ஒரு நிமிஷம்/மாலன்

எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார் அழகிரிசாமி. தலையணைக்குக் கீழ் இருந்து உறை ஒன்றை எடுத்து நீட்டினார். ” இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். “என்னது இது? கதையா?” என்றார் பத்திரிகை ஆசிரியர். ” இல்லை, இல்லை, என்னைப் பற்றிய குறிப்பு. நானே எழுதியது” என்றார் அழகிரிசாமி. ‘புரியவில்லையே’ என்பது போல அவரைப் பார்த்தார் ஆசிரியர். “ஒருவர் மறைந்துவிட்டால் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வரும் இரங்கல் குறிப்புக்களைப் பார்க்கிறேன். தப்பும் தவறுமாக எழுதுகிறார்கள். எனக்கு அந்த துர்பாக்கியம் ஏற்பட வேண்டாம். எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் அழகிரிசாமி.
எழுத்தாளனின் மோசமான கதை ஒன்று பிரசுரமாவதைவிடத் துயரமானது அவன் இறந்து போவது. அதைவிடத் துயரமானது அவனைப் பற்றி பிறர் எழுதும் இரங்கல் குறிப்புகள்
அண்மையில் அசோகமித்ரன் மறைவை ஒட்டி, அவருக்கு ஆஸ்திரேலிய வானொலியில் எழுத்தாளர் ஜெயமோகன் நிகழ்த்திய அஞ்சலியைக் கேட்க நேர்ந்த போது இது போன்ற ஒரு துயரத்திற்கு நான் உள்ளானேன். முழு நேர எழுத்தாளராக தன் வாழ்வைத் தேர்ந்து கொண்ட அசோகமித்ரன் வறுமையில் வாடினார் என்ற ஒரு தோற்றத்தை எழுப்ப முயன்றது அந்த அஞ்சலிக் குறிப்பு.
நான் அசோகமித்ரனை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக அறிவேன். அவர் பெரும் பணக்காரர் அல்ல என்பது உண்மைதான். ஆனால் பரம ஏழையும் அல்ல. தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஓர் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அயல்நாட்டு தூதரகங்களிலிருந்து வரும் செய்தி மடல்களின் பின்புறம் உள்ள அச்சிடப்படாத வெள்ளைப் பகுதியை எழுதப் பயன்படுத்திக் கொள்வார். வெகுகாலத்திற்கு சென்னைக்குள் செல்ல சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார். 70களில் ‘சுவேகா’ என்ற நிறுவனம் சிறிய எஞ்சின் மூலம் விசையூட்டப்பட்ட சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதனைச் சிலகாலம் பயன்படுத்தி வந்தார். அதனோடு மல்லுக்கட்டிய அனுபவங்களை அவர், தனது சன்னமான குரலில் விவரிக்கும் போது நாம் சிரித்துக் குலுங்குவதைத் தவிர்க்க முடியாது.
பின்னாட்களில் அவரது மகன்கள் படித்து நல்ல வேலைகளுக்கு வந்தார்கள். பெரிய குறைகள் இல்லாமல் அவரைக் கவனித்துக் கொண்டார்கள். தமிழில் அவர் எழுதிய கதைகள் வழியே பெரிய வருமானம் வந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ஹாப்பர் -காலின்ஸ், பெங்குவின் போன்ற சர்வதேச பதிப்பகங்கள் வெளியிடப்பட்டன.
அவை உரிய ராயல்டியை அளித்திருக்கும்.
இது போன்ற துயரங்கள் தனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தானோ என்னவோ, சுந்தர ராமசாமி ஒரு சுய இரங்கல் குறிப்பை கவிதையாக எழுதி வைத்து விட்டுப் போயிருந்தார்.
“நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்,
நண்ப,
பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை.
இரங்கற் கூட்டம் போட ஆட் பிடிக்க
அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மன்ச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.
நண்ப
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன.
ஒரு கோடி நெஞ்சங்கள் குமுறி வெடிக்கின்றன
நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.
1987ம் ஆண்டு, கொல்லிப்பாவை என்ற சிற்றிதழில் சுந்தர ராமசாமி எழுதிய ‘என் நினைவுச் சின்னம்’ என்ற கவிதையின் சில வரிகள் இவை.

இணையத்தில் படித்தது

முகநூலில் : ஆர் .கந்தசாமி