பரம்பரை/க நா சு

பிறருக்கு உகக்காததைச்
சொன்னவருக்கென்று
ஒரு தனி நரகம் உண்டானால்
அங்குதான் நான்
போவேன்.

அங்குள்ளவருக்கும்
உகக்காததைச் சொல்ல
எனக்குத் தெரியும். அங்
கிருந்து எங்குப் போவேனோ
தெரியாது.

கடை விரித்துக் கேட்டார்
இல்லாது போனவர் எத்தனையோ
பேர், ஊருக்கு உகக்காததைச்
சொன்ன பரம்பரை – அது
பெரியது காண்.

எழுத்து ஜூலை 1959