திரு ‘சோ’ அவர்களின் நினைவாக…./ஜெ.பாஸ்கரன்

அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின் மூலம் அவரது பிறந்தநாளைக் கொண்டாடிவோம்!

துக்ளக் 50 (1970 – 2019) – பொன்விழா மலர் ஒரு பொக்கிஷம் – அதிலிருந்து….

(15.3.1971 )

கே:ஆத்திகம் வளர்ந்தது ஈ.வே.ரா. பெரியாராலா? திருமுருக கிருபானந்த வாரியாராலா? பெரியார்தான் என்பது என் அபிப்ராயம். நீர் என்ன கூறுகிறீர்?

பதில்: ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரம் வளர்ந்தது இரணியனால் என்றும் சொல்லலாம் – பிரகலாதனால் என்றும் சொல்லலாம். அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது!

(7.1.2015)

கே: ‘நரேந்திர மோடியை விமர்சிப்பதில் தவறில்லை’ என்கிறாரே ராமதாஸ்?

பதில்: உண்மைதான். பிரதமர் என்பதால் ஒருவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் ஆகிவிட மாட்டார்.

(13.7.2016)

கே: உங்கள் கண்ணோட்டத்தில் உண்மையான பெண்ணுரிமை எது?

பதில்: பெண் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படாத நிலை இருக்க வேண்டும். அது இப்போது இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

(2.1.2008)

கே: பத்திரிகை தர்மம் என்றால் என்ன? சற்று விளக்கமாகக் கூறவும்!

பதில்: தெரிந்து – உண்மையற்றதை எழுதக் கூடாது; அப்படித் தெரியாமல் உண்மையற்றது பிரசுரமாகிவிட்டால், அதை உணர்ந்தவுடன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். செய்தியைத் திரிக்கக் கூடாது. அபிப்ராயங்களைப் பொறுத்த வரையில் – உண்மை அபிப்ராயங்களை மூடி மறைத்து, அதைத் தந்திரமாக வெளியிடுவதற்காக, செய்திகளை ஒருதலைப்பட்சமாக பிரசுரிக்கக் கூடாது.

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பொது வாழ்க்கையும் சம்பந்தப் படாத போது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. சட்டத்தை மீறுவது அவசியம் என்று நினைத்தால் – அப்படி மீறுகிற போது, அதற்கான விளைவைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆபாசம் என்று ஆசிரியர் கருதுவதை, வியாபாரத்திற்காகப் பிரசுரிக்கக் கூடாது……… இப்படி இன்னும் சில நியதிகள். இது பத்திரிகை தர்மமோ இல்லையோ, ‘துக்ளக்’கின் தர்மம்.

(9.2.2000)

கே: கடவுள் தீர்ப்பு, நீதிபதி தீர்ப்பு, மக்கள் தீர்ப்பு – ஒப்பிடுக?

பதில்: மாற்ற முடியாதது; மாற்றப்படக் கூடியது; மாற்றினாலும் பயனில்லாதது.

WE MISS YOU CHO SIR !