ஏன் ராஜினாமா செய்தார் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி/பரதன் வெங்கட் – அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

“ஆனந்தவிகடன்” இதழுக்குப் தனிப்பெபயரையும், வரவேற்பையும் ஏற்படுத்தியவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர் இதழில் துமிலன் எழுதி வெளிவந்த, அந்த ராஜினாமா சம்பந்தப்பட்ட தகவலை அப்படியே கொடுத்திருக்கிறார்.
பெரும் தேசபக்தரான கல்கி அவர்கள் நாட்டு விடுதலைக்காகப் பலமுறை சிறை சென்றவர். 1940 ன் கடைசி மாதத்தில், முன்னிரண்டு விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றிருந்த கல்கி, அப்போது தொடங்கியிருந்த மூன்றாவது பெரும் போராட்டத்திலும் கலந்து கொள்ள பெரு விருப்பம் கொண்டிருந்தார். அவரை வருத்திக் கொண்டிருந்த ஆஸ்துமா, அந்த பனிக்காலத்தில் கடுமையாக இருந்தது. சிறை சென்றிருந்த அவரது குரு ராஜாஜி அவர்களோ, டாக்டர்களோ அவர் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் கண்டிப்பாய்த் தடுத்திருப்பார்கள்.
யாருடனும் ஆலோசனை கலக்காமல் தாமே தீர்மானம் செய்து கொண்டு மனைவியிடம் மட்டும் ஜாடையாகச் சொல்லிவிட்டு, சத்தியாகிரகம் செய்ய அனுமதி வேண்டி மகாத்மா காந்திக்கு விண்ணப்பம் அனுப்பினார். டிசம்பர் 31 ஆம் தேதி காலையில் காந்திஜியின் அனுமதி, வீட்டு முகவரிக்கு வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்த கல்கி, அந்த விவரத்தை மனைவியிடம் தெரிவித்து, “இனி வாசனின் அனுமதிதான் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மனைவியின் திகைப்பு தீருவதற்கு முன்னாலேயே அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட்டார்.
வாசனின் அறைக்குள் கல்கி நுழையும் போது அங்கே அவருடன் துமிலனும் இருந்தார். அவர் போகட்டும் என்று காத்திராமல் பீடிகை எதுவும் போடாமலும்,நேராகவே வாசனிடம் விஷயத்தைச் சொன்னார் கல்கி. இருவருக்கும் இடையே ஐந்து நிமிடம் பேச்சு நடந்தது. அதன் இறுதியில் கல்கி வாசனின் அறையை விட்டுத் தமது அறைக்குச் சென்றார். தமது மேஜையின் இழுப்பறைகளைத் திறந்து தமது சொந்தக் காகிதங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டார். கடைசி தடவையாக எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்துக்கொண்டபோது அலுவலகச் சிப்பந்திகளிலும், அச்சுக்கூடத் தொழிலாளர்களிலும் சிலர், வாசல் படிகளில் திகைப்புற்று நிற்பதைக் கண்டார்.
மறுநாள் புத்தாண்டு தினத்தன்று, வீட்டிலிருந்தபடியே தமது ராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார்.
அதற்கு முந்திய நாள் அந்த ஐந்து நிமிட நேரத்தில், வாசனுக்கும் கல்கிக்கும் நடந்த பேச்சு என்ன என்பதை அப்போது ஒரு சாட்சியாக உடனிருந்த துமிலன், சுயவரலாற்றுப் போக்கில் அமைந்த “நான்+நாற்பது” என்ற தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
“ஒரு பத்திரிகாலயத்தில் திரை மறைவில் சில பெரிய நாடகங்கள் நிகழ்வதுண்டு” என்று தொடங்கி அவர், வாசனிடம் கல்கி தம்மைக் காந்திஜி சத்தியாகிரகத்திற்குத் தேர்ந்தெடுத்து விட்ட செய்தியை அறிவித்ததை அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதைச் சொல்கிறார்.
…திரு வாசன் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.
“நீங்கள் உங்கள் பெயரைக் கொடுத்து இருப்பதைப் பற்றி என்னிடம் முன்னாடியே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே!” என்றார் வாசன்.
“நான்தான் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொள்கிறவன் ஆச்சே! அது உங்களுக்குத் தெரியுமே!” என்றார் கல்கி.
“இருந்தாலும் நீங்கள் என்னிடம் முதலிலேயே சொல்லி இருக்கத்தான் வேண்டும். நீங்கள் போன பிறகு பத்திரிகை என்ன ஆகிறதாம்?”
“துமிலன் பார்த்துக் கொள்கிறார்.”
“அது எனக்குத் தெரியும். நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பத்திரிக்கையைப் பாதிக்கும். ஏற்கனவே ஒருமுறை அச்சாபீசுக்கு ஜாமீன் கட்ட நேர்ந்தது உங்களுக்குத் தெரியாதா?”
“பத்திரிகை ஆசிரியராக என் பெயர் போடப்படவில்லையே?”
“இருந்தாலும் உங்கள் தொடர்பு இருக்கிறதென்று அரசாங்கத்திற்கும் தெரியாதா?”
இத்தகைய பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருக்க விரும்பாத நான்(துமிலன்) வெளியே போவதற்காக எழுந்தேன். திரு வாசன் என்னை உட்காரச் சொன்னார்.
“என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?” என்று கல்கி பச்சையாகக் கேட்டார்.
“நீங்கள் போராட்டத்தில் சேரப் போவதில்லை என்று காந்திஜிக்கு எழுதி விடுங்கள்.”
“அது நடக்காத காரியம்!”
“அப்படியானால் பத்திரிக்கையுடன் தற்காலிகமாக உங்கள் தொடர்பு இல்லாமல் செய்து கொள்ளுங்கள்.”
“ராஜினாமா செய்யச் சொல்கிறீர்களா?”
“ஆமாம்” என்றார் திரு.வாசன்.
“சரி; சிறை சென்று வந்த பிறகு பதவியை ஒப்புக்கொள்கிறேன்” என்றார் கல்கி.
“அதைப்பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்!” என்று திரு.வாசன் நிதானமாகப கூறினார்.
இதுதான் நடந்தது. கல்கி அவர்கள் சத்தியாகிரகத்தில் சேர காந்திஜி அநுமதியளித்தும், வாசன் அவர்களின் அநுமதி பெற முடியாததால் பதவியில் இருந்து விலக நேர்ந்தது என்பதுதான் முற்றிலும் உண்மை.
“விகடனின் வளர்ச்சியையே வாழ்க்கை லட்சியமாக கொண்டு, அதற்குச் சீரும் சிறப்பும், பேரும் பெருமையும் தேடிக் கொடுத்த கல்கிக்கு, கடைசி ஒரு மாதச் சம்பளத்தை மட்டுமே கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டார் வாசன். அதன் மூலம் அவர் புலப்படுத்தியது என்ன? பணம் கடுத்தம் அல்ல. கல்கியின் மீது அப்போது கொண்ட மனக் கடுத்தமே!” (சுந்தா)
1940 ஆம் ஆண்டு ‘பொல்லாத 40’ ஆக இருந்தாலும் அதுவே தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் யோக காலமாய் அமைந்து விட்டது. இல்லாவிட்டால் ‘கல்கி’ என்ற பெயரில் இதழ் ஒன்று தோன்றியிருக்குமா? முதல் வரலாற்றுத் தொடர் கதையாக ‘பார்த்திபன் கனவை’ இலக்கிய உலகம் அடைந்திருக்க முடியுமா?
தாம் விலகியதைப் பற்றி கல்கி அவர்கள் ‘கல்கி’ முதல் இதழில் எழுதுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அடுத்தடுத்த இதழ்களிலும் எழுதவில்லை.காரணம் கேட்ட வாசகர்களுக்குப் பதிலாக அவர் கூறியது இதுதான்.
‘இரகசியங்களுக்குள் நான் மௌனம்’ என்கிறார் கிருஷ்ண பகவான். அந்த வகை இரகசியம் தான் இதுவும்!