
ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்:
”ஆதவன் என் வாசிப்பில் முக்கியமான எழுத்தாளர் அல்ல. பொதுவாசிப்புத் தரத்துக்கு சற்று மேல் என்று சொல்லத்தக்க தரம் கொண்டவை அவர் ஆக்கங்கள். அன்றைய பொதுமோஸ்தரான சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவை. இன்று, அந்த காலகட்டம் பின்சென்ற பின் அவை மேலும் ஒளிமங்கியிருக்கின்றன.”
ஆதவன் பற்றி ஜெயமோகன். ஆனால் ஆதவன் இல்லாவிட்டால் நான் எழுத்தாளனே இல்லை. நான் எழுத ஆரம்பித்ததே ஆதவனைப் படித்ததனால்தான். சில சமயங்களில் முன்பு இளமையில் நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்கள் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு அந்நியமாகப் போய் விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஆனதில்லை. ஆதவனை சமீபத்தில் நான் முழுமையாகப் படித்தபோது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் எழுத்து என்னை எப்படி ஈர்த்ததோ அப்படியே இப்போதும் ஈர்த்தது.
இந்த வேறுபாடு இலக்கியம் குறித்து சாரு, ஜெயமோகன் இருவருடைய அணுகுமுறை மற்றும் ரசனையின் அடிப்படையில் உருவாகிறது. இருவேறு இலக்கியப் பள்ளிகள் என்றுதான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு எப்போது புரிந்ததோ அப்போதிருந்து அவரோடு சண்டை போடுவதை நிறுத்தி விட்டேன்.
