ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்/ஆர்.அபிலாஷ்

கடந்த ஓராண்டு காலம் சில விசயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறது:

1) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி பொம்மை அணுகுமுறை, கோலியின் பொறுமையின்மை மட்டும் காரணமல்ல. அவர்களையும் தாண்டி இந்த இந்திய அணியின் மூத்த வீரர்கள், தேர்வுக்குழு அல்லது வேறெங்கோ ஒரு பிரச்சினை உள்ளது. அணித்தலைவரும், பயிற்சியாளரும் மாறினாலும் அடிப்படையான தவறுகள் மாறவில்லை.

2) இப்போதைக்கு உலகில் இந்தளவுக்கு நிலையற்ற குழப்பமான அணி வேறில்லை. உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு பண்ணின பிறகும் யார் முதற் போட்டியில் பந்து வீசப் போகிறார்கள், யார் உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்பதில் தெளிவில்லை. இதற்கு துரதிஷ்டம் மட்டும் காரணமில்லை – நிலையற்ற முடிவுகள், குழப்பமான சிந்தனை, பதற்றமான அணுகுமுறை ஆகியவனவே காரணம். அவ்விதத்தில் ரவி சாஸ்திரியை விட மோசமான பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் என நினைக்கிறேன். சாஸ்திரி குடிகாரராக இருக்கலாம், ஆனால் திராவிட் குடிக்காமலே பயங்கர போதையில் தடுமாறுகிறவரைப் போன்று தான் அணியை நிர்வகிக்கிறார்.

3) கோலி அளவுக்கு இல்லையென்றாலும் நெருக்கடியை சமாளிக்கும் நிதானம், மனவலிமை ரோஹித்திடமும் இல்லை. கள அமைப்பில் அவர் ஒரு நல்ல தலைவர் தான். அதாவது எல்லாமே கச்சிதமாக இருக்கையில். ஆனால் அணியில் சிக்கல்கள் வந்தால், யாராவது காயம்பட்டால், வீரர்கள் தொடர்ந்து தவறுகளை இழைத்தால் ரோஹித் பத்தாவது மாடியின் படிக்கட்டில் தவறி உருண்டு போகும் மூதாட்டியைப் போல ஆகி விடுகிறார். இதை மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்துகையில் கண்டோம். இப்போது இந்திய அணியிலும் காண்கிறோம்.

சுருக்கமாக இந்த அணியின் பிரச்சினையின் வேர் என்னவென எனக்குத் தெரியவில்லை. யார் வந்தாலும் போனாலும் ஒரே தவறுகளை மீள மீள நிகழ்கின்றன. ஒருவேளை 2011க்குப் பின்னர் வந்தவர்கள் அனைவரும் போய் ஒரு புத்தம் புதிய அணி வந்தால், இந்திய அணி தன் திறமையை முழுமையாக பயன்படுத்தி உலகக்கோப்பை ஒன்றை மீண்டும் வெல்லலாம். ஆனால் இந்த அணி தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடும் இயல்பு கொண்டது. இந்த டி20 உலகக்கோப்பை மட்டுமல்ல அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கிற 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இந்த அணி ஆட்டத்தின் கடைசி நாள் வரை பல குழப்படிகளை செய்து chokeஆகி தோல்வியை தேடித் தழுவப் போகிறது.

நான் இன்றைய போட்டியை வைத்து சொல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நடப்பவற்றை கவனித்தே சொல்கிறேன். ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் பிம்பத்தை நம்பாதீர்கள். நடக்கப் போகும் உலகக் கோப்பையில் முக்கியமான போட்டிகளில் சொதப்பப் போகிறார்கள். அடுத்தாண்டு உலகக்கோப்பையிலும் அதுவே நடக்கும். அதன் பிறகு புதிய அணித்தலைவர் வருவார், ஆனால் இந்த கோளாறுகளின் போக்கு மட்டும் தொடரும். ஆனால் நமது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் வருமானத்திற்காக பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நம்பாதீர்கள்! ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளில் ஒன்றே அடுத்தடுத்த உலகக்கோப்பைகளை அடிக்கப் போகிறார்கள்!