
கதிர் முதலில் கண்ணாடிகளைத்துடைத்தான்.பின் அவற்றைத்தாங்கி நின்ற மேஜையின் மேல் பாகத்தை.அவற்றைத்துடைப்பதற்கு இடம் பண்ணிக்கொள்வதற்காக சற்றே ஓரமாக தள்ளி வைத்த கறுப்பு சுழல் நாற்காலிகளையும் முன்னே இழுத்து துடைத்து வைத்தான்.ஓரமாக மாட்டப்பட்டிருந்த அப்பா படத்தின் மீதும் அவன் தினமும் உதவிச்செய்ய வேண்டிக்கொள்ளும் பெருமாள் படத்தையும் ஈரத்துணி கொண்டு துடைத்தான். வாசனைக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்தான். பின் ஓர் ஓரமாக சென்று அமர்ந்தான்.
இது தினமும் நடப்பது தான். தெருக்கோடியில் இருக்கும் அந்த சலூனுக்கு வருவதற்குள் மூன்று சலூன்கள் வந்துவிடும். அனைத்தும் புதிதாக்கப்பட்டவை. உபயம் ஏதோ ஒரு வங்கியின் பெயர் இருக்கும். நவீன கத்திரிகள், குளிர்சாதன வசதி.க்ராப் செய்யப்படும்போது பார்ப்பதற்கு காணொளி பெட்டி,எலுமிச்சை மணம் கலந்த ஏதோ ஒரு செண்ட்,நன்றாக பளீரிடும் வெள்ளை விளக்குகள்….இன்னும் கதிர் முடிவெட்டும் நிலையத்தில் இல்லாத பல புது மோஸ்தர்கள். இவை வருபவர்களை எளிதில் இழுக்க கதிருக்கு இவற்றைத்தாண்டி வருபவர்கள் ஒன்றோ இரண்டோ.
அவனுக்கு தன்னை நினைத்து லேசாக கண்ணீர் வந்தது. நன்றாக படிக்ககூடியவன் தான்.ஆனால் அப்பா இறக்கும் தருணத்தில் டேய் கடையை விட்டுடாதடா…அது என் உசுறு….நீதான் பார்த்துக்கணும் என்று திக்கித்திக்கி குழறியபடி வேண்டுகோள் வைக்க, கதிர் படிப்புக்கு சலாம் வைத்து முழுநேர முடிவெட்டுபவன் ஆனான்.
அவன் கண்கள் அப்பாவை குறை கூறின.சில நாட்கள் முன்னர் தான் குழந்தை பிறந்திருந்தது.பிறப்பிலேயே சற்றே குறைவான இயக்கம் கொண்ட இருதயம். அதற்காக மாதம் பல ஆயிரங்கள் எடுத்துவைக்க வேண்டிய நிலை. தவிர வீட்டுச்செலவு, கடைக்கான பொருள் செலவு வீட்டு வாடகை, கடை வாடகை…அவற்றை பட்டியலிடவே அவனுக்கு தலை சுற்றியது .இதற்கே கடன் தான் கை கொடுக்கிறது.இதில் கடையை புதுசு படுத்த பணத்திற்கு எங்கே போவது?
‘அய்யா….பெருமாளே….நீ தான் கதின்னு இருக்கேன். எனக்கு ஏதோ ஒரு வழி காட்டு அய்யனே….’
கடையின் பின்புறம் சாமான்கள் வைக்கும் இடத்தில் ஒரு பழைய பெட்டி ஒன்று இருந்தது. அப்பா இறப்பதற்கு முன் அதைப்பற்றி ஏதோ சொல்லத்துடித்தார். உனக்கு ஏதானு வாழ்கையிலே சிரமம் ஏற்பட்டுச்சின்னா…..முழுவதும் சொல்லி முடிக்காமல் சென்றுவிட்டார்.
கதிர் எழுந்துச்சென்று அந்த பெட்டியைத்தேடினான். அது அப்பாவின் கொள்ளுதாத்தா கைகளில் எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று சவரம் செய்யும் பெட்டி என்பது வரை அவனுக்குத்தெரியும். அதற்குப்பின் அவன் தாத்தா காலத்திலேயே சிறியதாக கடை துவங்கப்பட்டு அந்த பெட்டிக்கான வேலை முடிந்துவிட்டது. ஆனால் அப்பா அதை எப்போதும் ஆயுதபூஜைக்கு கடவுள் முன் வைத்து பூஜை போடுவார். அவர் தாத்தா அவருக்கு அருள் புரிவதாக நம்பிக்கை.
கதிருக்கு இன்று என்னவோ அந்த பெட்டியை திறக்க வேண்டும்.போல் இருந்தது.
மெதுவாக திறந்தான்.பல வருடம் திறக்கப்படாமல் வைத்திருந்ததால் துரு ஏறி நின்றது.சுத்தியல் கொண்டு தட்டித்திறகலாமா அல்லது அது மரியாதை குறைவா….? வேண்டாம் என்று முடிவெடுத்தான்.அப்பாவிற்கு பிடிக்காது.தலை மசாஜுக்கு வைத்திருந்த எண்ணையை பெட்டியின் மீது தடவினான்.மூடி சற்றே அசைந்து கொடுத்தது.
மெதுவாக மூடியைத்திறந்தான்.குப்பென்று புகை மண்டலம். அடக்க முடியாமல் வந்த தும்மலையும் இருமலையும் சத்தமாக இட்டபடி துணி ஒன்றை எடுத்து முகத்தை மூடிக்கொண்டான்.அறை முழுவதும் புகை மண்டலம். சரி அடங்கட்டும் என்று வெளியே சென்றான்.
வாஷ் பேசினில் முகத்தை அலம்பி திரும்பியவன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த சிறிய உருவத்தைப்பார்த்து திடுக்கிட்டான்.
‘இது யாரு…இந்தப்பையன் எப்ப வந்தான்? ஒரு வேளை அறைக்கு உள்ளே இருந்தபோது வந்திருப்பானோ? கேட்டுவிடலாம்….
” யாருப்பா…க்ராப்பா, சவரமா…?”
பையன் சிரித்தபடி கிராப் என்றான்.
கதிர் அவசரமாக வெள்ளையாக இருந்த ஒரு புது டவல் ஒன்றை எடுத்து அவன் கழுத்தைச்சுற்றி மாலையாக போட்டான்.
” என்ன கட்…?”
” எனக்கு எது சரியா இருக்குமோ அது..”
கதிருக்கு ஆச்சர்யம்.இந்த காலத்தில் இப்படி ஒரு சிறுவனா.அண்ணா எனக்கு இந்த சினிமாவுலே விஜய் வெச்சிருப்பாரே அந்த கட், இவரைப்ப ஸ்டெப் கட், அவரைப்போல க்ளோஸ் கட் என்று அழுத்தை அறுக்கும் இளைய சமுதாயத்தில் ஒரு வித்யாசமான பையன் தான்.
கதிர் அவன் முகத்தைத்திருப்பி இந்த பக்கமும் அந்த பக்கமுமாக சாய்த்துப்பார்த்தான்.பின் பக்கத்தைப்பார்பதற்கு சுழல் நாற்காலியை சுழற்ற வந்தான்.
” இருங்க…நானே தலையை திருப்பிக்காட்டறேன்…” பையனின் சிறிய தலை அவனை நோக்கி ஒரு சுற்று சுற்றி நின்றது.
கதிர் கைகளி இருந்த சீப்பு தடாலென்று கீழே விழுந்து உடைந்தது.
“நீ….அய்யோ..பி…சா..சு….பூதம்….பேய்….”
பையனின் முகம் சாதா நிலைக்குத்திரும்பியது.
“அட….பூதம் தான்….ஏன் என் பெயரில் இவ்வளவு குழப்பம்” மிகவும் சாவதானமாக நண்பனுடன் அரட்டை அடிப்பது போல் பேச ஆரம்பித்தது.
கதிர் வியர்த்து வேர்த்திருந்தான்.
“பயம் ஏன்.உன் கொள்ளு தாத்தா பூதம்ன்னு என்னை நினைச்சுக்கோ.இன்னும் சொல்லணும்ன்னால் அவர் செய்த புண்ணியங்களின் உருவம் தான் நான்.சரி உனக்கு உதவ வந்திருக்கேன்.ஆசைப்பட்டதைக்கேள்….”
கதிருக்கு அப்பா என்ன சொல்ல வந்தார் என்பது இப்போது புரிந்தது.புரிந்த உடன் பயம் விடை பெற்றது.
” பூதமே….உன்னை அப்படிக்கூப்பிடலாமா?”
பூதம் தலை அசைத்தது.
“நீ என்ன சினிமாவுலே காட்டப்படும்.பூதம் போலவா…மாளிகை,தங்கம்,வெள்ளி,பணம் என்று கொண்டு வந்து தர முடியுமா?”
பூதம் தலை அசைத்தது.
“ஆனால் பூதம் நான் உழைக்காமல் வரும் எந்த பணமும் எனக்கு தேவையில்லையே”
பூதப்பையன் சிரித்தான்.
” உன்னை நானறிவேன்.ஆனால் நீதானே பெருமாளை வழிகாட்டச்சொல்லி வேண்டிக்கொண்டாய்?”
“சரியான வேலை மூலம் முன்னுக்கு வருவதற்கு அய்யனிடம் வேண்டிக்கொண்டேன்.சரிதான்.ஆனால் ….”
பூதம் நகைத்தது.
“உனக்கு பணம் காசு என்று எதையும் நான் தரப்போவதில்லை.ஆனா இனிமே நீ உன் வேலைக்காக உபயோகப்படுத்தும் கத்தி,கத்திரிக்கோல்,ப்ரெஷ்….இப்படி எல்லா பொருள்களிலும்.நான் இருப்பேன். இனி பாரு, உன்னைப்போல ஒரு வேலைக்காரன் யாரும் கிடையாதுன்னு எல்லோரும் சொல்லப்போறாங்க. தலையை முடிவெட்டிக்கொண்டால் அது உன்னிடம்தான் என்று அனைவரும் சொல்லப்போறாங்க.இனி உன் தொழில் அமோகம்…..”
கதிருக்கு இப்போதும் அழுகை வந்தது.
“அய்யா….பெருமாளே…..”
“என்ன பெருமாளா…..பூதங்கள் கூட கேட்டதைக்கொடுக்கும்” லேசாக கண்களைச்சிமிட்டியபடி பையன் மறைந்து போனான்.

அருமையான நவீனச் சிறுகதை