இளம் வெர்தரின் துயரங்கள்/ஆர்.அபிலாஷ்

“இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள ‘க’. ஆனால் தமிழில் கோதே என்றெழுதுவதே வழக்கம் என்பதால் அதையே இங்கும் பயன்படுத்துகிறேன்.) பிரபலமான படைப்புகளில் ஒன்று. 1774இல் எழுதப்பட்ட இந்நாவல் ரொமாண்டிஸ இயக்கத்தை பெருமளவில் பாதித்த ஒன்று. அக்காலத்தில் காதல் தோல்வியுற்ற பலரும் தம்மை நாவலின் நாயகனான வெர்தராகக் கருதிட இளைஞர்களின் ஹீரோவாக வெர்தர் மாறினான். வெர்தரைப் போன்றே ஆடையணிய பலர் தலைப்பட்டனர். நாவலில் வரும் வாசனை திரவியம், பீங்கான் பாத்திரங்கள் வெளியாகி ஆகியவை பெருமளவில் விற்பனை ஆகின. நெப்போலியன் போனபர்ட் இந்நாவலை ஏழுமுறைகளுக்கு மேல் படித்ததுடன் எகிப்துடன் போர் தொடுக்கப் புறப்பட்ட போது இதையும் கையுடன் கொண்டு போனாராம். இந்த ஆவேசம் அக்காலத்தில் “வெர்தர் ஜுரம்” என அறியப்பட்டது. ஒரு கட்டத்தில் வெர்தரைப் போன்றே சில இளைஞர்கள் தற்கொலை பண்ணி விட, அவர்களுடைய பிணத்தருகே வெர்தர் நாவலில் பயன்படுத்திய பாணியிலான துப்பாக்கியும், அந்நாவலும் கிடைக்கப்பட்ட ஒரு பரபரப்பை இது அக்காலத்தில் உண்டு பண்ணியது. விளைவாக அரசு இந்நாவலையும் வெர்தரின் பாணியிலான ஆடைகளைத் தடை செய்தது.
“இளம் வெர்தரின் துயரங்கள்” கோதேயின் நிஜ காதல் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது ஒரு கடித வடிவிலான நாவல். வெர்தர் எனும் மேல்மத்திய வர்க்க இளைஞன் கலையின் உன்னதங்களையும், இயற்கையுடன் இணைந்த ரசனையான வாழ்க்கையையும் அனுபவிக்கும் நோக்கில் வால்ஹெய்ம் எனும் கிராமத்துக்கு வருகிறான். வெர்தர் தனக்கு அன்றாடம் கிடைக்கும் அனுபவங்களை தன் நண்பனான வில்ஹெம்முக்கு கடிதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறான். இவற்றை நாவலாசிரியன் எனும் எடிட்டர் தொகுத்து அளிப்பதாக கோதே எழுதுகிறார்.
வெர்தர் அக்கிராமத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான். அவனுடைய மனம் முழுக்க ஓவியம், இலக்கியம் வழியாக கலையின் உச்சத்தை எப்படி அடைவது எனும் தேடலால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அவனுக்கு ஒரு கட்டத்தில் கலை என்பது இயற்கையின் ஆன்மாவை பிரபலிக்கும் கண்ணாடி மட்டுமே, இயற்கையின் முன் கலை முயற்சிகள் வியர்த்தமானவையே எனத் தோன்றுகிறது. கிராமத்துக் குழந்தைகளை, இயற்கையை ஓவியம் வரையும் போதெல்லாம் தன்னால் இயற்கையின் உன்னதத்தின் சிறுபகுதியைக் கூட கைக்கொள்ள முடியவில்லையே என ஏமாற்றம் கொள்கிறான். இயற்கையின் முன் தான் சிறுத்துப் போவதாக பரவசத்துடன் ஒப்புக் கொள்கிறான். இப்போது அவன் கலைக்கு வெளியே ஒரு தனிமனிதனாக இயற்கையின் பேராற்றலை ஒருவன் தன் வழியாக உணர்வது எப்படி என யோசிக்கிறான். இதற்கு ஒருவர் சமூக, நாகரிக நெறிகளுக்காக தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளாமல் தன் உணர்ச்சிகளை காட்டாறாகப் பெருக விட்டு அதில் கரைந்து போவதே வழி என முடிவெடுக்கிறான். ஐரோப்பிய கற்பனாவாத மரபின் ஒரு முக்கியமான கருதுகோள் இது என்பதை நாம் கவனிக்க வேண்டும். வெர்தர் ஒரு அசல் கற்பனாவாதியாக இருப்பதுடன் மெல்ல மெல்ல அவனுடைய மன ஒழுங்கும் குலைந்து போகிறது. அவன் தன்னையே இந்த உலகின் மையமாகக் கருதி, தன்னுடைய இச்சை, தவிப்பு, சிலாகிப்பு, கவித்துவத்தைத் தாண்டி யாரும், இயற்கைக்கு அப்பால், எதுவும் முக்கியமில்லை எனும் இடத்துக்கு வந்து சேர்கிறான்.

இப்போது அவன் ஷார்லெட் எனும் Lotteவை எதேச்சையாக ஒரு நடன நிகழ்ச்சியில் சந்திக்கிறான். அவளுக்கு ஆல்பர்ட் என்பவருடன் ஏற்கனவே நிச்சயமாகி இருக்கிறது. ஆனால் சந்தித்த நொடி முதல் இருவருக்கும் எல்லா விசயங்களிலும் ஒத்துப் போகிறது. அவள் நினைப்பது இவனுக்கு அவள் சொல்லாமலே புரிகிறது. இவனுடைய எண்ணங்கள் அத்தனையும் அவளுக்கு உடன்பாடாக இருக்கின்றன. அவளுடைய சிறு அசைவுகள் கூட அவனுக்கு பேரழகின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. இயற்கை எனும் பேரனுபவத்தின் மானுட ரூபமாகவே லோட்டெ அவனுக்குத் தோன்றுகிறாள். தன்னால் அவளை அடைய முடியாது என அறிந்தும் அவளை பைத்தியம் போல நேசிக்கிறான். அவளுக்குத் திருமணமாகிறது. அவன் மனமுடைந்து போய் வேறு ஊருக்குப் போகிறான். அங்கு அவனுக்கு செயலாளராக வேலை கிடைக்கிறது. அங்கும் அவனால் நிம்மதியாக வாழ இயலவில்லை. சமூக வாழ்வில் உள்ள போலித்தனங்கள் அவனை எரிச்சல்படுத்துகின்றன. சமூகப்படிநிலைகள் படி தான் கீழாக நடத்தப்படுவது அவனுக்கு அபத்தமாகப் படுகிறது. மீண்டும் லோட்டெவைத் தேடிச் செல்கிறான்.

அங்கு அவள் மீது அவனுக்குள்ள மிதமிஞ்சிய ஈடுபாடு, பற்று, வழிபாட்டுணர்வு, பித்தான செயல்பாடுகள் அவளுடைய கணவனான ஆல்பர்ட்டுக்கு எரிச்சலூட்டுகிறது. அவளும் அவனிடம் சூசகமாகவும் பின்னர் நேரடியாகவும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் மனதுக்குள் அவளுக்கு அவன் தன்னை விட்டுப் போய் விடக் கூடாதென்றும் இருக்கிறது. கணவனுடனான இயல்புவாழ்வு, அக்கறைக்கும் வெர்தருக்கு தன் மீதான பித்தான காதல் அர்ப்பணிப்பும் இரண்டுக்கும் இடையே தான் தத்தளிப்பதை அவள் உணர்ந்தாலும் சமூக மரியாதைக்காக அவனிடம் இருந்து விலகுகிறாள். இறுதியில் கைகூடாத காதலால் பைத்தியமான ஒரு இளைஞனை வெர்தர் சந்திக்கிறான். பைத்தியம் முற்றும் போது அவன் அனுபவிக்கிற பரவசத்தை, உன்மத்த பேரனுபவத்தை அறிய வரும் போது வெர்தருக்கு ஒரு மனிதனுக்கு அவன் இயல்பாக இருக்கையில் கிடைக்கிற துன்பத்துடன் ஒப்பிடுகையில் பைத்தியமாகும் போது வரும் உவமை மகத்தானது என்று தோன்றுகிறது. கடவுள் ஏன் நம்மை பித்து நிலையில் இருந்து பறித்து அர்த்தமற்ற வாழ்க்கைக்குள் தள்ளுகிறார் என வினவுகிறான். அதன் பிறகு ஒருநாள் அந்த இளைஞன் தான் காதலித்த பெண்ணைக் கொன்று விடுகிறான். கைதாகிறான். அந்த சம்பவம் வெர்தரை மனதளவில் மிகவும் நொறுக்கி விடுகிறது. ஏனென்றால் இந்த இளைஞனே தன் எதிர்காலத்தை முன்கூறுகிறான் என அவன் உள்ளுணர்வு சொல்லுகிறது. தான் அவனைப் போலாகாமல் இருக்க வேண்டுமெனில் என்ன செய்வதென யோசிக்கும் அவன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். ஆல்பர்ட்டின் துப்பாக்கியை வேட்டைக்கென்று கேட்டு வாங்கிப் போகிறான். தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டு ஒரு தற்கொலைக் கடிதத்தை லோட்டெவுக்கு எழுதி வைத்து தன் தலையில் சுட்டுக் கொண்டு வீழ்கிறான்.

இந்நாவலின் சிறப்பு அது கலை-இயற்கை-காதல் எனும் மனிதத் தேடலின் புள்ளிகளை ஒன்றில் இருந்து மற்றொன்றாக தொடுத்துக் கொண்டே செல்வதும், ஒரு கட்டத்தில் கட்டற்ற பேரனுபவத்தை, அழகை, அனைத்தையும் மீறிச் செல்லும் ஆவேசத்தை, அந்த சுதந்திரத்தை ஒரு மனிதன் நாடுகையில் அவனுக்கு என்னாகிறது எனப் பேசும் பாங்கு தான். கொஞ்சம் கற்பானாவாத ரசனையை, நெகிழ்ச்சியை, பரவசத்தை கத்தரித்து சுருக்கினால் இது ஜி.நாகராஜனின் கதையும் தான் என்று தோன்றியது. இயற்கையை கலையிலும் பெண்ணிலும் தேடியவன், இலக்கை விட தேடலே மகத்தானது எனக் கருதியவன் வெர்தர் என்றால் அதையே காமத்திலும் போதையிலும் தேடியவர் அல்லவா ஜி. நாகராஜன்? வெர்தர் தன்னையே சுட்டுக் கொள்ள ஜி. நாகராஜன் தன்னை நோய்மையில், வறுமையில் மாய்த்துக் கொண்டார்.

இந்த நாவலை மனச்சிதைவின் துவக்கம் பற்றின ஒரு சித்தரிப்பாகவும் பார்க்க முடியும். அவ்விதத்தில் எனக்கு இது செகாவின் “கறுப்புத் துறவி” நீள்கதையை நினைவுபடுத்தியது. வடிவ அளவில் செகாவின் கதை கோதேவின் நாவலை விட மேலானது, நுட்பமும், அர்த்த மடிப்புகளும் கொண்டது என நினைக்கிறேன். அதே நேரம், கோதேவின் படைப்பு கற்பனாவாத மிகைகள் கொண்டது, ஆனால் செகாவினுடையது நவீனத்துவ கச்சிதம் பெற்றது எனும் வித்தியாசத்தை கருதுகையில் காலத்தால் வேறுபட்ட இரு படைப்புகளை ஒப்பிடுவதும் அவசியமற்றது எனத் தோன்றுகிறது.