
நண்பர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’ கதையைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே முதலில் ஏற்பட்ட உணர்ச்சி, ஏற்காடு போகும் அந்த பழைய மலைப் பாதையிலே அந்த நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்க வேண்டும் என்ற சாகச உணர்ச்சி தான். அந்த மலைப் பாதை பற்றிய அவரது வருணனையும், அதில் வரும் காட்டாறு பற்றிய அந்த வருணனையும் அந்த நண்பர்களின் உரையாடல்களும் சேர்ந்து அந்த அளவு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது . போகப் போக அந்த சாகச உணர்ச்சியை அழகு உணர்ச்சியாக மாற்றி, அடுத்து பய உணர்ச்சியாக மாற்றி இறுதியில் நிம்மதி உணர்ச்சியாக மாற்றியது , எழுத்தாளரின் சிறந்த எழுத்து நடை.
சாகச மனப்பான்மை உடைய கல்லூரி நண்பர்கள் ஐவர் , மோஹினிப் பேய் நடமாடும் இடம் , காட்டாறு திடீர் என்று பெருக்கெடுத்து வரும் இடம் என்று சொல்லப்படும் அந்த ஏற்காட்டு மலைப் பாதையில் பயணம் செய்து, சில சந்தோஷ , பய அனுபவங்களோடு திரும்பும் நிகழ்ச்சி தான் இந்தச் சிறுகதை. இதை இந்திரநீலன் அவர்கள் விவரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது கதையின் சுவாரஸ்யம்.
‘ காட்டாறு தாண்டி மலை மேலே ஏறாதீங்க, ‘பிச்சிப் புள்ள ‘ புடிச்சுக்கும் என்று அந்த ஆடு மேய்ப்பவர் சொல்லும் ஆரம்ப வரியிலேயே கதையின் சஸ்பென்ஸ் ஆரம்பித்து விட்டது.
அடுத்து வேறுபட்ட குணங்கள் கொண்ட அந்த ஐந்து நண்பர்களையும் அறிமுகப்படுத்தும் விதத்திலும் அவர்களின் குண நலன்கள் வெளிப்படுகின்றன. . அதிலும் நண்பன் ஒருவன் , சொல்லும் இந்த வரிகள் ‘ ஏறும்போதுதான் கஷ்டம் , உச்சியிலே ஏறி கீழே பார்த்தா , உலகமே நம்ம காலடியில் கிடக்கும் , இதெல்லாம் அனுபவிக்காம இன்னும் எத்தனை நாள்தான் ‘ இட்லி , தட்டு வடை ‘ சாப்பிட்டுக்கிட்டு இருப்பீங்க ‘ என்ற வரிகளிலே , நாம இட்டிலி சாப்பிட்டுக் கிட்டு இருந்தாலும் வச்சிட்டு எழுந்து அவர்களோடு சேர்ந்து கொள்ளத் தோன்றும். அப்படித் தான் சற்றே தயங்கிய வேறு ஒரு நண்பனுக்கும் தோன்றுகிறது கதையில் . அந்த நண்பர்களின் ஆர்வமும் வேகமும் பளிச்சென்று வெளிப்படும் இடம் அது .
அதைத் தொடர்ந்து அவர்கள் மலை ஏற ஆரம்பித்த பின் தெரியும் காட்சிகள் அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் கண்ணுக்கு இனிமையாகவும் சற்றே பயமாகவும் .இந்திர நீலன் அவர்களின் எழுத்து வலிமையால் தெரிகின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு வரிகள் .
உயரே ஏற ஏற இயற்கை தன் பச்சை பட்டாடையை விரித்துக் காண்பித்தது. பத்துக்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் ஒன்றாகப் பறந்து சென்றன.
‘என்றோ வந்த காட்டாறு வெள்ளத்தில் ஒரு பாலம் தூக்கி வீசப்பட்டுள்ளது தெரிந்தது. பாலத்தின் ஒரு தூண் அருகிலிருக்க, அடுத்தது 20 ,மீட்டர் தாண்டி ஒரு பாறையின் நடுவே அனாதையாய் செருகியிருந்தது . ‘
வெய்யில் சூடு குறைந்தது. ஆனால் காற்று குறைந்து சற்று வெக்கையாக இருந்தது. உயரத்தால் ஏற்படும் மிதமான குளிரை உணர முடியவில்லை .
நாமும் மலைப் பாதையில் நடக்கும் அனுபவம் கிடைக்கிறது அல்லவா
மச்சான் , தாகம் ஒட்டிக்கிதுடா ‘ என்றான் வினோத் .
எனக்கும்தான் , முதல் வேலை, தண்ணியைத் தேடறது தான் ‘ என்றான் அமித்.
கதையைப் படித்துக்கொண்டு போகும் நமக்கும் அந்த மலை ஏற்றத்தில் நா வறள்கிறது. அங்கே தெரிகிறது ஒரு குடிசை. அதை எப்படி வருணிக்கிறார் கேளுங்கள்.
‘ஒரு பெரிய பாறையை ஒட்டி, ஒரு சிறு தட்டுக் குடிசை போன்ற அமைப்பு. பாதி நீட்டிக் கொண்டிருந்த பாறை மேல் காய்ந்த மரக் கிளைகள், தழைகள் கூரை போல் மூடியிருக்க, மிகச் சிறிய பொந்து போன்ற துவார வாசல். அங்கே மேல்பாகம் உடைந்த ஒரு பானை இருந்தது. எட்டிப் பார்த்தான். உள்ளே தண்ணீர்.
இப்போது திடுக்கிட வைக்கிறார் நம்மை. .
அதை எடுத்துக் குடிக்க முற்படும்போது ‘சடாரென்று வெளிப்படும் அந்த முதிய பெண் உருவம். , அதன் வருணனை நமக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது .
சடை சடையாய் சிக்கு பிடித்த தலை மயிர்க் கால்கள். கோடு கோடாய் சுருக்கம் விழுந்த நெற்றி. குழி விழுந்த நெருப்புக் கண்கள் . எலும்பு தெரியும் அளவிற்குச் சதையில்லாத உடல். சாட்டையாய்க் கைகள் .. பல ஆண்டுகள் கடந்த நைந்த துணியுடுத்தி படு கோரமான உருவம். திடீரென வெளிப்பட, அமித் விக்கித்து மயிர் கூச்செரிய நின்றான். அவனை முரட்டுத்தனமாக தன் எலும்புக்கரங்களால் பிடித்து தர தரவென இழுத்து வெளியே எறிந்தாள்.
‘பிச்சிப் புள்ள ‘ என அலறியபடி அனைவரும் ஓட மழைத் தூறல் துவங்கி வலுத்து, காட்டாறாக மாறி பெருக்கெடுத்து பெரு வெள்ளமாய் மாறி ஓடுகிறது.
இப்போது கதையில் ஒரு திருப்பம்., அங்கே இது போன்ற ஒரு வெள்ளத்தில் முன்பு தன குடும்பத்தையே இழந்த அந்தப் பிச்சி இனி வரும் யாரும் அந்த வெள்ளத்துக்குப் பலியாகாமல் காப்பாற்ற வேண்டும் என்று அங்கேயே தங்கி விட்ட கதையையும் சொல்கிறார் ஆசிரியர். அங்கே இதுவரை பிச்சிப் பேயாக நமக்குத் தெரிந்தவள், பிச்சித் தாயாக மாறுகிறாள்.
இப்போது அந்த பிச்சிப் பேயிடம் இருந்து தப்பித்து ஓடியதாக நினைக்கும் அவர்கள் திரும்பிப் பார்க்க , அவர்கள் முன்பு பார்த்த பாலத்தின் மிச்ச தூணும் உடைபட்டு சிதறி, ஓட , பெரும் வெள்ளத்தின் கொடூரக் காட்சியைப் பார்த்து , தங்களை எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து அந்த பிச்சித் தாய் காப்பாற்றி இருக்கிறாள் என்று உணர்ந்து ‘பனித்த அவர்களின் கண்களை , மழைத் துளிகள் துடைக்க ஆரம்பித்திருந்தன’ என்று கவிதை நயத்தோடு முடிக்கிறார் ஆசிரியர் இந்திர நீலன்.
ஒரு சின்னஞ் சிறிய கதைக்குள் சாகச உணர்ச்சி, அழகு உணர்ச்சி , பய உணர்ச்சி, தியாக உணர்ச்சி , நன்றி உணர்ச்சி என்று அத்தனை உணர்வுகளையும் கதா பாத்திரங்கள், வருணனைகள் , உரையாடல்கள் மூலம் நமக்கும் கடத்தி ஒரு சிறந்த சிறுகதையைப் படித்த உணர்வினை ஏற்படுத்துகிறார். இந்திர நீலன். அவருக்கு வாழ்த்துகள் .வாய்ப்புக்கு நன்றி .

👏👏 மிக அருமையான விமர்சனம், அழகான எழுத்துக்கு…
வாழ்த்துக்கள் 👏
👏👏 மிக அருமையான விமர்சனம், அழகான எழுத்துக்கு…
வாழ்த்துக்கள் 👏
மிக அருமையான விமர்சனம். விமர்சனம் படித்ததும் கதையை படிக்க ஆவல் மிகுகிறது. கதையின் விறு விறுப்பு விமர்சனத்திலும். வாழ்த்துக்கள்.
அருமையான விமர்சனம்.