ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.
அவ்வளவுதான் பேசினோம். அப்புறம் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்தும்போதுதான், என் ரிலேடிவ் பையன் ஒருத்தன் கணேசன்னு சொல்லிட்டு, அவர அடையாளம் கண்டுகிட்டு, அவர்கிட்டபோய், நீங்கதானே ஆதவன், தீபத்துல கதையெல்லாம் எழுதறீங்களேன்னு கேட்டான். அப்பத்தான் எங்களுக்கு அவர் ஒரு ரைட்டர்னே தெரிஞ்சுது. அதுவரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.
அடுத்தநாளே, கணேசன், தீபத்துல வந்த காகித மலர்கள் தொடரைக் கட் பண்ணி பைண்ட் பண்ணிக் கொண்டு வந்துகொடுத்தான். அவரும் உடனே அவன் வீட்டுக்குப் போய் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார். அப்படி ஒரு எளிமை. தான் யாரு என்னன்னு கூட சொல்லிக்க மாட்டார்.
அவரோட அம்மா சொல்லுவா, எனக்கு இப்படி ஒரு பையன் இருக்கான்னு அக்கம்பக்கத்துல இருக்கறவாளுக்குக் கூட தெரியாது. அப்படி ஒரு சைலண்ட். எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருப்பார். அவர் மட்டுமல்ல, அவரோட அப்பா, அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் ஏதாவது படிச்சுண்டே இருப்பா. சாப்பிடும்போது கூட கையில ஒரு புக்கு இருக்கும்.
அவரோட அப்பா, பெரிய சம்ஸ்கிருத ஸ்காலர். டில்லியில படிச்சதால, இந்திதான் ஸ்கூல்ல படிச்சது. பின்னால, தமிழ் ஆர்வத்துல தமிழ் புக்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சார். அப்போதெல்லாம், மெட்ராஸ் போயிட்டு, தில்லி வந்தாரானால், இரண்டு கையிலும் புத்தகக் கட்டுதான் இருக்கும். தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வருவார். “யாராவது ஸ்டேஷனுக்கு வந்து ஹெல்ப் பண்ணக்கூடாதோ”ன்னு கேப்பார்.
படிக்கறதுல அப்படி ஒரு ஆசை. வீட்டுல ஐஞ்சாறு டிக்ஷ்னரிகள் இருக்கும். காலையில குளிச்சுட்டு, தலைய துவைட்டிக்கிட்டே, ஓடிவந்து டிக்ஷ்னரிய திறந்து என்னவோ வார்த்தைகளைப் பார்த்துண்டிருப்பேர். இரண்டு மூன்று டிக்ஷ்னரிகளை மாத்தி மாத்தி பார்ப்பேர்.
அதிர்ந்து பேசவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க ஊட்டிக்குப் போனோம். அங்க படிப்படியா இருக்கற மலையையும் இயற்கையையும் பார்த்துட்டு, “இதெல்லாம் பார்த்துக்கோ, சீக்கிரம் இதெல்லாம் என் எழுத்துல வரும்”னு சொன்னார்.
அவர் அதிகமும் என்ன கூட்டிக்கிட்டு போனது எழுத்தாளர்கள் வீட்டுக்குத்தான். அங்கையும் அதிகம் பேசமாட்டார். இ.பா மேலயும் அசோகமித்திரன் மேலயும் ரொம்ப அபிமானம். இங்க பெங்களூர்ல இருந்தபோது, அடிக்கடி சரஸ்வதி ராம்நாத் மாமியப் பார்க்கப் போயிடுவார்.
எழுத்து மேல ரொம்ப ஆசை. இப்படித்தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு ஏதும் அவசியமில்லை. எங்கவெண்ணா உட்கார்ந்துண்டு எழுதுவார். மடியில ஒரு சூட்கேஸை… வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டே இருப்பார். மணி மணியா இருக்கும் எழுத்து. சில சமயங்கள்ல, போஸ்டாபீஸ் போய் கடைசி வரிகளையெல்லாம் எழுதி, போஸ்ட் பண்ணிட்டு, ஆபிஸ் போவார்.
முதல்ல ரயில்வே வேலையா இருந்தார். ஏழு வருஷம். அப்பறம் 1975லதான் நேஷ்னல் புக் டிரஸ்ட், தமிழ் பிரிவுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டர் வந்தார். 1984 வரைக்கும் தில்லியில இருந்தோம். அப்புறம், அவருக்கு பெங்களூருக்கு போஸ்டிங்க ஆச்சு. இங்க வந்தோம்.
என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே, அவர் காகித மலர்கள் எழுதிட்டார். அதை ஒரு தபசு மாதிரி பண்ணினேன்னு சொல்வார். தில்லியில வெளிய போகும்போது, அவர் உட்கார்ந்துண்டிருந்த காபி பார், ரெஸ்டாரெண்ட் எல்லாம் காண்பிப்பார்.
பத்திரிகைகள்லேருந்து கதை கேட்டாதான், கதை எழுதுவார். கதை எழுதிட்டு, என் கிட்ட படிக்கக் குடுப்பார். “எனக்கென்ன, இதெல்லாம் புரியப்போறது”னு சொன்னா, “ஐயோ, எல்லாருக்கும் புரியணும்னுதான் கதை எழுதுறேன். உனக்கும் புரியணும். படிம்”பார்.
இங்க பெங்களூர் வந்த பின்னால, பாரதியாரை படிச்சுண்டே இருப்பார். அதுக்குள்ளேயே “புழுதியில் வீணை” எழுதிட்டார். 39 வயசுக்குள்ள என்னமா எழுதியிருக்கான். சாதிச்சுருக்கான்னு பாரதியார் மேல ரொம்ப ஆச்சரியப்படுவார். அந்த நாடகத்தை எப்படி மேடையேத்தணும்னு பெரிய கனவே இருந்தது அவருக்கு. அந்த நாடகத்தைப் படிச்சாவே தெரியும். நிறைய குறிப்புகள் எழுதியிருப்பார். அதுல தீ, தீ, தீ ன்னு வர வரிகள் எப்படி சொல்லப்படணும்னெல்லாம், அவரே சொல்லச்சொல்லி, கேசட்டுல பதிவு பண்ணி வெச்சிருக்கார்.
தமிழ் மாதிரியே இங்கிலீஷ்லயும் அவருக்கு அபார திறமை உண்டு. எம்.எஸ்.ராமஸ்வாமி அவரோட சிறுகதை ஒன்றை மொழிபெயர்க்கறேன்னு சொல்லி கேட்டார். அப்புறம், பின்னால, சாகித்ய அகாதமியோட ஒரு புக்குல, ஆதவனே மொழிபெயர்த்த ஒரு கதையைப் படிச்சுட்டு, நிச்சயமா என்னால இது மாதிரி முடியவே முடியாதுன்னு சொல்லி லெட்டர் போட்டுட்டார்.
மேடையில பேசும்போது ரொம்ப நிதானமா பேசுவார். தான் சொல்லற வார்த்தை சரியான வார்த்தையான்னு யோசித்து யோசித்து பேசுவார். அவர் வார்த்தைகளை கோர்க்கறார்ங்கறது அவரோட முகத்தைப் பார்த்தாவே தெரியும். ஆனால், எழுத்துல அப்படி இல்ல. எழுதித் தள்ளிண்டே இருப்பார். நல்ல ஸ்பீட்.”

முகநூல் பதிவு : ஆர் .கந்தசாமி 

0