மதுவந்தியின் “திரும்பி வந்தால் உனது”/வத்சலா  

சமீபத்தில் வெளியான மதுவந்தியின் ”திரும்பி வந்தால் உனது” என்கிற கவிதைத் தொகுப்பை நான் படித்தேன் மதுவந்தி எனக்கு நண்பர் தான் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சொல் என் மனதில் எழும் அது என்னவென்றால் மென்மை. அவர் பேசும் விதம் அவருடைய கவிதைகள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே மிக மென்மையாக மிகவும் பாசிட்டிவாக இருக்கும் இந்த ”திரும்பி வந்தாளல் உனது” எனும் கவிதை தொகுப்பும் அத்தகைய குணங்களே கொண்டிருக்கிறது அதில் உள்ள அத்தனை கவிதைகளுமே மிக அழகானவை. மென்மையான குரலில் காத்திரமான விஷயங்களை சொல்லிவிடும் தன்மை கொண்டவை. அவற்றில் ஒரு சில கவிதைகளை பற்றி சொல்ல விரும்புகிறேன்

முதலில் அவருடைய தாய்மை எனும் மிகச் சிறிய கவிதை

  தாய்மை

அந்த நூறாவது மகனையும்
பெயர் சொல்லித்தான்
அழைப்பாள்
காந்தாரி

இதை விட சுருக்கமாக, இதை விட விஸ்தாரமாக, இதை விட எளிமையாக, இதை விட ஆழமாக ஒரு தாயின் அன்பின் சிறப்பை பற்றி சொல்ல முடியுமா? தலைப்பே தேவையில்லாத கவிதை அது. The title is superfluous.

(இப்பொழுதே ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன், இங்கு வந்திருப்பவர் யாராவது “இதை ஏற்கனவே வாவேசு சார் சொல்லிவிட்டார்” என்று முணுமுணுப்பதற்குள். நான் சொல்லணும் நெனெக்கறெதெ எல்லாம் அவர் சொல்லிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவர் இதெ சொல்லாட்டாலும் நான் சொல்லி இருப்பேன்னு ஈனஸ்வரத்திலெ சொல்லத்தான் முடியும், நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும்)

தேர்ந்தெடுத்தது தான் எடுத்தார் உன்னதப் புருஷர்களான ராமர், கிருஷ்ணர் பாண்டவர்களின் தாய்களில் ஒருவரை தேர்ந்தடுத்தாரா? இல்லை. கௌவரவர்களின் தாயை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏன் அப்படி? வவேசு அவர்கள் தொகுப்பின் முன்னுரையில் கூறி இருப்பது போல் நல்ல பிள்ளையை நேசிக்க எல்லோராலும் முடியும். ஆனால் எல்லோரும் வெறுக்கும் ஈன குணங்களை கொண்ட பிள்ளைகளை ஒரு தாயால் தான் நேசிக்க முடியும். அதுவும் அரக்க குணங்களைக் கொண்ட சூர்பனகை அதே குணங்களை கொண்ட அண்ணன் ராவணனை நேசிப்பது போல அல்ல. கௌரவர்களின் செயல்கள் தவறன்று அறிந்தவள் காந்தாரி. அப்படியும் அவர்கள் தன் பிள்ளைகள் என்பதால் அவர்களை நேசித்தாள்.

சரி, அந்த நேசத்தை மதுவந்தி எப்படி வெளிப்படுத்துகிறார்? அவர்கள் அத்தனை பேர்களையும் பெயர் சொல்லி அழைப்பாளாம் காந்தாரி! எப்படித் தோன்றிற்று மதுவந்திக்கு? அதையும் அவர் எப்படி சொல்கிறார்?

அத்தனை மகன்களையும் பெயர் சொல்லி அழைப்பாள் என்று சொல்லவில்லை.
நூறாவது மகனையும் பெயர் சொல்லி அழைப்பாள் என்றும் சொல்லவில்லை
(அதுவே மிக அழகாக அமைந்திருக்கும்.) ஏனெனில் நூறாவது மகனையும் என்றால் அது அவனை விட மூத்தவராகிய மற்ற 99 மகன்களையும் சேர்த்துக் கொள்ளும். மதுவந்தி அதற்கும் ஒரு படி மேலே போய்
“அந்த நூறாவது மகனையும்” என்று சொல்கிறார். ”அதோ அங்கே நிற்கிறானே அந்த நூறாவது மகனையும்” எனும் போது நம் மனக் கண்ணில் அந்த கடைகுட்டி கௌரவன் விரஜசன் தெரிகிறான்.

 நான் மகாபாரதம் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்திருகிறேன் புகழ் பெற்ற கவிஞர்  நானாலால் “பரத கோத்ரனா லஜ்ஜா சீர்” எனும் பெயரில் குஜராத்தியில்  எழுதிய பாஞ்சாலி சபதத்தைக் கூட படித்திருக்கிறேன். ஆனால் சத்தியமாக துரியோதனன், துச்சாசனன். விகர்ணன் இந்த மூன்று பேர்களைத் தவிர மற்ற 97 கௌரவர்களுக்கு என்ன பெயர்கள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்ததில்லை. ஆனா மதுவந்தியின் இந்த கவிதையை படித்தவுடனே கூகுள் ஆண்டவரை கேட்டு 99 கௌரவர்களின் பெயர்களைத் தாண்டி 100ஆவது கௌரவரோட பெயர் ”விரஜசன்” என்றுத் தெரிந்துக் கொண்டேன். (இதெ தவிர அல்செமைர் வியாதி வராமல் இருப்பதற்காக மற்ற 96 பெயர்களையும் மனப்பாடம் பண்ணும் திட்டம் ஒன்றும்  இருக்கிறது. எல்லாம் மதுவந்தி அருளால்! ) ஜோக்ஸ் அபார்ட் இந்த  கவிதையில் கவனிக்க வேண்டிய  சிறப்பம்சம் இன்னொன்றும் உள்ளது. அது என்னவென்றால், மதுவந்தி

“அந்த நூறாவது மகனையும் பெயர் சொல்லி அழைப்பாள் காந்தாரி”
என்று சொல்லவில்லை

அவர் சொல்கிறார்

“அந்த நூறாவது மகனையும் பெயர் சொல்லித்தான் அழைப்பாள் காந்தாரி சொல்லித்தான்” என்பதில் “தான்” என்பது முக்கிய அழுத்தத்தை கொடுக்கிறது.
ஐபிம் (IBM) மேனுவல்களை பற்றி சொல்வதுண்டு, அவற்றில் ஒரு சொல் கூட அநாவசியமாக இருக்காது என்று. இந்த கவிதையும் அப்படித்தான்.
படித்து நான்கு நாட்களுக்கு இரவு பகலாக என்னை சுற்றி சுற்றி வந்தது

  மதுவந்தி  பத்து “ஒரு கவிதை”கள் எழுதியிருக்கிறார். எல்லாமே அழகாக இருக்கின்றன. ஆனால் என் மனதை தொட்ட ஒரே ஒரு “ஒரு வரி கவிதை” பற்றி மட்டும் கூற விரும்புகிறேன்.  இசையை  நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசிப்போம். ஆனால் மதுவந்தி அந்த ரசனையை வர்ணிக்கும் விதம் முற்றிலும் புதுமையாக இருக்கிறது. அவர் வருணிக்கிறார் ,”செவி ததும்பி கசியும் இசை .” என்று. எப்பேர் பட்ட மாணிக்க வரி!

அடுத்து மயிலிறகு என்று ஒரு கவிதை

மயிலிறகு

கூடவே பயணித்தாலும்
சேரவே முடியாத தண்டவாளங்களை போல்
என் கூட வர உன் நினைவு மட்டுமே

விழி ததும்பும் நீர்
நடைமேடையிலும் பிரதிபலிக்க
தூண் ஓரம் ஒளிந்து
உன்னை பார்த்திருக்கிறேன்

கூடவே பழகிய நாட்களில்
உன்னிடம் சொல்ல தயக்கம்
இன்று புத்தாடை சரசரக்க
வளையோசை சிணுங்க
மருதாணிச் சிவப்பேறிய கையசைத்து
அம்மாவை கட்டிக் கொள்கிறாய்

வழி அனுப்ப வந்திருக்கும் குடும்பம்
கண்ணில் நீர் வழிய உன்னை
விடை விடையனுப்பத் தயாராகிறது
உள் நுழையும் ரயிலின் சப்தம்
கேளாமல் நின்றிருக்கிறேன்
புத்தகத்துள் புதைத்த மயிலிறகென
உன் நினைவை புதைத்தபடி

இள வயது காதலை மயிலிறகு போன்ற மென்மையான சொற்களில் கூறுகிறது இந்த கவிதை. கூட பழகிய நாட்களில் தன் காதலை அந்தப் பெண்ணிடம் சொல்லத் தயங்கி கடைசியில் அவள் திருமணம் ஆகி போகும்போது ஒரு தூணில் மறைவில் நின்று கொண்டு அவளுக்கு விடையளிப்பும் காட்சி நம்மால் மறக்க முடியாத ஒன்று

அடுத்ததாக நான் மிகவும் ரசித்த கவிதை:
புத்தகம் எனப்படுவது
எது புத்தகம்?
சங்க காலப் பனையோலைச் சுவடி
கையெழுத்து பத்திரிக்கை
அச்சடித்த நூல்
மின் நூல்
மாறிக்கொண்டே இருக்கிறது
வடிவம்
உன் உணர்வை
எனக்கு கடத்துவது
புத்தகம்
ஒர விழிப் பார்வை
மெதுவான விரல் தொடுகை
இதமான புன்முறுவல்
உதிரத் தயாரான துளி க் கண்ணீர்
இவையும் புத்தகம்

இந்த கவிதையில் மதுவந்தி எது புத்தகம் என்பதற்கு ஒரு பொருள் வரையறை அதாவது டெஃப்னிஷன் தருகிறார். முதலில் காலத்திற்கு ஏற்றார்போல் மாறி வந்திருக்கும் அதன் வடிவத்தைப் பற்றி கூறுகிறார்.

சங்க காலத்தில் ஓலைச்சுவடி தான் புத்தகம். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து ”பூபாளம்” போல சில சிறுபத்திரிகைகள் கையெழுத்து பிரதிகளாக வந்தன. அதன் பிறகு அச்சடித்த நூல்கள் வந்தன. இப்பொழுது மின்னூல் வந்திருக்கிறது இது வரை புத்தகத்தின் வடிவம் பேசப்படுகிறது இந்தக் கவிதையில். அடுத்து மதுவந்தி வேறு பரிமாணத்தில் புத்தகத்திற்கு டெஃபெனிஷன் கொடுக்கிறார். அது என்ன? ”உன்னுணர்வை எனக்கு கடத்துவது புத்தகம்”. அபாரம்! உன் கருத்தை எனக்கு கடத்துவது புத்தகம் என்று சொல்லவில்லை. ”உன் உணர்வை எனக்கு கடத்துவது புத்தகம்” என்கிறார். உண்மைதானே? சரி, உணர்வை கடத்துவது தான் புத்தகம் என்றால் நாம் எதையெல்லாம் புத்தகம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்? அவர் சொல்கிறார்: ஒரு விழி பார்வை, மெதுவான விரல் தொடுகை, இதமான புன்முறுவல் எல்லாமே புத்தகம் என்று. கடைசியில் அவர் கூறுவது நம்மை எங்கோ கொண்டு போய் விடுகிறது. சொல்கிறார், ”உதிரத் தயாரான துளிக் கண்ணீர். அது இன்னும் உதிரவில்லை. உதிரத் தயாராக இருக்கிறது.. அதுவும் ஒரு புத்தகம். அற்புதமான வரி. அற்புதமான கவிதை.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் ரசித்த கவிதைகளை சொல்லவேண்டுமென்றால் இந்த புத்தகத்தில் இருக்கும் அத்தனை கவிதைகளைப் பற்றி கூற வேண்டியிருக்கும். அது என் நோக்கம் அல்ல. இது வாசிக்க வேண்டிய புத்தகம் வாசித்து ரசிக்க வேண்டிய புத்தகம் என்பதை இந்த விமர்சனத்தை படித்தவர் புரிந்துகொண்டால் போதும். கவிஞர் மதுவந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

2 Comments on “மதுவந்தியின் “திரும்பி வந்தால் உனது”/வத்சலா  ”

  1. ஆகா…மதுவந்தியின் கவிதைகள் உயர்வு மட்டுமில்லை கட்டுரையாளரின் இரசனையும். அழகாக வெளிப்படுகிறது.

Comments are closed.