காத்திருப்பு!/ஜெ.பாஸ்கரன்

முப்பது வயதிருக்கும் அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தது. கை, கால்களில் சிராய்ப்புகள். உறைந்த ரத்தமும், சிறு மண் துகள்களும் ஒட்டியிருந்தன.

அருகிலிருந்த பெரியவர் ஆதரவாக அப்பெண்ணின் கையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார்.

இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.

மேலே மின்விசிறி, ‘க்யிக்’ ‘க்யிக்’ என ஒலியெழுப்பியவாறு கடனேயென்று சோம்பலாய் சுழன்றுகொண்டிருந்தது.

இரண்டு மணிநேரம் முன்னால், அவன் தோளின் மீது கை வைத்து ஆரஞ்சுக்கும், சிவப்புக்கும் இடையே விரைந்த இரண்டு சக்கர வண்டியின் பின் சீட்டில் அவள் அமர்ந்திருந்தாள். இப்போது இங்கே தனியாக அழுதபடி காத்திருக்கிறாள்.

நேரம் செல்லச் செல்ல அவள் விசும்பல்கள் அதிகரித்து, கண்கள் சொருகி, மயக்கமாகப் பக்கவாட்டில் சரிந்தாள்..

உடனே அங்கு ஒரு பரபரப்பு…

ஒருவர் ஓடி வந்து முகத்தில் தண்ணீர் தெளித்தார். அருகிலிருந்த பெண், கைத் தாங்கலாக அவளைச் சாய்த்துக் கொண்டு, கையிலிருந்த சிறு டவலால் முகத்தைத் துடைத்தார். மற்றொருவர் பிளாஸ்க்கிலிருந்து சிறிது காப்பியை கப்பில் விட்டுக் கொடுத்தார். கொஞ்சம் குடித்துப் ‘போதும்’ என சைகை காட்டினாள். கொஞ்சம் ஆசுவாசமானாற்போல் தெரிந்தது.

“பயப்படாதே அம்மா, அவருக்கு ஒன்றும் ஆகாது” என்றாள் அருகிலிருந்த பெண்.

பெரியவர், எதிரே சாத்தியிருந்த இரட்டைக் கதவுகளை முறைத்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். ஆப்பரேஷன் தியேட்டர் என்ற சிவப்பு எழுத்துக்கள் அவரை அச்சுறுத்தின. கதவைத் திறந்து வெளியே வந்த நர்ஸ், அவசரமாகப் பக்கத்து அறைக்குள் நுழைந்தார்.

மின்விசிறியின் க்யிக் க்யிக் மட்டும் சுருதி மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

தியேட்டரின் கதவுகள் ‘சட்’டென்று திறப்பதைப் பார்த்து, முகத்தில் கலவரத்துடன் எழுந்தாள் அவள்.

வெளியே வந்த டாக்டர், கையுறைகளைக் கழற்றி, ‘தம்ப்ஸ் அப்’ காட்டியவாறே, அவளைப் பார்த்து சிரித்தார்.