காலவனின், “தோற்றுப் போவேனோ?”/ஆர். வத்ஸலா

காலவன் எனும் புனைப் பெயரில் எழுதும் ஆர்.கே. ராமநாதனின் மூன்றாவது கவிதைத் தொகுதி இந்த தோற்றுப் போவேனோ?. அவர் முன்பே “ஒரு கோப்பை சூரியன்”, “தென்றல் உறங்கிடும் தெரு” என்று இரு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவ்ருடைய “தோற்றுப் போவேனோ?”என்று சவால் விடும் கவிதை தொகுதி பல நல்முத்துக்களை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில முத்துக்களை எடுத்து அவற்றை நான் இப்படி ரசித்தேன் என்பதை உங்களுடன் புரிந்து கொள்ள விரும்புகிறேன் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி மற்றவர்க்கும் கிடைக்கட்டுமே என்னும் நல்லெண்ணத்தில். முதலில்

அம்மா பார்த்த மழை

அடை மழையடித்தபடியிருக்கிற
வெள்ளத்துள் நீந்தி
வீட்டினுள் நுழைகையில்
அண்ணன் கேட்பான் –
மழை நின்ற பின் வந்தால்தான்
என்ன கொள்ளையென்று

குடை கொண்டு
போனாலென்ன
கௌரவக் குறைச்சலோவென
கத்துவாள் அக்கா

காய்ச்சலும் சளியுமாய்
விழுந்து படுத்து
படுத்தினால் தெரியுமென்பதாய்
உறுமுவார் அப்பா

மூத்தவர்களின்
மொத்த வசவும்
அவர்களை தவிர்த்து
என் மேல் இம்முறை மையமிட்டதற்கு
அகமகிழ்வாய்
தம்பியும் தங்கையும்

பரபரவென ஓடி வந்து
புடவைத் தலைப்பில்
தலை துவட்டியபடி
“என் பிள்ளை
வீட்டுக்குள் வந்தப்பறம்
பெய்தால் என்னவாம்!” என
மழையை சலித்துக்
கொண்டபடி இருப்பாள்—
இந்த அம்மா மட்டும்

என்கிறது கவிதை.

பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவிடம் அணுக்கமும் பெண் பிள்ளைகளுக்கு அப்பாவிடம் அணுக்கமும் உண்டு என்பது நியதி. அதனால் தானோ என்னவோ ஒரு சில பெண் கவிஞர்களை விட தவிர ஆண் கவிஞர்கள் அம்மாவை பற்றி எழுதும் கவிதைகள் மிக மிக அழகாக இருக்கின்றன. காலவனின் “அம்மா பார்த்த மழை” எனும் கவிதையும் அப்படித்தான் எளிமையான ஆனால் மிக அழகான கவிதை இது.

அடை மழையில் நனைந்து வருகிறார் ஒருவர். அவர் நனைந்ததை பற்றி அவருடைய குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

நின்ற பின் வந்தால் என்ன என அதட்டும் அண்ணா. குடை கொண்டு போனால் கௌரவம் குறைந்து விடுமோ என்று எகத்தாளமாய் கேட்கும் அக்கா. ஜலதோஷம் வந்தால் தெரியும் சேதி என்று உறுமும் அப்பா. இன்றைக்கு நமக்கு கிடைக்க வேண்டிய மொத்த மண்டகப்படியும் அண்ணாவுக்கு கிடைத்துவிட்டது என்று குதூகலிக்கும் தம்பி தங்கை இருவரும்.: இப்படி வருணிக்கிறார் கவிஞர்.

ஆனால் அம்மா மட்டும் ஓடோடி வந்து தன் புடவையின் தலைப்பால் மகனின் ஈரத் தலையை துவட்டுகிறாராம். அதாவது துவாலை எடுத்து வரக் கூட பொறுமை இல்லை அவருக்கு என்பதை சுட்டுகிறார் கவிஞர். அது மட்டுமல்லாது துவட்டிக் கொண்டே அங்களாய்க்கிறாளாம் அந்தத் தாய் “இந்த பாழாய் போகிற மழை என் பிள்ளை வீட்டிற்குள் வந்தபின் வந்தால் தான் என்னவாம்” என. கற்புக்கரசி “பெய்யென பெய்யும் மழை” என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட அம்மா நில் என்றால் நிற்கும் மழை .

இன்னோரு கவிதை :

பொறுப்புத் துறப்பு

இப்படி போகலாமே
என்றார்கள்
இங்கே உட்காரலாமே
என்றார்கள்
நீங்கள் பேசுங்களேன்
என்றார்கள்
போய் உட்கார்ந்து
பேசுவதற்குள்
அவர்கள் கலைந்து போய்விட்டார்கள்

இந்த கவிதை வாழ்க்கையின் யதார்த்தத்தை சுட்டிக் காட்டுகிறது. ஒரு காட்சியின் மூலம் ஒரு உதாரணத்தின் மூலம் பொதுவாக நடக்கும் ஒரு விஷயத்தை பற்றி கூறுகிறது. பொறுப்புத் துறப்பு என்பது அருமையான புதுமையான தலைப்பு . தன்னுடைய பொறுப்பை மற்றவர் மேல் சுமத்தி விட்டு ( வடிவேலுவின் மொழியில் கூற வேண்டுமானால் அவரை உசுப்பேத்தி விட்டு) தான் விலகிக் கொள்வது சகஜமான விஷயம். இந்த விஷயத்தை நகைச்சுவையுடன் கூறினாலும் நம்மை சிந்திக்க வைக்கிறது இந்த கவிதை.

மூன்றாவதாக நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் கவிதை:

ப்ரியத்தின் வார்த்தைகள்

வீணை தந்திகளின்
அதிர்வில் துடிக்கும்
ராகத்திலும்

காட்டு மூங்கில்களுக்குள்
புகுந்து வெளிப்படக் காத்திருக்கும்
கானத்திலும்
ஒளிந்திருக்கும்
இசைக்குறிப்புகள் போலத்தான்
இருக்கிறது —

நமக்குள்ளான
அன்பின் இழைகளூடே
பின்னப்பட்டிருக்கிற
சொல்லப்படாத அந்த
பிரியத்தின் வார்த்தைகளும்

மறுபடியும் ஒரு எளிமையான ஆனால் ஆழமான கருத்தை வலியுருத்தும் கவிதை முத்து. ஆர்கே இசைக் குறிப்புகளை பற்றி பேசுகிறார் இதில். அவை எங்கெல்லாம் இருக்கின்றன ?

வீணை தந்திகளின் அதிர்வில்,
துடிக்கும் ராகத்தில்
காட்டு மூங்கில்களுக்குள் புகுந்து வெளிப்பட காத்திருக்கும் கானத்தில்

சரி, அவற்றை எதற்கு உதாரணமாக சொல்லுகிறார்?

அவருக்கும் அவர் எதிரில் இருக்கும் நபருக்கும் இடையே இருக்கும் அன்பின் இழைகளுக்குள் அவற்றின் ஊடே, பின்னப்பட்டிருக்கிற அந்த மௌனமான பிரியத்தின் வார்த்தைகளுக்கு உதாரணமாக சொல்லுகிறார். அவர் வேண்டுமென்றே இங்கு காதல் எனும் சொல்லை தவிர்த்து பிரியம் எனும் சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். இது பொதுவான அன்பு – நண்பர்களுக்குள் ரத்த, குடும்ப உறவுகளுக்குள் அல்லது காதலர்களுக்குள் இருக்கும் அன்பு. இந்த பொதுத்தன்மை எனக்கு மிகவும் பிடித்தது.

கடைசியில்
மழை குறிப்பு
அலைகளலிடை நின்ற
காலடிக்குள் நழுவியோடுகிறது—கடல்

தலை வணங்கிக் குனிந்தவேளை
சிரசுவழி குளிர்ந்து செல்கிறது–
அருவி

நடந்து அமிழ்து
கால் மடக்கி முங்கிய வேளை
உடலளந்து சில்லிட வைக்கிறது– நதி

ராட்டினம் சேந்திச்சேந்தி
மண்டை மேல் கவிழ்த்த வேளை
வாளிவாளியாக உருகியோடுகிறது—
கிணற்று நீர்

குளத்து நீரும் கண்மாய்த்தண்ணியும்
நீரின் கருணையையும் அன்பையும்
குறைவற்ற நிறைவாய்
நம்முள் பொழிந்தபடியேதான் இருக்கின்றன

உப்புக்கடல் சுவை சொல்கிறது போல
ஆனால்…
சரம்சரமாய் சமயங்களில்
நம்மீது வருடலாய் பொழிகிற
இந்த
மழை மட்டும் ஒவ்வொரு தடவையும்
நீரின் நட்பை பூப்பூவாய்
தெளித்தபடியே இருக்கின்றது–
நம்மையும் நம்மைச்சுற்றியும்

ஆர் கே. க்கு மழை மிகவும் பிடித்திருக்கிறது. இந்த கவிதையில் அவர் வருணித்து இருப்பது விதவிதமான நீர் நிலையங்களின் அழகை, அவை தரும் உணர்வை. கடலில் கால்கள அழுத்தி நிற்கும்போது அவற்றின் ஊடே போகிறது கடல் ஒரு கிளுகிளுப்பை தருகிறது. அருவியில் கீழே நின்று தலை மேல் நீரை வாங்கிக் கொள்வது ஒரு தனிச் சுவையை அளிக்கிறது. நதிக்குள் மூழ்கி எழுவதில் ஒரு தனி சிலிர்ப்பு ஏற்படுகிறது. கிணற்று நீரை வாளி வாளியாக தலைமேல் கொட்டிக் கொள்வது வேறு ஒரு சுகம். குளத்து நீர், கண்மாய் தண்ணீர் இவற்றின் கருணை கூறி மாளாது. இவையனைத்தும் நீர் தான் என்றாலும் மழை வரும் போது அது நம் மேல் பூ பூவாக தனது நட்பை தெளிக்கிறதாம், சொல்கிறார் காலவன்! எப்பேர்ப்பட்ட கற்பனை! இப்படித்தான் அத்தனைக் கவிதைகளும் அழகானவை. இந்த தொகுப்பில் எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் அதன் தலைப்பு. இப்படிப்பட்ட ஒரு நல்ல தொகுப்பை தந்தவர் தோல்வி எனும் சொல்லை பயன் படுத்தலாமா? எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை!