இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோ/யமுனா ராஜேந்திரன் 

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.

ஹாப்பனிங்.Happening மற்றும் சிம்பிள் பேஷன்/Simple Passion என்பன நாவல்கள்-திரைப்படங்கள். நாவல்கள் முறையே 52 மற்றும் 72 பக்கங்கள். திரைப்படங்கள் தலா 90 நிமிடங்கள்.

நாவல்கள் மிக எளிமையான, நேரடியான ஆனால் கூர்மையான சொற்களால் ஆனது. திரைப்படம் இரு பரிமாணக் காட்சிப்படுத்தலில் நமக்குள் வேட்கை பெருகவும் வலியில் நெஞ்சை உறையவும் செய்கிறது.

ஹேப்பனிங்க்ஸ் 2001 ஆம் ஆண்டும் சிம்பிள் பேஷன் 1991 ஆம் ஆண்டும் வெளியானது.

ஹேப்பனிங் 1963 ஆம் ஆண்டில் கர்ப்பமுறும், பல்கலைக்கழகம் செல்வதில் இலட்சியமாக இருக்கும் ஒரு இளம்பெண் கருக்கலைப்பு செய்துகொள்வதில் ஏற்படும் பிரச்சினை குறித்தது. பிரான்சில் 1975 ஆம் ஆண்டுதான் கருத்தடை சட்டபூர்வமாக்கப்பட்டது.

இங்கே கொஞ்சம் இடையீடு. ரஸ்யாவில் 1920 ஆம் ஆண்டு கருத்தடை சட்டபூர்வமாக்கப்பட்டது. முறைசாராக் குழந்தைகள் என எவருமிலர் எனவும் அறிவிக்கப்பட்டது.

பிரான்சில் கருக்கலைப்பு சட்டவிரோதம், கிரிமினல் குற்றம், சிறைத் தண்டனை பெறவேண்டும் எனும் சூழலில், காதலனும், தோழியரும் உதவ மறுத்துவிட இளம்பெண் தானாகவே கருவைக் கலைக்க அலைந்து திரிகிறாள்.

மருத்துவர்கள் உதவ மறுத்துவிடுகிறார்கள். ஒரு திருநங்கை 400 பிராங்குகள் செலவில் கருக்கலைப்பு செய்ய ஒப்புகிறாள். முதல்தடவை கரு கலைவதில்லை. இரண்டாம்முறை செய்வது உயிருக்கு ஆபத்து என்று சொன்னாலும் அதை ஏற்று கடினமான கருக்கலைப்பை செய்து கொள்கிறாள்.

கலைந்த கரு இடையில் அடைத்துக் கொள்ள, ரத்தம் பெருக அறைத்தோழியர் ஆபத்துதவிக்கு அழைத்து மருத்துவமனை செல்கிறார்கள். அபார்ஷன் அல்ல மிஸ்கேரஜ் என தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறாள். தான் விரும்பிய இலக்கியப் படிப்பதை தொடர்கிறாள்.

நாவல் நினைகூரலாக தொண்ணூறுகளில் சொல்லப்படுகிறது. இயல்பான பாலியல் வேட்கை, இளம்வயதுக் கனவுகள், தண்டனைச் சட்டம் இவற்றுக்கிடையில் வீட்டுக்கும் தெரியாமல், எவரதும் உதவியும் வழிகாட்டலும் இன்றி கருவைக்கலைக்கத் தன்னந்தனியே ஒரு இளம்பெண் அடைந்த சொல்லவொனாத வலிகள் குறித்தது ஹேப்பனிங் படைப்பு.

எவரும் உதவ முன்வராத சூழலில் தானே தனது அறையில் மருத்துவ உபகரணங்கள் அற்ற நிலையில் தனது தொடையில் நீண்ட ஊசி போட்டுக்கொள்வது, நெருப்பில் காய்ச்சிய கம்பியை கருப்பைக்குள் சொருகுவது, முறையான மருத்துவ உபகரணங்கள், அனஸ்தீஷியா போன்றவை இல்லாமல் உலோகங்களால் பலவந்தமாக பெண்ணுறுப்பைக் குடைவது, இடையில் அகப்பட்ட 12 வாரம் வளர்ந்த கருவை வெளித்தள்ள முடியாமல் கழிவரை இருக்கையில் வீறிடுவது என இதயத்தைப் பிளக்கும் வலிகள் குறித்த விவரணச் சித்திரமாக நாவலும் திரைப்படமும் இருக்கின்றன.

இன்னொரு பதிவில் சிம்பிள் பேஷன் குறித்தும் அனி எர்னோவின் எழுதுமுறையும் கலாச்சார அரசியல் குறித்தும் எழுதுகிறேன்.

*