குழந்தை வித்வான்

ரேவதி பாலு

   அனுவின் ஒரே மகன் 10 வயது அருணுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது

புரியவர அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து கற்றுக் கொள்ள வைத்து இதோ இன்று மிருதங்க அரங்கேற்றம்.

 அரங்கேற்ற நிகழ்ச்சி யில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த தனி ஆவர்த்தனம் ஆரம்பம் ஆயிற்று. சிரித்த முகத்துடன் சதுஸ்ர நடையில் கோர்வைகள் போட ஆரம்பித்த அருண் பிறகு நடை மாற்றி ஃபரன்கள்  பொறி பறக்க மோஹராக்கள் அழகுற  மின்ன அனாயசமாக வாசித்து முடிக்க ஒரே கைதட்டல் மழை.
 " அட! தோற்றத்திலேயே ஒரு வித்வானோட கம்பீரம் வந்திருக்கே நம்ப அருணுக்கு!" அனுவின் சகோதரன் சிலாகிக்க மேடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அருணையே உற்றுப்பார்த்த அனுவுக்கு ஒரு நொடி மனம் கலங்கிப் போனது.

' அம்மா அம்மா என்று நொடிக்கு நூறு தடவை கூப்பிட்டு கொண்டு என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் குழந்தை  அருண் காணாமல் போய் விட்டானா? மேடையில் நிற்கிற இந்த மிருதங்க வித்வான் எனக்கு ரொம்ப அன்னியமாக தோன்றுகிறானே?'

  விழா முடிந்து கூட்டம் மெதுவாக கலைய ஆரம்பித்தது அரங்கத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் விழாவிற்காக தான் கொண்டு வந்திருந்த சாமான்களை சரிபார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்த

அனுவின் இடுப்பை பின்புறம் இருந்து ஒரு கரம் வளைக்க காதருகே ஒரு அலறல் “அம்மா “என்று.

 "சாயந்திரம் சாப்பிட கொடுத்தியே 

அந்த கேசரி பாக்கி இருக்கா ” அவள் பதிலை எதிர்பாராமல் அந்த அறையில் கேசரி வைத்திருந்த எவர்சில்வர் சம்புடத்தை அருண் தேட ஆரம்பிக்க,

“அட என் சமர்த்து குட்டி “என்று திரும்ப குழந்தையாக மாறிய அந்த மிருதங்க வித்வானைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அனு.