
தரிசனம் எனும் இந்த கவிதை தொகுப்பு சஞ்சயனின் (இயர் பெயர் எஸ். சுரேஷ்)
முதல் புதுக்கவிதை தொகுப்பு என்று தெரிய வந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் ஒரு கைதேர்ந்த கலைஞரின், கவிஞரின் அடையாளக் கையெழுத்து உள்ளது இதில்.
முதலில்
நீ என் நண்பனே
உன் நினைவால்
என் இதழ்க்கடையோரம் சிறு நகையும்
என் கடைக்கண் ஓரம்
சிறு துளியும்
என் மனவெளியில்
பிடித்த பாடலின்
ராக ஆலாபனையும் தோன்றுமெனில்
நீ என் நண்பனே
மிக அருமையான கவிதை. இதை வாசித்தாலே போதும். இதைப் பற்றி பேசினாலே இதன் உன்னதம் குறைந்து விடும் என்று நான் நினைக்கிறேன் எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு நண்பனாவது இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது
சஞ்சயனின் இன்னொரு கவிதை:
முதுமை
தாத்தாவின் தேக்குமர
சாய்வு நாற்காலி
காலத்தையும் கரையானையும்
வென்று வாழும்
மர அலமாரி
பளபளப்பு மாறாத
பாட முடியாத
பழைய கால ரேடியோ
அப்பா தன்
முதல் சம்பளத்தில்
வாங்கிய
கிராமபோன் பெட்டி
அம்மாவின் சீராக வந்து
கூட்டுக் குடும்பமாக
இருந்தவரைப்
புழக்கத்தில் இருந்த
வெண்கல பானை
புழக்கடை வாசியாகப்
பல்லாண்டுகள் வாழ்ந்து
வீட்டின் வெந்நீர் தேவையை
பூர்த்தி செய்து வந்த
தாமிர அண்டா
இவை ஒவ்வொன்றின்
பின்னணியில் உள்ள
மனதிற்கு நெருக்கமான
நினைவலைகள்
ஒரு புறம்..
இன்றைய அதிவேகத்
தொடுதிரை வாழ்க்கையில்
பொருந்தாது
பயனற்று இடம் அடைக்கும்
நிதர்சனம்
மறுபுறம்..
எப்போ வருவானோ
எடைக்கு எடுத்துச் செல்பவன்
என்று காத்திருக்கின்றன
என்னைப் போலவே
இதில் சஞ்சயன் வெகு காலமாக வீட்டிலிருக்கும் சில பொருட்களைப் பற்றி கூறுகிறார். அவையனைத்தும் நினைத்துப் பார்க்க அழகான பின்புலம் கொண்ட பொருட்கள். தேக்குமர சாய்வு நாற்காலி, மர அலமாரி, பழைய கால ரேடியோ, கிராமபோன் பெட்டி, வெண்கல பானை, தாமிர அண்டா ஒவ்வொன்றும் பல நினைவுகளை தங்களுக்குள் தேக்கி வைத்திருக்கின்றன. ஆனால் இன்றைய அதிவேக வாழ்க்கையில் பொருந்தாததோடு வீட்டை அடைத்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றை எடைக்கு தான் போட வேண்டும் விலை பேசி என்கிறார் கவிஞர். இதுவரை இது ஒரு அழகான கவிதை மட்டுமே. ஆனால் கடைசி வரியில் இரண்டே வார்த்தைகளில் இது நம்மை புரட்டிப் போடுகிறது.
“எப்போ வருவானோ
எடைக்கு எடுத்துச் செல்பவன்
என்று காத்திருக்கின்றன
என்னைப் போலவே”
என்று சொல்வது ஒரு முதியவராகத் தான் இருக்கவேண்டும். இந்த பழைய சாமான்களைப் போலத்தான் வீட்டில் இருக்கும் முதியவர்களும் எப்பொழுது வருவான் எமன் நம்மை கூட்டிப் போக என்று காத்திருக்கின்றனர் என்று நம் கன்னத்தில் அறைவது போல் ஒரு உண்மையை சொல்லி முடிகிறது கவிதை.
அடுத்தபடி
பாலும் திரிந்ததடி கிளியே
இப்பொழுதெல்லாம்
வானியலாளர்கள்
பெய்யெனப்
பெய்கிறது மழை
முன்னதாகவே
போர்க்கால அடிப்படையில்
பால் பாக்கெட்டுகளை
வாங்கிக் குவித்தேன்
ஒரு வாரத்திற்கான
தோசை மாவும் தயார்
காய்கறிகள்
கூடை நிறைய..
இன்னும் பிரட்
பழங்கள்..
குளிர்சாதன பெட்டி
கெஞ்சியது..
நான் என்ன தலையணையா?
மழையே உனக்காச்சு..
எனக்காச்சு..
பெருமழை வந்தது
இரட்டையர் அல்லவா?
மழையுடன் பிறப்பாம்
மின் வெட்டும் வந்தது..
மழைத் தொடங்கித்
தொடர்ந்து
ஐந்தாம் நாள் முடிந்தது
மின் வெட்டும் தொடங்கித்
தொடர்ந்து
தொடர்கிறது..
இந்த கவிதையே வாசித்தாலே போதும் என்று நினைக்கிறேன். மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதப் பட்டிருக்கிறது. மழைக்கு பயந்து குளிர் சாதனப் பெட்டியை நிரப்பி விட்ட பின் மின்வெட்டு அவலம் அத்தனை முஸ்தீபுகளையும் பயனில்லாமல் செய்து கொண்டு.. நாம் எல்லோரும் இதை செய்திருக்கிறோம். நான் கூடுதலாக பால் பவுடர் பாக்கெட்டுகள் கூட வாங்கி வைத்திருக்கிறேன்!
அடுத்தது
மயிலே மயிலே
மயிலின் இறகு
மிகவும் அழகு
கண்ணனின் கேசத்தில்
கந்தனின் காவடியில்
மன்னரின் மணிமுடியில்
அரண்மனை சிவிகையில்
அந்தப்புர விசிறியில்
சின்னஞ் சிறுசுகளின்
புத்தகத்தில்
பொக்கிஷமாய்
இன்னும் எண்ணிலா
அழகு பொருட்களில்
மயிலின் இறகு
மிகவும் அழகு..
வலியப் பிடுங்கிய
வலிக்க பிடுங்கிய..
அழகு
சஞ்சயன் எப்பொழுதுமே கடைசி வரி நிபுணர். மயிலிறகை பற்றி அதன் அழகை பற்றி, அதை எங்கெல்லாம் நாம் காண்கிறோம் என்பதை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறார். கடைசியில் ஒரே அடி. நெத்தியடி. மயிலின் உடலில் இருந்து பலவந்தமாக பிடுங்கப் பட்டது அது. அதன் உடல் வலிக்க வலிக்க பிடுங்கப்பட்டது அது. அதன் வலியை பற்றி நினைக்காமல் நாம் மயிலிறகின் அழகை ரசிக்கிறோம் என்பதை நமக்கு வலிக்கும்படி சுட்டிக் காட்டுகிறார். இதைத் தவிர நான் வியப்புடன் ரசித்த இன்னும் இரண்டு கவிதைகளிப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். “சாத்திரம் ஏதுக்கடி” யில் தன்னை மிக மோசமாக நடத்திய கணவன் இறந்ததும் தான் துன்பத்திலிருந்து விடுதலையான மகிழ்வை, நிம்மதியை அனுபவிக்க விடாமல் தன்னிடம் சோகத்தை எதிர்பார்க்கும் சமுதாயத்தை சாடியிருக்கிறார் சப்தமில்லாமல் சஞ்சயன் தனது இயல்புபடி. ஆணாதிக்க உலகில் என்னுடைய சில தோழர்களைப் போல பெண்ணின் பக்கம் நின்று சிந்திக்கக் கூடிய ஆணை கண்டு மகிழ்வடைந்தேன். “காதலும் கடந்து போகுமோ”வில் மருமகளின் புரிந்துணர்வை கண்டு ரசித்தேன். அந்த புரிந்துணர்வு சஞ்சயனுக்கும் இருப்பதை இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் நமக்கு உணர்த்துகிறது. நீங்களும் அதை வாசித்துணருங்கள்.
மிக அருமையான தொகுப்பை தந்த கவிஞர் சஞ்சயனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
(தரிசனம் (கவிதைகள்) – குவிகம் பதிப்பகம், அடுக்ககம் எண். 1, மூன்றாவது மாடி, 99 சௌபாக்கிய காலனி, அண்ணா பிரதான சாலை, கே.கே. நகர், சென்னை 600 078)
