணர்வு, எனர்ஜி, தப்பான வழியில போயிடாதா?. அழகை தெய்வமாக்குறது ஒரு தப்பித்தல்னா, வேற என்ன வழியிருக்கு?. கல்யாணம் கூட ஒரு சமூக சேன்னலைசேஷன்தானே?” என்றேன்.

”குறுந்தொகையில கபிலரோட ஒரு பாட்டு இருக்கு சிவு. காடுல வரும். நீ படிச்சிருக்கிறியா?. சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி…ன்னு ஆரம்பிக்கும். சரியா வரிகள் ஞாபகமில்லை. ஆனா, அர்த்தம் ஞாபகமிருக்கு “வனத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள், தூங்கும் யானைபோல பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை…”

“பாட்டு நல்லாருக்கு. நீயும் யாரையாவது நெனச்சு பெருமூச்சு விடறயா என்ன?” என்று கேட்டு விட்டு சிவு சிரித்தார். நான் புன்னகையுடன் “எனக்கு இன்னொரு டீ வேணும் சிவு” என்றேன்.