விலங்கு/முபீன் சாதிகா

அவளுக்கு வன விலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் வேறு ஏதாவது வழி இருக்குமா என்று பலருடன் ஆலோசித்தாள். அப்போது ஒரு சாமியார் தன்னிடம் ஒரு மந்திரம் இருப்பதாகவும் அதைப் பெற அவருடைய பெயரை ஓராயிரம் முறை சொல்லி, ஓராயிரம் முறை எழுதி, அவருடைய காலில் ஓராயிரம் முறை விழுந்து வணங்கினால் அவள் யாரை வேண்டுமானலும் அவள் விரும்பும் விலங்காக மாற்றிவிடும் மந்திரம் கிடைக்கும் என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்டு அவளும் அவருடைய பெயரை ஓராயிரம் முறை எழுதி, சொல்லி, அவர் காலில் ஆயிரம் முறை விழுந்து வணங்கியவுடன் அவளுக்கு அந்த மந்திரம் கிடைத்தது. வீட்டுக்கு வந்தவுடன் தன் பணியாளை அழைத்து அவன் நாயாக வேண்டும் என நினைத்து அவன் முன் அந்த மந்திரத்தைச் சொன்னாள். உடனே அவன் நாயாக மாறிக் குலைத்தான். அவளுக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இப்படியே தன் அலுவலகத்தில் உள்ளவர்களை ஒவ்வொருவராகத் தனியே அழைத்து அவள் நினைக்கும் சிங்கம், புலி, கரடி, நரி என மாற்றி வீட்டின் கீழ் தளத்தில் அடைத்து வைத்துக் கொண்டாள். இரவில் அவைப் பெரும் ஒலி எழுப்பின. இதனால் அண்டை வீட்டார் அதைக் குறித்து வன விலங்கு அதிகாரிகளிடம் புகார் கூறினர். அவள் வீட்டுக்கு வன விலங்கு அதிகாரிகள் குழு வந்தது. அப்போது அந்த விலங்குகளை மனிதர்களாக மாற்றி அவளுடன் உணவருந்தும்படி செய்துவிட்டாள். அந்த அதிகாரிகள் வன விலங்குகளின் ஓலம் குறித்து விசாரித்த போது தான் அது போன்ற திரைப்படங்களைப் பார்ப்பதாகக் கூறிவிட்டாள். அந்தக் குழுவில் இருந்த ஓர் அதிகாரி அவள் எதையோ மறைப்பது போல் எண்ணிக் கொண்டு போய்விட்டான். இரவு அவள் வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்து பார்த்த போது வீட்டின் கீழ் தளத்தில் வனவிலங்குகள் இருப்பதைக் கண்டுபிடித்தான். அதை மற்ற அதிகாரிகளிடம் சொல்ல அலைபேசியை எடுத்துத் திரும்பிய போது அவள் நின்றிருந்தாள். அவனையும் பாம்பாக மாற்றிவிட அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவன் துப்பாக்கியை எடுத்து நீட்டினான். உடனே ஓடிச் சென்று தன் அறையிலுள்ள கண்ணாடி எதிரே தன் பிம்பத்தை நோக்கி அவள் அறியாமல் அந்த மந்திரத்தைச் சொல்லி முடிக்க அவள் பாம்பானாள்.