கம்பன் கவியமுதம்—59/வளவ. துரையன்

கொடிகளால் தேயும் சந்திரன்
காண்வரு நெடுவரைக் கதலிக் கானம்போல்
கோண்நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாணனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண்மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்கவே [131]

[வரை=மேகம்; கதலி=வாழை; பதாகை=பெருங்கொடி; குழாம்=கூட்டம்; வாள்=ஒளி; வைகலும்=நாள்தோறும்;]

இப்பாடலில் ’கோண்நிமிர்’ என்பதைக் ‘கோள்நிமிர்’ என்றும், ’வாணனி’ என்பதை ‘வாள்நனி என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். அயோத்தி நகர மாளிகைகளிலே நிறையக் கொடிகள் பறக்கின்றன. மலைகளின் மீது வாழைக் காடுகள் இருப்பதைப் போல் மாளிகைகள் மீது அக்கொடிகள் இருக்கின்றனவாம். மாளிகைகள் மிக உயரமாக இருந்து அவற்றின் உச்சிகள் நவக்கிரக மண்டலம் வரை ஓங்கி உள்ளன. எனவே கொடிகளும் அம்மண்டலம் வரை உயர்ந்து பறக்கின்றன. மேலும் அம்மண்டலத்தின் வழியேதான் சந்திரன் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி அது செல்லும்போது அக்கொடிகள் பட்டு சந்திரன் ஒளி குறைந்து தேய்கிறது; சந்திரம் உருவமும் வளைந்து போகிறது. சந்திரனும் நாள்தோறும் தேய்ந்து போகிறது.

சந்திரன் தேய்பிறையில் தேய்வதற்குக் கம்பன் ஒரு காரணம் இப்பாட்டில் கற்பித்துக் கூறுகிறான். இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியாகும்.