
(நவராத்திரி கொலுவில் பல பொம்மைகளைப் பார்த்து மகிழும் நாம், ஓர் ஓரத்தில் இருக்கும் இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை மட்டும் கவனிக்கத் தவறுகிறோம். பல ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டுக் கொலுவில் இரண்டு மரப்பாச்சி பொம்மைகளைச் சரிகைத் துணியில் என் தாயார் அலங்கரித்து வைத்திருந்ததைப் பார்த்ததும் நான் அங்கே அமர்ந்து பாடிய பாடலை இப்பொழுது மீண்டும் உங்களுக்காகப் பாடுகிறேன். இதில் ஒரு சின்ன நாடகமே பார்க்கலாம்.)
தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்
கண்டுகண்டு கருப்பாயி சொக்குறா
செட்டியாரு கடைக்குப் போயி அரிசி பருப்பு வாங்கிவரச்
சேந்தாப்பல கெளம்பிட்டாங்க இருவரும் – இந்தச்
சமத்துவம்தான் வாழ்க்கையிலே பலன் தரும்
வட்டிவாங்க மனமில்லாத நேர்மையான செட்டியாரு
மளிகைக்கடை வியாபாரம் நடத்துறார் – ஆனா
காசுபணம் விஷயத்துல மிகக்கறார்
கருப்பாயி கேட்டதெல்லாம் படியளந்து கொடுத்துப்புட்டுக்
காசுவாங்கச் செட்டியாரு மறுக்குறார் – ஆச்சி
காரணமே புரியாம நிக்குறா
கருப்பண்ணன் கருப்பாயி காவல்காக்கும் தெய்வங்களாம்
கண்கலங்கச் செட்டியாரு சொல்லுறார் – ஆச்சி
கன்னத்துல போட்டுக்கிட்டு வணங்குறா
ஊரெல்லாம் ஒறங்கணுன்னு ராவெல்லாம் கண்விழிச்சி
வீதிவீதியா காவல் காக்குறான் – அண்ணன்
வீடுவரைக் கொண்டுவந்து சேக்குறான்
காத்துக்கருப்பு அண்டாமப் பாத்துகுவா கருப்பாயி
காளிமக மாயிகரு நீலிதான் – இந்த
ரெண்டுபேரும் நம்மவூரு சாமிதான்
